Last Updated : 11 Mar, 2014 05:31 PM

 

Published : 11 Mar 2014 05:31 PM
Last Updated : 11 Mar 2014 05:31 PM

லைகர்: பரிதாபத்துக்குரிய பேருயிர்

வெவ்வேறு பேரினங்களைச் சேர்ந்த தாவரங்களைக் கலப்பினம் (Hybrid) செய்வதன் மூலம் புதிய வகை தாவரங்களை உருவாக்குவது போல விலங்குகளிலும் கலப்பினம் மூலம் முற்றிலும் புதிய வகை விலங்குகள் உருவாக்கப்படுகின்றன.ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் இடையில் கலப்பின முறை மூலம் உருவாக்கப்படும் விலங்கான லைகர் (Liger, தமிழில் சிங்கப்புலி) ஓர் உதாரணம்.

சுமார் 12 அடி நீளம், 400 கிலோவுக்கும் அதிகமான எடை என்று பிரம்மாண்ட உருவில் நிற்கும் லைகர் தன்னை வளர்ப்பவரை ஒரு குழந்தையைப் போலக் கொஞ்சுகிறது. பெண் சிங்கமா அல்லது உடலில் கோடுகள் இல்லாத புலியா என்று குழப்பம் தரும் தோற்றம் கொண்ட அந்த விலங்கு, கூட்டாக வாழும் சிங்கத்தின் குணத்தையும் நீச்சல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தும் புலியின் குணத்தையும் கொண்டது.

இதுபோல் இன்னும் சில கலப்பினங்கள் உண்டு. ஆண் புலிக்கும் பெண் சிங்கத்துக்கும் பிறக்கும் விலங்கு டைகான் (Tigon) எனப்படுகிறது. இதுவும் லைகர் போலவே அசுர வளர்ச்சி கொண்ட விலங்குதான். ஆண் சிங்கத்துக்கும் பெண் டைகானுக்கும் இடையில் கலப்பினம் மூலம் உருவாக்கப்பட்ட இன்னொரு விலங்கு லைட்டிகான் (Litigon) எனப்படுகிறது. மனிதனின் படைப்பூக்கத்துக்கு அளவேது?

சில சர்க்கஸ் நிறுவனங்கள், தனியார் வனவிலங்கு பூங்கா உரிமையாளர்களால் இயற்கைக்கு மாறாக உருவாக்கப்படும் இதுபோன்ற விலங்குகள் உண்மையில் மகிழ்ச்சியாக வாழமுடியுமா? நிச்சயம் இல்லை என்பதுதான், ஒரே பதில்.

காரணம், இது போன்ற விலங்குகளுக்கு என்று தனியே ஒரு குணம் இல்லை என்பதால், இவற்றின் வாழ்க்கைமுறை மிகவும் சிக்கலானதாகி விடுகிறது. தவிர இந்த விலங்குகளுக்கு ஹார்மோன் பிரச்சினைகள், புற்றுநோய், மூட்டு வீக்கம் போன்ற பாதிப்புகளை கலப்பினத்தின் பாதக அம்சங்கள் இலவச இணைப்பாக அளித்து விடுகின்றன.

கலப்பின உயிரினம் என்பதால் இவற்றுக்குச் சத்தான உணவுகள் அளிக்கப்பட வேண்டியது அவசியம். ஆனால், இவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துப் பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்ட நிறுவனங்களும் தனிநபர்களும், அதன் உணவு முறையில் அக்கறை காட்டுவதில்லை. இதனாலேயே இந்த விலங்குகள் சில ஆண்டுகளிலேயே பரிதாபமாக இறந்துவிடுகின்றன. அல்லது கடுமையான உடல் பாதிப்புகளால் அவதியுறுகின்றன.

மேலும், இந்த விலங்குகளை வயிற்றில் சுமக்கும் தாய் விலங்குகளும் பெரும் துயரத்தை அனுபவிக்கின்றன. லைகர் போன்ற விலங்குகள் பிறக்கும்போதே அளவில் பெரியதாக இருக்கும். இதனால் அதைப் பிரசவிக்கும் தாய்ப் புலி, பிரசவத்தின்போதே பெரும்பாலும் இறந்துவிடும். பெரும்பாலும் சிசேரியன் மூலம்தான் லைகர்கள் பிறக்கின்றன என்று விலங்குநல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

லைகரின் வளர்ச்சி காலம், அதாவது முழுவளர்ச்சிக்கான காலம் புலி அல்லது சிங்கத்தின் வளர்ச்சி காலத்தைவிட மிகவும் நீண்டது. இதனாலேயே, வாழ்நாள் முழுதும் லைகர் வளர்ந்துகொண்டே இருக்கும் என்று சிலர் கருதுவதுண்டு.

தங்களால் சமாளிக்க முடியாத அளவுக்குப் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் லைகர்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அங்கீகாரம் பெற்ற விலங்குக் காப்பகங்களில் ஒப்படைக்கிறார்கள். சிலர் யாருக்கும் தெரியாமல் பரிதாபத்துக்குரிய அந்த விலங்குகளைக் கொன்றுவிடுவதும் நடக்கிறது.

விலங்குகளை வேடிக்கைப் பொருட்களாகவே பார்த்துப் பழக்கப்பட்டுவிட்ட மனிதர்களும், தவறான இந்த எண்ணத்தை மூலதனமாக்கிக் காசு பார்க்கும் பேராசைக்காரர்களும் பூவுலக ‘நான் கடவுள்’களாக மாறி, இதுபோன்ற விலங்குகளை உருவாக்குகின்றனர். அவை படும் அவஸ்தை பற்றி யாருக்குக் கவலை?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x