உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?

உண்டி கொடுத்தோம், உயிர் கொடுத்தோமா?
Updated on
3 min read

காரில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். மேற்குத் தொடர்ச்சி மலை அல்லது தமிழகத்தின் ஏதோ ஒரு காட்டுப் பாதையில் கார் வளைந்து நெளிந்து சென்றுகொண்டிருக்கிறது. மரத்தின் மேலும், சாலையின் ஓரத்திலும் நின்றுகொண்டிருக்கும் குரங்குக் கூட்டம் சட்டென்று நம் கவனத்தை ஈர்க்கிறது.

மரத்தில் இருக்கும் பூக்களையும், கனிகளையும் அவை அமைதியாகத் தின்று கொண்டிருக்கின்றன. அதை கண்டதும் நம்மையும் அறியாமல் முகத்தில் புன்னகை படர்கிறது.

சட்டென்று காரை நிறுத்தி கையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, குரங்குக் கூட்டத்தை நோக்கி வீசி எறிகிறோம். அதுவரை மரத்தில் இருந்த பூக்களையும், கனிகளையும், பூச்சிகளையும் அமைதியாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்த குரங்குகள், விட்டெறியப்பட்ட பிஸ்கெட்டுகளை எடுத்துத் தின்ன ஆரம்பிக்கின்றன.

பிஸ்கெட்டை எடுத்துத் தின்பதில் அவற்றுக்கிடையே போட்டி ஏற்பட்டு, கோபத்தில் ஒன்றையொன்று கடித்துத் துரத்துகின்றன. அந்த இடத்தின் அமைதியும், மரத்தில் இயற்கையான உணவைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அக்குரங்கு கூட்டத்தினிடையே நிலவிய அமைதியும் ஒரே நேரத்தில் குலைந்து போகின்றன.

அவை அடித்துக்கொள்வதைப் பார்த்து நம் மனதில் குதூகலம். மற்றொருபுறம் பல குரங்குகளின் பசியைப் போக்கிய நிம்மதியுடன், அந்த இடத்தைவிட்டு அகல்கிறோம்.

நேர் முரண்கள்

போகும் வழியில் சாலையோரத்தில் "குரங்குகளுக்கு உணவு தர வேண்டாம்" எனக் கொட்டை எழுத்தில் வனத்துறை ஒரு போர்டை வைத்திருக்கிறது. அதை நாம் கவனிக்கவில்லை. உடன் வந்தவர் அதைப் பார்க்கிறார். ஆனால் அவருக்கு அது புரியவில்லை, ஏன் இப்படிச் சம்பந்தமில்லாமல் அறிவித்திருக்கிறார்கள் என்று.

நாம் இதுவரை உணராத விஷயம் ஒன்று இருக்கிறது. அவ்வப்போது சாலையில் வேகமாகச் சீறிச்செல்லும் வாகனங்களின் சக்கரங்களில் அரைபட்டு இதே குரங்குக் கூட்டத்தின் சில உறுப்பினர்கள் செத்து போனதும், நம்மைப் போன்ற மனிதர்களால்தான். இப்படி அந்தக் குரங்குகளின் இயல்பு வாழ்க்கை பல வகைகளில், மனிதர்களால் சீர்குலைக்கப்படுகிறது.

குழப்பமும் நோய்களும்

மற்றொரு புறம் குரங்குகளுக்கு உணவளிப்பது அவற்றின் உடல்நிலையைப் பாதிக்கும், அவற்றின் குடும்பத்தினுள் (குரங்குகள் கூட்டமாக, அதாவது குடும்பமாக வாழும் தன்மை கொண்டவை) குழப்பத்தையும், சண்டையையும் விளைவிக்கும்.

அவற்றின் சமூக வாழ்வு பாதிக்கப்படும். நாம் கொடுக்கும் உணவால் அவற்றுக்குப் பல நோய்கள் வரலாம். இயற்கையான சூழலில், இயற்கையான உணவைச் சாப்பிடுவதே குரங்குகளுக்கு நல்லது, அதைப் பார்த்து மகிழும் நமக்கும் நல்லது.

குரங்குகளுக்கு உணவளிப்பதாலும், தின்பண்டங்களைக் கண்ட இடத்தில் வீசி எறிவதாலும், மூடி வைக்கப்படாத குப்பைத்தொட்டிகளாலும்தான் குரங்குகளால் நமக்குத் தொந்தரவு ஏற்படுகிறது.

யார் மீது தவறு?

குரங்குகளுக்கு ஒரு முறை நாம் சாப்பிடும் உணவைக் கொடுத்துப் பழகிவிட்டால், பல்வேறு சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட அதே வகை உணவையே அவை மீண்டும் உண்ண விரும்புகின்றன.

இதனால் காட்டுக்குள் சென்று உணவு தேடாமல் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் இடங்களிலுமே தங்கிவிடுகின்றன. ஊருக்குள் புகுந்து கோயில்களிலும், வீட்டிலும், கடைகளிலும் உள்ள தின்பண்டங்களை நமக்குத் தெரியாமலோ, நம் கைகளிலிருந்து பிடுங்கியோ எடுத்துச் செல்கின்றன.

தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்த தவறுகளால் குரங்குகளும் பாதிக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களிலும் ஊருக்குள்ளும் நமக்குத் தொந்தரவு ஏற்படுத்தும் உயிரினங்களாக மாறுகின்றன. இப்படித் தொந்தரவு தரும் குரங்குகள் உருவாகக் காரணமாக இருப்பதே நாம்தான். ஆனால், தொந்தரவு அதிகரிக்க ஆரம்பித்தவுடன், அவற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் இறங்குகிறோம்.

கட்டுப்படுத்த வேண்டியது குரங்குகளை அல்ல, குரங்குகளுக்கு நன்மை செய்கிறோம் என்று தவறாக நம்பி அவற்றுக்கு உணவளிப்பவர்களையும், பொறுப்பற்ற சில சுற்றுலாப் பயணிகளின் நடவடிக்கைகளையும்தான்.

என்ன பிரச்சினை?

சில இடங்களில் தொந்தரவு செய்வதாகக் கருதப்படும் குரங்குக் கூட்டங்களைப் பிடித்து வேறு இடங்களுக்குச் சென்று விட்டுவிடும் பழக்கம், நம் நாட்டில் இருந்து வருகிறது. இதனால் பிரச்சினை தீர்வதில்லை.

கொண்டு சென்று விடப்பட்ட புதிய இடத்துக்கு அருகிலுள்ள மனிதக் குடியிருப்புகளுக்கு மீண்டும் வந்து, அவை தொந்தரவு தரும். இதில் பிரச்சினைக்குக் காரணமாக இருக்கும் விஷயத்துக்கு முடிவு கட்டாமல், பிரச்சினையை ஓரிடத்திலிருந்து வேறோர் இடத்துக்கு மாற்ற மட்டுமே செய்கிறோம்.

இடமாற்றம் செய்வதற்காகக் குரங்குகளைப் பிடிக்கும்போது பலத்த காயம் ஏற்படவும், சில இறந்துபோகவும் நேரிடுகின்றது. ஒரு குரங்குக் கூட்டத்தை ஓரிடத்திலிருந்து பிடித்துச் சென்றுவிட்டால் அவை இருந்த இடத்தில், வேறோர் குரங்குக் கூட்டம், இடத்தைப் பிடித்துக்கொள்ளும்.

நகரத்தில் வெகுநாட்களாக வாழ்ந்து வரும் குரங்குக் கூட்டத்தைப் பிடித்து அருகிலுள்ள காட்டு பகுதியில் விடுவதால், அந்தக் குரங்குக் கூட்டத்தில் உள்ள நோய்கள் காட்டில் உள்ள உயிரினங்களுக்கும் பரவும் ஆபத்து உள்ளது.

மேலும், காட்டுப்பகுதியில் ஏற்கெனவே வசித்துவரும் குரங்குகளுடன் இடத்தைப் பெறுவதற்காகச் சண்டை ஏற்பட்டுப் பல உயிரிழக்கவும் நேர்கிறது.

உணவளிக்காமல் இருப்பதே தீர்வு

நகரத்தில் வாழும் பெண் குரங்குகளுக்குக் கருத்தடை அறுவைசிகிச்சை செய்து அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் சில இடங்களில் நடந்துள்ளன. ஆனால் அதைச் செய்வதற்கு அதிகச் செலவும், தகுந்த பயிற்சி பெற்ற நிபுணர்களும் அவசியம். என்றாலும்கூட, இது நீண்ட காலத் தீர்வாகாது.

உங்களுக்குக் குரங்குகளைப் பார்க்கப் பிடிக்கும் என்றால், அவற்றைப் பார்த்து ரசியுங்கள். அவற்றுக்கு உணவளிக்க வேண்டாம். ஒருவேளை யாரேனும் அப்படி உணவளிப்பதைப் பார்த்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளை அவர்களிடம் பொறுமையாக எடுத்துச் சொல்லுங்கள். குரங்குகளைப் பொறுத்தவரை உண்டி கொடுப்பது, அவற்றுக்கு உயிர் கொடுப்பது ஆகாது.

கட்டுரையாளர், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: jegan@ncf-india.org

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in