

தமிழ்நாட்டில் காணப்படும் ஓடோன்டோ (Odontotermes obesus) என்ற வகைக் கரையான் புற்றுகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சியில் பகலில் கரியவளியின் (Carbon dioxide) அளவு கூடுதலாகவும், இரவில் குறைவாகவும் இருந்தது. (ஏனெனில் மண்ணுக்குள் பகலில் வெப்பம் குறைவு, இரவில் அதிகம்). காற்றின் திசைவேகம்கூடச் சீராக இருப்பதைக் கண்டறிந்தார்கள்.
மண் வளத்தில் கரையான்கள் மகத்தான பணியைச் செய்கின்றன. இவை இறந்த உடலங்களையே உண்கின்றன. குறிப்பாகப் பட்டுப்போன மரக்கட்டைகள், குச்சிகள், இலைகள் போன்றவற்றைக் கடித்துச் சிதைத்து உண்கின்றன.
இவை உயிருள்ள செடிகளை, மரத்தைத் தின்பதில்லை. நாம் தவறாகப் புரிந்துகொண்டு கரையான்களை எதிரிகளாகப் பார்க்கிறோம். குறிப்பாக, நுண்ணுயிரிகளால் உடனடியாகக் சிதைக்க முடியாத செல்லுலோஸ் எனப்படும் சக்கைகளைக் கடித்துக் குதறிப் பதமாக மாற்றி நுண்ணுயிர்கள், மண்புழுக்கள் போன்றவற்றிற்குத் தின்னக் கொடுக்கின்றன.
கொஞ்சம் மட்கும் கழிவு, கொஞ்சம் ஈரம் இருந்தால் போதும் இவை சிதைப்பதில் ‘மண்ணாத’ மன்னர்கள். கரையான்களின் உள்வாய்ப்பகுதியில் நிறைய சிதைக்கும் தன்மையுள்ள கரைப்பான்களும் நுண்ணிய உயிரிகளும் உள்ளன. அவை இலகுவாகக் கடினமான கட்டைகளையும் சிதைத்து மட்கச் செய்கின்றன. இந்தச் சிதைவுகள் மண்ணில் சேரும்போது மண்ணின் வேதித் தன்மை சிறப்புப் பெறுகிறது.
குறிப்பாக, மண்ணில் உயிர்மக் கரிமம் அதிகரிக்கிறது. மண்ணின் ஈரம் பிடிக்கும் திறன் உயர்கிறது. இவை துளைப்பதாலும் மண்ணை நுட்பமாக உழுவதுபோல நகரச் செய்வதாலும் மண்ணின் இயற்பியல் தன்மையையும் சிறப்புறுகிறது.
இந்தக் கழிவுகளை உண்ட வேறு உயிர்கள் மண்ணில் பெருகுகின்றன. இப்படியாக மண்ணின் வேதித் தன்மை, இயற்பியல் தன்மை, உயிரியத் தன்மை ஆகிய மூன்றும் சிறப்பாக மாறுகின்றன. மாண்டோ என்ற ஆராய்ச்சியாளர் அரைப்பாலை நிலப்பகுதிகளின் கரையான்கள் மண்வளத்தில் குறிப்பான பங்கை ஆற்றுகின்றன என்று விளக்கியுள்ளார். பர்கினோஃபாசோவில் அவரது குழு நடத்திய ஆராய்ச்சிகளில், மண்வளத்தில் கரையான்களின் பங்கை விவரித்துள்ளார் (Dr. Mando in Burkina Faso).
நமது முன்னோர்கள் மண்வளம் காக்கக் கருதி கரையான் புற்றுகளில் இருந்து மண்ணை எடுத்துக்கொண்டுவந்து நிலத்தில் போடுவார்கள். இதன்மூலம் மண் வளம் பெருகும் என்பது அவர்களின் அனுபவப் பாடம். வில்லியம், விகின்ஸ் ஆகிய ஆய்வாளர்கள் இருவர் மேற்கொண்ட சோதனையில் கரையான் புற்று மண்ணில் பக்கத்தில் இருக்கும் மண்ணைவிட அதிக அளவு உயிர்மக் கரிமமும் நைட்ரஜனும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளனர்.
மணற்பாங்கு நிலங்களில் கரையான் புற்றின் மண் மிகச் சிறந்த பயனைத் தருகிறது. அதாவது நீர்ப்பிடிப்புத் தன்மையைக் அதிகரிக்கிறது. தாய்லாந்து போன்ற நாடுகளில் வணிகரீதியில் கரையான் புற்று மண்ணை நிலங்களுக்குக் கொண்டு சேர்க்கின்றனர்.
கரையான்களின் பல வகை உள்ளன. சில மரங்களில் வாழ்பவை. நன்கு காய்ந்த மரத்தை உண்பவை, இறந்தபின் மழையில் நனைந்த ஈர மரத்தைச் சிதைப்பவை என்று சில பிரிவுகள் உள்ளன.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com