தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 99: இயற்கை வேளாண்மை என்னும் மெய்யியல்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 99: இயற்கை வேளாண்மை என்னும் மெய்யியல்
Updated on
2 min read

இயற்கைவழி வேளாண்மையில் எண்ணற்ற தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால், இது முழுவதுமாகப் பணம், வருவாய்ப் பெருக்கம் என்ற அளவில் மட்டுமாக இருக்குமேயானால் அதற்கு முழுமையான பயன் ஏதும் கிடைக்காது. இயற்கை வேளாண்மை என்ற கருத்தியல் என்பது என்னைப் பொறுத்த அளவில், அது  மெய்யியல் ஆக இருக்க வேண்டும். இது ஒரு வகையில் தொழில்நுட்பமாக இருப்பினும் இது ஒரு கலையாகவும் உள்ளது. தனித்தன்மை கொண்டும் விளங்குகிறது.

ஓர் ஓவியரைப் போல, இசைக் கலைஞரைப் போல, ஒரு படைப்பாளியாக, உழவர்கள் இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் கவிதை எழுதுகிறான், ஓர் உழவனோ, கவிஞனாகவே வாழ்கிறான். அது மட்டுமல்ல; அது ஓர் அரசியலாக, பொருளாதாரமாக, பண்பாடாகவும் உள்ளது. ஆகவே, இது ஒரு வாழ்க்கை முறை என்றும் கூற முடியும்.

இந்த வாழ்க்கை முறையின் சாரமாக அதாவது மெய்யிலாக இயற்கை வேளாண்மை பார்க்கப்பட வேண்டும். சங்க இலக்கியங்களின் ஊடாகவும் திருக்குறளின் ஊடாகவும் இந்த மெய்யியலை நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். உலகின்   பல்வேறு அறிஞர்கள் இன்றைய இயற்கையைக் கொள்ளையிடும் போக்குக்கு எதிராக, நீடித்த உலகை உருவாக்க வேண்டும் என்று கூறும்போது, நமது பண்டை இலக்கியங்கள் வலியுறுத்தும் ஒரு கோட்பாட்டுக்கே வருகின்றனர். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’, ‘பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்’, ‘உணவெனப்படுவது நிலத்தொடு நீரே’ என்று இயற்கைக் காப்பு, பகிர்வு, சமத்துவம் போன்ற நுட்பமான உள்ளீடுகளை வலியுறுத்துவதாக இந்தக் கோட்டாடுகள் உள்ளன.

ஒருபுறம் நுகர்வுவெறி, மறுபுறம் இயற்கை ஆதாரங்களின் மீதான கொள்ளை, இவற்றை நியாயப்படுத்தும் போக்கு ஆகிய மாற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இவற்றை அரசு மட்டுமல்லாது மக்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்கான பரப்புரைகள் நடைபெறுகின்றன.

எல்லையற்றுச் சுரண்டுவதற்கு இந்த இயற்கை யாரையும் அனுமதிக்காது. மனிதன் இயற்கையின் ஒரு கூறுதான். உணவு வலையில் ஒரு கண்ணிதான். அனைத்து உயிர்களும் இந்த மண்ணில் வாழும் உரிமை கொண்டவைதாம். ஒரு பழங்குடி வேட்டைக்குச் செல்லும்போது கொழுத்த மானைக் கொன்று உண்ண முனைவாரே தவிர, பிறந்த குட்டியைக் கொல்லும் எண்ணம் கொண்டிருப்பதில்லை.

கிழங்கு அகழும்போதுகூட அந்தப் பழங்குடிப் பெண் இரண்டு கிழங்குகளை விட்டுவிட்டு அடுத்த கொடியை நாடிச் செல்வார். புலிகள்கூட உணவுக்காக மானினம் முழுவதையும் தின்று தீர்ப்பதில்லை. உணவுக்காக மட்டும் வேட்டையாடுகிறது. எல்லாவற்றுக்கும் ஓர் அறம்

உள்ளது. அந்த அறம் இந்த உலகம் நீடித்து இயங்க உதவி செய்வதாக உள்ளது. ‘வளர்ச்சி’ பெற்ற மானுட அறம் மட்டும், இதற்கு மாற்றாக உள்ளது.

எனவே, இயற்கை வேளாண்மை என்ற மெய்யியல் கூறும் அறம் உலகைப் பேணுதல், உயிர்களைப் பேணுதல், நீடித்த வளர்ச்சி என்பதாக உள்ளது. இன்னும் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தற்சார்பும் உயிர்ம நேயமும் இயற்கை வேளாண்மையின் இரு கண்கள். போட்டிக்கு மாற்றாக ஒத்துழைப்பு, அதிகாரத்துக்கு மாற்றாக அன்பு, குவியலுக்கு மாற்றாகப் பரவலாக்கம், ஒற்றைத்தனத்துக்கு மாற்றாகப் பன்மயம், ஆடம்பரத்திற்கு மாற்றாக எளிமை போன்ற தூண்களின் மீது இயற்கை வேளாண்மை என்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை விரிவுபடுத்தி எல்லாரும் எல்லாமும் எப்போதும் பெறுமாறு செய்திட வேண்டும்.

இயற்கை வேளாண்மை குறித்து பல வாரங்களாக நாம் பார்த்து வந்துள்ளோம். இன்னும் பகிர்ந்துகொள்ள ஏராளம் இருப்பினும் முடிந்த அளவு இயற்கை வேளாண்மை குறித்த பல கோணங்களை நாம் பார்த்துள்ளோம். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளின் தொடர்ந்து பகிர்ந்துகொள்வோம்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in