

ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள்… இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் இயற்கைச் சொத்துகளில் ஒன்று! இந்த இரண்டு நாடுகளில் மட்டும்தான் இந்தக் காண்டாமிருகங்கள் உள்ளன. மொத்த எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம். அதில் சுமார் ஆயிரத்து 600 காண்டாமிருகங்கள் இந்தியாவின் காஸிரங்கா தேசியப் பூங்காவிலும், நேபாளத்தின் சித்வான் தேசியப் பூங்காவிலும் இருக்கின்றன.
ஆசியாவில், யானைக்கு அடுத்து, இரண்டாவது மிகப்பெரிய பாலூட்டி இனம் இது. இவற்றின் கொம்பு, 20 முதல் 60 சென்டிமீட்டர் வரை இருக்கும். ஒரு மணி நேரத்துக்குச் சுமார் 50 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. நீர் நிலைகளில் உள்ள தாவரங்கள்தாம் இவற்றின் முக்கிய உணவு. எனவே, நதிக்குப் பக்கத்தில் உள்ள ஆற்றுப் படுகைகள்தாம் இவற்றுக்கான பொருத்தமான வாழிடம். அதனால்தான் பிரம்மபுத்திரா நதிப் படுகைப் பகுதியில் அமைந்திருக்கும் காஸிரங்காவில் இவை அதிக அளவில் தென்படுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரே ஒரு குட்டிதான் ஈணும். இவற்றின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சுமார் 10 வகையாகக் குரல் எழுப்பும் தன்மை கொண்ட இவை, தனிமை விரும்பிகள். இவற்றுக்கு அதிக அளவில் மோப்ப சக்தி உண்டு. உடலிலிருந்து வெளிப்படும் வாசனையை வைத்துத்தான், காண்டாமிருகங்கள் இணை சேரும்.
2011-ல், இவற்றைப் படம் எடுப்பதற்காக முதன்முதலாக காஸிரங்காவுக்குச் சென்றிருந்தேன். நாட்டிலிருக்கும் தேசியப் பூங்காக்களிலேயே கார்பெட் தேசியப் பூங்காவுக்கு அடுத்து, நன்கு பராமரிக்கப்படும் தேசியப் பூங்கா காஸிரங்காதான்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் அங்கே சென்றிருந்தேன். பொதுவாக, குட்டியுடன் இருக்கும் தாய் காண்டாமிருகங்கள் அவ்வளவாக வெளியே வராது. ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் சென்றிருந்தபோது, தாய் காண்டாமிருகம் ஒன்று இரை தேட, தன் குட்டியுடன் வந்தது. அப்போது எடுத்த படங்கள்தாம் இவை.
கொம்புகளுக்காக இவை கள்ள வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்துவருகிறது!
கட்டுரையாளர்,காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: rrathika@gmail.com