

சர்வதேச பாறுக் கழுகுகள் விழிப்புணர்வு நாள் செப்டம்பர்:1
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை ‘சர்வதேச பாறுக் கழுகுகள் விழிப்புணர்வு நாள்’ 2009 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, செப்டம்பர் 1-ம் தேதி இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பறவை நோக்கல் நிகழ்வுக்காகச் சமீபத்தில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனசரகத்துக்குப் போயிருந்தோம். அப்போது, இந்திய அளவில் குறிப்பாக தமிழகத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் கருங்கழுத்துப் பாறு (Indian Vulture) மூன்றும், வெண்முதுகுப் பாறு (White rumped Vulture) எட்டும், ஒரே கானகப் பகுதியில் பறப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தோம்.
அழியும் தமிழகக் கழுகுகள்
பிணந்தின்னிக் கழுகு (Vulture) என்றழைக்கப்படும் பாறுக் கழுகுகள், கடந்த 30 ஆண்டுகளில் மிக வேகமாக அழிந்து வரும் இனமாக அறியப்பட்டு, இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேசச் சங்கம் (ஐ.யு.சி.என்) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகில் 23 வகையான பாறுக் கழுகுகளில் (vulture) 16 வகை தொல் உலகக் கண்டங்களான (Old World) ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியக் கண்டங்களில் காணப்படுகின்றன.
இந்தியாவின் 9 வகை பாறுக் கழுகுகளில், தமிழகத்தில் மட்டும் வெண்முதுகுப் பாறுக் கழுகு (White rumped vulture), செந்தலைப் பாறுக் கழுகு (Red headed vulture), கருங்கழுத்துப் பாறுக் கழுகு (Indian Vulture) மற்றும் மஞ்சள்முகப் பாறுக் கழுகு (Egyptian Vulture) என 4 வகை பாறுக் கழுகுகள் தென்படுகின்றன.
இவற்றில், கருங்கழுத்து, செந்தலை, வெண்முதுகுப் பாறுக் கழுகுகள், ஆகியவை அற்றுப் போகும் தறுவாயில் (Critically Endangered) உள்ளதாக ஐ.யு.சி.என்., அமைப்பால் சிவப்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
கீழிறங்கிய பாறுகளின் எண்ணிக்கை
உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் உயிரினங்களில் பாறுக் கழுகுகளுக்கு (Vulture) தனிச் சிறப்பிடம் உண்டு. இறந்த விலங்குகளைத் தின்று, சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தும் துப்புரவளராக கானக உயிர்களுக்கு நுண்ணுயிர்த் தொற்று ஏற்படாமல், சூழல் சமநிலையைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுவதுடன், ஆதார உயிரினமாகவும் (Keystone Species) இருக்கிறது. பாறுக் கழுகுகள் அதிக எண்ணிக்கையில் வாழும் இடம், சூழல் மேம்பாட்டில் முக்கியத்துவம் பெற்று வளமான இயற்கைப் பகுதிகளைக் கொண்டிருப்பதுடன், உயிரினப் பன்மையும் சிறப்பாக அமையப் பெற்றிருக்கும்.
1991 -92-ல் மேற்கொள்ளப்பட்ட பாறுக் கழுகுகள் கணக்கெடுப்பின்படி, இந்தியா மற்றும் நேபாளத்தில் மட்டும் சுமார் நான்கு கோடி பாறுக் கழுகுகள் இருந்ததாகவும், 1992 முதல் 2007 வரை அவற்றில் ஏறக்குறைய 99 சதவீதம் அழிந்துவிட்டதாகவும் ‘பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழக’ (பி.என்.எச்.எஸ்) முதன்மை உயிரியலாளர் விபு பிரகாஷ் குறிப்பிடுகிறார்.
அவர் 1987-1988-ல் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் தேசியப் பூங்காவில் சுமார் 29 சதுர கி.மீ பரப்பளவில் 353 கூடுகளில் பாறுக் கழுகுகள் இணையாக இருப்பதாகப் பதிவு செய்திருக்கிறார். 1992-ம் ஆண்டுக்குப் பிறகு பாறுக் கழுகுகளின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்தது.
அழிவுக்கு வழிகோலிய வலி நிவாரணி
இதற்கு, மனிதர்களால் ஏற்படும் நோய்த்தொற்று, வாழிட அழிப்பு எனப் பல காரணங்கள் இருந்தாலும், முதன்மையான காரணம், கால்நடைகளுக்கு வலி நிவாரணியாகப் பயன்படும் டைக்குளோஃபினாக் (Diclofenac) என்ற மருந்துதான் என்பது தெரிய வந்தது. அமெரிக்காவின் ‘தி பெரிகிரின் ஃபண்ட்’ என்ற அமைப்பின் ஆதரவோடு மறைந்த கால்நடை மருத்துவர் டாக்டர் லிண்ட்ஸே ஓக்ஸ் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம், 2003-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது.
பாறுகளின் அழிவுக்குக் காரணமான ‘டைக்ளோஃபினாக்’ மருந்து, இந்திய அரசால் 2006-ல் தடை செய்யப்பட்டது. தமிழகத்தில், ‘அருளகம்’ அமைப்பின் தொடர் முயற்சியால், 2015-ல் தடை செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல் அரசு கால்நடை மருந்தகங்களில் தடைசெய்யப்பட்ட டைக்ளோஃபினாக் மருந்துக்குப் பதிலாக பாறுக் கழுகுகளுக்குத் தீங்கு பயக்கும் மற்றொரு மருந்தான ‘கீட்டோபுரோஃபேன்’ பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.
வாழ்வு தந்த மாயாறு
40 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில், மாநிலம் முழுவதும் பரவி இருந்த பாறுக் கழுகுகளுக்குத் தற்போது, நீலகிரி மாவட்டம் மாயாறுப் பகுதி மட்டுமே வாழ்விடமாக இருக்கிறது என்கிறார் ‘அருளகம்’ பாரதிதாசன். ஏனென்றால், இங்குதான் கால்நடைகளுக்கு மேற்சொன்ன வலி நிவாரண மருந்துகள் வழங்கப்படுவதில்லை. எங்கு வலி மருந்துகள் பயன்படுத்தப்படாத இரை கிடைக்கிறதோ அங்குதான் பாறுக் கழுகுகள் வாழ முடியும் என்கிறார் அவர்.
டைக்ளோஃபினாக், கீட்டோபுரோஃபேன், அசிக்ளோஃபினாக், புளுனிக்சின், அனால்ஜின், நிமிசுலாய்டே போன்ற மனிதர்களுக்குத் தாராளமாகக் கிடைக்கும் வலி போக்கும் மருந்துகளைக் கால்நடைகளுக்குப் பயன்படுத்தாமல் இருந்தாலே, காட்டுயிர்களைப் பாதுகாக்கும் பங்களிப்பில் நமது சேவையும் இடம்பெற்றிருக்கும். மெலோசிகாம் (Meloxicam) தவிர்த்து மற்ற அனைத்து வலி போக்கும் மருந்துகளும் பாறுக் கழுகுகளுக்கு உயிர்க்கொல்லிதான்.
கால்நடைகளின் வலி போக்குவது முக்கியம்தான். அதே நேரம், பாறுகள் வாழ ‘வழி’யும் தேடுவது நம் கையில்தானே உள்ளது.?
- அம்சா, காட்டுயிர் ஆர்வலர்
தொடர்புக்கு: amaamsa@gmail.com