

தவளைகள், பூமியின் ஆச்சரிய உயிரினங்கள். தவளைக்கும் தேரைக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய பலரும் திணறுவார்கள். சில நேரம் அனுபவம்மிக்க இயற்கையியலாளர்களால்கூட முதல் பார்வையில் வேறுபாட்டை அறிய முடிவதில்லை. அவற்றின் பண்புகள் பலவும் ஒத்திருக்கின்றன. ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால் தேரைகளில் மிதமான நச்சுத்தன்மை கொண்ட உமிழ்நீர்ச் சுரப்பிகள் காணப்படும். இந்தச் சுரப்பி தலையின் பின்புறம் உள்ளது.
பெரும்பாலான தவளைகளும் தேரைகளும் காற்று உட்புகும் திறன் கொண்ட தோல் மூலம் (cutaneous gas exchange) சுவாசிக்கின்றன. அதேநேரம் சுவாசிப்பதற்கு நுரையீரல்களையும் பெற்றுள்ளன. இவை நீருக்கடியில் மூழ்கியிருக்கும் நேரத்திலோ மண்ணுக்குள் புதைந்திருக்கும் நேரத்திலோ தோலின் மூலமாக மட்டுமே சுவாசிக்கின்றன.
தவளைகள், தேரைகள் பழமையான முதுகெலும்புள்ள நீர்நில வாழ்விகள் குழுவைச் சேர்ந்தவை. வெப்பமண்டலங்கள், வறண்ட பகுதிங்களில் உள்ள ஈரப்பதமுடைய வாழிடங்களில் இவை அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் இலையுதிர், பசுமை மாறாக்காடுகளில் தவளைகள் அதிகம் வசிக்கின்றன. சில இனங்கள் மரங்கள், நிலத்துக்கு அடியில், பாறையில், மற்றும் சில புல்வெளிகளில், ஏன் பாலைவனம் போன்ற அசாதாரணமான சூழ்நிலைகளில்கூட சில வகைகள் வாழ்கின்றன.
தவளைகள் சுற்றுச்சூழலுக்கு நன்மைபயக்கும் உயிரினங்கள். அதேநேரம், உலக அளவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்குத் தவளைகள் தற்போது அழியக்கூடிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. வாழிட அழிவு, மனிதச் செயல்பாடுகளால் உருவாகும் மாசால் இவற்றின் சுற்றுச்சூழல் நஞ்சேறி கொண்டிருக்கிறது.
காக்காயம் தவளை
இந்தியாவில் தவளைகள் குறித்த ஆய்வுகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்திருக்கின்றன. காக்காயம் மூங்கில் தவளை மிகவும் சிறியது. சுமார் 2 முதல் 2.5 சென்டிமீட்டர் நீளம் கொண்டது. Raorchestes ochlandrae என்னும் அறிவியல் பெயரில் அறியப்படுகிறது. இவை கேரளத்தின் கோழிக்கோடு மாவட்டத்தின், காக்காயம் என்னும் காட்டு பகுதில் கண்டறியப்பட்டதால் இந்தப் பெயரைப் பெற்றன.
மூங்கில் வளருமிடங்களில் மட்டுமே இவற்றைக் காண முடியும். மற்ற தவளைகளைப் போல, இவை இலைகளில் முட்டைகளை இடுவதில்லை. இவை மூங்கில் இடுக்குகளில் அதிக எண்ணிக்கையில் முட்டைகளை இடுகின்றன.
மழைக் கால மாலை வேளையில் அதிக எண்ணிக்கையில், சப்தமிடும் இந்தத் தவளைக் கூட்டங்களை காணலாம். அழகிய கண்களுடன், முக்கோண வடிவிலான தலைகளைக் கொண்டிருக்கும். தோல் பகுதி உலராமல் இருக்க, அடிக்கடி நீரைத் தேடி செல்கின்றன. ஆறுகளை ஒட்டிய காடுகளில் வளரும் ஓக்லாண்ட்ரா என்ற மூங்கிலைச் சார்ந்தே இந்த தவளைகளின் வாழ்க்கை அமைந்துள்ளது.
கட்டுரையாளர், ஆராய்ச்சி மாணவர்
தொடர்புக்கு: brawinkumarwildlife@gmail.com