Published : 15 Jun 2019 11:23 am

Updated : 15 Jun 2019 11:23 am

 

Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

ஈச்சங் கள் கனவு

சில ஆண்டுகளுக்கு முன் ஆந்திரத்தின் நெல்லூரிலிருந்து கடப்பாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். சாலையோரம் இருக்கும் பனைமரங்களில் கள் இறக்குவதை, அதற்கு முன்பு பயணித்தபோதும் கவனித்திருக்கிறேன்.

இம்முறை பார்த்தபோது ஞெகிழி கேனில் வைத்து ஒரு பெண், கள் விற்றுக்கொண்டிருந்தார். அதை ஒருவர் ஞெகிழிக் குவளையில் வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தார்.


சுமார் 25 ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊரில் கள் குடித்தது உண்டு. அதற்குப்பின் கள்ளின் மணத்தைக்கூட முகரும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது பனங்கள்ளும் தென்னங்கள்ளும் கிடைக்கும்.

கலப்படமில்லாத ஒரே மரத்துக் கள்ளைக் குடித்திருக்கிறேன். என் மாமாவின் தோப்பிலேயே கள் இறக்குவார்கள். வீட்டுப் பெண்களும் அடுப்பங்கரையில் ஒரு லோட்டாவில் வைத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகக் குடிப்பார்கள்.

சிறுவர்களுக்கும்கூட ஒரு டம்ளரில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். ஐயாக்குட்டி மாமா காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் பாட்டில் கள்ளை முழுவதுமாகக் குடிப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.

அன்று நெல்லூரில் கள் விற்பனை செய்வதைப் பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் எல்லாம் கிளர்ந்து வந்தன. ஆனாலும், தெரியாத இடத்தில், குறிப்பாகப் பரிச்சயம் இல்லாத மனிதர்களிடம் கள் வாங்கிக் குடிக்க ஏனோ மனம் வரவில்லை.

ஏணி வைத்து இறக்குதல்

சிறிது தூரம் பயணித்தபின் ஈச்ச மரத்தில் ஒருவர் கள் இறக்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த உடனேயே வண்டியை நிறுத்தச் சொன்னேன். அருகில் சென்று மரத்தின் மேல் இருந்தவரிடம், அவர்கள் இறக்குவதை ஒளிப்படம் எடுத்துக்கொள்ளட்டுமா என்று கேட்டேன். புன்னகைத்தபடியே, “தீஸ்கோ” என்றார்.

ஈச்ச மரம் அப்படி ஒன்றும் உயரமில்லை என்றாலும், அதில் அவர் ஏணி வைத்துத்தான் ஏறி இருந்தார். பாதுகாப்புக்காக, ஒரு வடத்தால் மரத்தோடு தன்னைச் சேர்த்து சுற்றிக்கொண்டு, உச்சிப்படியில் நின்றுகொண்டிருந்தார். மரத்தில் இருந்த பானையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு நீளமானது. அதைப் பிடித்து மெல்லமாகவும் பத்திரமாகவும் பானையை கீழே இறக்கித் தரையில் வைத்தார்.

பனை, தென்னை போலல்லாமல் நன்கு வளர்ந்த ஈச்ச மரத்தில், மட்டையின் அடிப்புறம் தண்டோடு ஒட்டியிருக்கும். அந்த மட்டைகள் மரத்தின் அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை செதில் செதிலாக அமைந்திருப்பதால், மார்போடு சேர்த்து அணைத்து மரத்தில் ஏற முடியாது. அதனால் ஈச்ச மரத்தில் கள் எடுக்க, ஏணி வைத்துத்தான் ஏற வேண்டும்.

பெயர் தேடிய கதை

பனை, தென்னையில்கள் எடுப்போர் மரமேறும் விதமே அலாதியானது. சிறு வயதில் அக்காட்சியை வாய் பிளந்து பார்த்தது உண்டு. வட்டமான கயிற்றை (தலவடை) கால்களைச் சுற்றி இறுக்கிக்கொண்டு மரமேறுவார்கள். இடுப்பில் தென்னம்பாளையிலான ஒரு கூடை இருக்கும். அதில் அரிவாள், உளி முதலியவற்றை வைத்துக்கொண்டு மேலே ஏறுவார்கள். இக்கூடையின் வடிவம் வித்தியாசமானது.

அடிப்பாகத்தில் இரண்டு கூரிய முனைகளைக் கொண்டிருக்கும் (தென்னம்பாளையின் கூர்மையான முனைப் பகுதி), மேலே வட்ட வடிவில் இருக்கும். இதைத் தலையில் கவிழ்த்துக்கொண்டால் ’பேட்மேனி’ன் தலைக் கவசத்தைப் போன்றிருக்கும். அதைத் தொட்டுப் பார்க்கவும், எனக்கே சொந்தமாக ஒன்றை வைத்துக்கொள்ளவும் சிறு வயதில் ஆசைப்பட்டது உண்டு; கேலி செய்வார்களோ என்று நினைத்து யாரிடமும் சொன்னதில்லை.

ஈச்சங்-கள்-கனவு

ஆனால், அதன் பெயர் தெரியவில்லை. கிராமத்தில் உள்ள ஐயாப்பிள்ளை மாமாவுக்கு கைபேசியில் அழைத்துக் கேட்டேன். சிறிது யோசித்துவிட்டு, உடனே ஞாபகத்துக்கு வரவில்லை என்பதால், மறுநாள் சொல்வதாக உறுதியளித்தார்.

தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டும் விடை தெரியாமல் யோசித்துக்கொண்டிருந்த நேரத்தில், பெருமாள் முருகன் எழுதிய ’ஆளண்டாப் பட்சி’ நாவல் நினைவுக்கு வந்தது. அதில் ஒரு அத்தியாயம் முழுக்கக் கள் பற்றியும் அதை இறக்குவதைப் பற்றியும் விவரிக்கப்பட்டிருக்கும். புரட்டிப் பார்த்தபோது அதிலும் விடை கிடைக்கவில்லை.

அதன் பெயர் அருவாப்பொட்டி என்று மறுநாள் கைபேசியில் அழைத்து அம்மா சொன்னார். நான் கேட்டதிலிருந்து மாமாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றும் சைக்கிளை எடுத்துக்கொண்டு இலுப்பூருக்குச் சென்று, அங்கிருந்த நாடாரிடம் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு அம்மாவிடம் பேசி, என்னிடம் தெரிவிக்குமாறு சொன்னதாகவும் அம்மா கூறினார். ஆ. சிவசுப்பிரமணியன் எழுதிய ’பனை மரமே! பனை மரமே!’ நூலில் படம், விளக்கத்துடன் அரிவாள் பெட்டி ஆவணப்படுத்தப்பட்டிருப்பதைப் கண்டு மகிழ்ந்தேன்.

துவர்ப்பும் இனிப்பும்

ஈச்ச மரம் பொதுவாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இருக்கும். எங்கள் கிராமத்துக்குப் போகும் வழியில் ஒரு ஈச்ச மரம் வயல் வரப்பில் வளர்ந்திருந்தது. சிறு வயதிலிருந்து நான் பார்த்துக்கொண்டிருக்கும் மரம் அது.

ஒரு முறை தூக்கணாங்குருவிகள் அதில் கூடு கட்டியிருந்தன. வயலோரம் இருந்த வாய்க்காலில் நீர் வற்றிப் போனபின், அந்தக் கூடுகளும் காணாமல் போய்விட்டன. ஈச்சங் காய்களையும் பழங்களையும் பார்த்திருக்கிறேன். ஆனால், பூக்களை இதுவரை பார்த்ததில்லை. எந்த மாதம் பூக்கும் என்றுகூடத் தெரியவில்லை.

சித்திரை மாதத்தில் தெருவில் தேர் வரும்போது வீட்டின் வாசல் நிலையின் இரு மூலைகளிலும் ஈச்சங்குலைகளைத் தோரணமாகத் தொங்கவிடுவார்கள். துவர்ப்பாக இருக்கும் அந்தச் செங்காய்களைச் சிறு வயதில் சுவைத்து முகம் சுளித்தது உண்டு.

பள்ளிக்கூட வாசலில் கூடையில் வைத்து 'வீசம்படி'யில் அளந்து ஐந்து, பத்து பைசாவுக்கு விற்கும் வயதான பாட்டியிடம் சுவையான கறுப்பு நிற ஈச்சம் பழங்களை வாங்கித் தின்றது இன்றும் மனத்தில் நிழலாடுகிறது.

பனங்கள்ளையும் தென்னங்கள்ளையும் ருசித்திருந்தாலும் ஈச்சங்கள்ளை இதுவரை சுவைத்த தில்லை. தமிழ்நாட்டில் எந்தக் கள்ளையும் குடிப்பதற்கான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமா என்று தெரியவில்லை.

அன்று ஈச்சங் கள் இறக்கப்படுவதைப் பார்த்ததும், நெடுநாளைய கனவு ஆந்திரத்தில் நனவாகப் போகிறது என நினைத்துக்கொண்டேன்.

கைக்கு எட்டியது...

பானைக்குள் கள் நுரைத்துக் கொண்டிருந்தது. தேனீக்கள், ஈ வகைகள், அந்திப்பூச்சிகள் எனப் பலவும் கள்ளின் மணத்தால் ஈர்க்கப்பட்டு உள்ளே விழுந்து செத்துக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது. கள்ளை இறக்கிவிட்டுக் கீழிறங்கி வந்தவர், இடுப்பிலிருந்த உளியை எடுத்து ஒரு நீளமான கட்டையில் தீட்டிக் கூர்மையாக்கிக்கொண்டிருந்தார். மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

'பத்திரிக்கைக்கா படம் எடுக்கிறேன்?' எனக் கேட்டார். ‘பொழுதுபோக்குக்காக’ என்றேன். ‘கள் கொஞ்சம் கிடைக்குமா’ என்று கேட்டேன். 'இப்போது நன்றாக இருக்காது. சாயங்காலம் வா, இருந்தால் தருகிறேன்' என்றார். உளியைத் தேய்த்து முடித்தபின், அடுத்த மரத்தில் ஏணியை எடுத்து வைத்து மரம் ஏற ஆயத்தமானார்.

நான் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் கலயத்தில் இருந்த ஈச்சங் கள்ளை நாக்கில் எச்சில் ஊறப் பார்த்துக்கொண்டேயிருந்தேன். இன்னொரு முறை சாயங்காலமாக அங்கே போக வேண்டும் என்று நினைப்பதைத் தவிர, வேறென்ன செய்ய முடியும்?

மழைக்காலத்தில் மரங்களைத் தேடலாம்ஈச்சங்-கள்-கனவு

பருவ மழைக் காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள மரங்களைப் பதிவு செய்யும் திட்டத்தை Summer Tree Quest என்ற பெயரில் சீசன் வாட்ச் அமைப்பு ஜூன் 14-17 ஆகிய நாட்களில் நாடு முழுவதும் நடத்துகிறது.

என்ன செய்ய வேண்டும்?

இந்தத் திட்டத்தின்படி மரங்களைப் பார்த்து அவற்றில் தளிர், இலை, காய்ந்த இலை, மொட்டு, மலர், காய், பழம் முதலியவை கொஞ்சமாக உள்ளனவா, நிறைய உள்ளனவா அல்லது எதுவுமே இல்லையா என்பதைக் கவனிக்க வேண்டும்.

எப்படிப் பங்களிப்பது?

சீசன் வாட்ச் செயலியை உங்களது கைபேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். செயலியியல் ‘Casual’ பக்கத்தில் உங்கள் மரத்தைத் தேர்ந்தெடுத்து, மரம் இருக்குமிடத்தைக் குறித்து, நீங்கள் பார்த்ததை உள்ளிட வேண்டும் (தென்னை மரம் நீங்கலாக). மேற்கண்ட நாட்களில் குழுவாகவோ தனியாகவோ தெருக்களில், பூங்காக்களில் உள்ள மரங்களைக் காண உலா செல்லுங்கள்.

கட்டுரையாளர்,

காட்டுயிர் ஆராய்ச்சியாளர்

தொடர்புக்கு: jegan@ncf-india.org

ஈச்சங் கள் கனவுஞெகிழிக் குவளைஏணி பனை தென்னைஆளண்டாப் பட்சி நாவல் துவர்ப்பும் இனிப்பும் மழைக்காலம்Summer Tree Quest

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

four-out-of-a-hundred

நூறில் நால்வர்

இணைப்பிதழ்கள்

More From this Author

ஒளிரும் காளான்கள்

கருத்துப் பேழை
x