எது இயற்கை உணவு 06: இயற்கை விளைபொருளை எப்படி உறுதிப்படுத்துவது?

எது இயற்கை உணவு 06: இயற்கை விளைபொருளை எப்படி உறுதிப்படுத்துவது?
Updated on
1 min read

இன்று நஞ்சில்லாமல் விளைவிக்கப்படும் பொருட்களுக்கு, இயற்கை உழவர்களுக்கு நியாயமான விலை கொடுப்பது சரிதான். ஆனால் இயற்கை விளைபொருட்கள் என்ற பெயரில் சந்தைக்கு வரும் விளைபொருட்கள் அனைத்தும், உண்மையிலேயே இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவையா, இதை எப்படி உறுதிப்படுத்துவது?

எல்லா உற்பத்தியாளர்களும் தத்தமது பொருட்களுக்குத் தாமே விலை நிர்ணயம் செய்வதுபோல் உழவர்கள் செய்வதில்லை. இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அதனால் இயற்கை உழவர்களுக்கு நியாய விலை/சரியான விலை கிடைக்குமாறு சந்தைகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், அதேநேரம் இன்றைக்கு இயற்கை விளைபொருட்கள் என்ற பெயரில் விற்கப்படுபவை எல்லாம் உண்மையிலேயே நஞ்சில்லா நல்உணவாக இருக்குமா என்று கேட்டால், உறுதியாக பதில் கூற முடியாது. ஆசிரியர்கள், மருத்துவர்கள் ஏன் நாட்டின் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீதிபதிகளிலேயே தவறானவர்கள் ஒரு சிலர் இருக்கும்போது, இயற்கை விளைபொருள் விற்பனையிலும் தவறானவர்களும் உண்மையற்ற பொருட்களும் வரத்தான் செய்கின்றன. இன்றைய சந்தையில் அப்படி ஒரு சிறு சதவீதம் இருக்கத்தான் செய்கிறது.

அப்படியானால் உண்மையிலேயே இயற்கையாக விளைவிக்கப்பட்ட விளைபொருட்களை எப்படிக் கண்டறிவது?

நாம் உரையாட வேண்டும். இயற்கை அங்காடிகளுக்குப் பொருட்களை வாங்கச் செல்லும்போது, சில கேள்விகளைக் கேளுங்கள். ‘இந்தப் பொருள் எங்கிருந்து வருகிறது?’, ‘இதை உற்பத்தி செய்த இயற்கை உழவர் யார்?’, ‘இந்தப் பொருள் ஏன் இப்படி இருக்கிறது?’, ‘இந்தப் பருவத்தில் எப்படி இந்தப் பொருள் இங்கே கிடைக்கிறது?’ எனப் பல கேள்விகளை எழுப்ப வேண்டும். இவற்றுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், அந்த அங்காடியில் பொருட்களை வாங்குவதற்குமுன் தீவிரமாக யோசிக்க வேண்டும்.

பதில் தெரியாத அல்லது பதில் சொல்ல விரும்பாத கடைகளில் நம்பகத்தன்மை குறைவாகவே இருக்கும். வெளிப்படைத்தன்மையும் நேரடித் தொடர்பும் இல்லாத இயற்கை அங்காடிகளில் பொருட்களை வாங்காமலிருப்பதே நல்லது. ஓர் இயற்கை அங்காடி எல்லாக் காலத்திலும் எல்லா விளைபொருட்களையும் கொடுத்தால், நமக்குச் சந்தேகம் வர வேண்டும். ஏனென்றால், இயற்கையில் எல்லா விளைபொருட்களும் எல்லாப் பருவ காலத்திலும் விளைவது சாத்தியமில்ல. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

அதேபோல பொருட்களை உற்பத்தி செய்யும் உழவரின் பெயர் அல்லது பண்ணையின் பெயர் தெரியாமல் ஒரு விளைபொருளை விற்பதும் வாங்குவதும் தவறு. அப்படித் தொடர்புகள் விட்டுப்போய் இருப்பதே இன்றைய இயற்கை வேளாண் சந்தையில் தவறுகளும் அதன் தொடர்ச்சியாக சில கேடுகளும் நிகழ்வதற்கு அடிப்படைக் காரணமாக உள்ளன.

- கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in