Published : 15 Jun 2019 11:23 AM
Last Updated : 15 Jun 2019 11:23 AM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 30: கொம்பேறித் தாவும் ஹூலக்

வடகிழக்கு இந்தியாவில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது. ஒரு நாள் காலை நாகாலாந்தில் சாலையோரத்தில் இருந்த சிறிய உணவு விடுதியில் தேநீர் குடிக்கச் சென்றோம்.

கண்ணுக்கெட்டும் தொலைவுவரை மழைக்காடு போர்த்தியிருந்த பள்ளத்தாக்கு, அந்த விடுதியின் சாளரம் வழியாகத் தெரிந்தது. சிறிது நேரத்தில் பெருத்த ஊளைச்சத்தம் அங்கிருந்து கேட்டது.

அசைவற்றிருந்த மர விதானங்களில், ஒரு மர விதானத்தில் மட்டும் கிளைகள் அசைவது தெரிந்தது. என்னவென்று பார்ப்பதற்காகப் பள்ளத்தாக்கில் சிறிது தூரம் இறங்கியபின் ஒரு மரத்தில் ஹூலக் எனும் வாலில்லாக் குரங்குகளின் சிறிய கூட்டத்தைப் பார்க்க முடிந்தது.

அவை ஒன்று விட்டு ஒன்று எழுப்பிய ஒலி பள்ளத்தாக்கு முழுவதும் எதிரொலித்தது. ஒரு உயிரினத்தை முதன்முறையாக அதன் வாழிடத்தில் காணும் பரவசம் மறக்க முடியாதது.

நீளக் கைகள்

இந்தியாவில் வாழும் ஒரே வாலில்லாக் குரங்கினம், கிப்பன் வகையைச் சேர்ந்த ஹூலக். வாலில்லாக் குரங்குகளில் சிறியவையான இந்த இனம் இந்தியா, வங்கதேசம், மியான்மர் காடுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் அழிவின் விழிம்பில் வாழ்கின்றன. நம்மூர் குரங்கைவிடச் சற்றே பெரிதாக இருக்கும் இந்த வகையின் ஆண் கறுப்பு நிறத்திலும் பெண் கபில நிறத்திலும் இருக்கும். ஆண் ஹூலக்கின்

புருவங்கள் வெள்ளையாக, பிறைநிலா போன்றிருக்கும்; குடும்பம் குடும்பாக வசிக்கும் இவை, ஒரே துணையுடன் வாழும் இயல்புடையவை.

இது ஓர் அற்புதமான விலங்கு. மரத்தின் உச்சியில் கிளைக்குக் கிளை தாவிப்போவது வியப்பூட்டும் காட்சி. கைகளைக்கொண்டு மரத்துக்கு மரம் தாவிச் செல்வதற்கு வசதியாக, இவற்றின் கால்களைவிடக் கைகள் இரண்டு மடங்கு நீளமாக இருக்கும்.

இவற்றால் 40 கி.மீ. வேகத்தில் இதுபோன்று தாவிச் செல்ல முடியும். பெரிய, நீண்ட மரக்கிளைகளின் மேல் நடக்கும்போது கைகளைச் சமன் செய்வதற்காகப் பக்கவாட்டில் நீட்டிக்கொள்ளும். வாலில்லாத குறையை நீண்ட கைகள் ஈடுசெய்கின்றன என்று உயிரியிலாளர்கள் கூறுகின்றனர்.

இறைச்சியும் வளர்ப்பும்

கடந்த முப்பது ஆண்டுகளில் மட்டும் இவற்றின் எண்ணிக்கையில் 90 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒரு கணிப்பு கூறுகிறது. முதன்மையான காரணம் வாழிடம் அழிக்கப்பட்டது.

தரையில் இறங்காமல் பழம், கொட்டைகள், இலைகளை இரையாகக் கொண்டு, மர விதானத்திலேயே சஞ்சரிக்கும் இந்த உயிரினம், பரந்திருக்கும் காடு இல்லாமல் வாழ முடியாது.

வடகிழக்கு இந்தியாவில் பல பழங்குடியினருக்கு மரபு சார்ந்த சில சலுகைகள் உண்டு. அச்சலுகைகள் காட்டுயிர் பேணலைச் சிரமமாக்குகின்றன. நாகாலாந்தில் பல சாலையோரக் குடிசை வீடுகளில் ஹூலக்கின் மண்டையோடுகள் அலங்காரத்துக்காகத் தொங்கவிடப்பட்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இறைச்சிக்காகவும் இவை கொல்லப்படுகின்றன; சீனா போன்ற நாடுகளில் இதன் இறைச்சி நாட்டு மருந்துத் தயாரிப்பில் பயன்படுத்தப்படுவதும் இதன் அழிவுக்கு ஒரு காரணம். நம் நாட்டிலும் பல காட்டுயிர்களின் அழிவுக்கு இம்மாதிரியான நாட்டு மருந்து சார்ந்த நம்பிக்கை ஒரு காரணம்.

முந்தைய ஆண்டுகளில் செல்லப்பிராணியாக வளர்க்க, பெண் குரங்கைக் கொன்று குட்டியைப் பிடித்துவிடுவது வழக்கமாயிருந்தது. எண்பதுகளில் ஷில்லாங்கில் நாங்கள் வசித்தபோது, அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய நாகா பெண் ஹூலக் ஒன்றைச் செல்லப்பிராணியாக வளர்த்துவந்தாள். அதை ஒரு குழந்தையைப் போல் இடுப்பில் வைத்துகொண்டு கடைவீதிக்கு வருவாள்.

தாமதமடைந்த கோரிக்கை

இந்த அரிய உயிரினத்துக்கு இன்று நல்ல பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. எஞ்சியிருக்கும் காட்டுயிரைக் காப்பாற்ற முடியுமா என்பது தானே உலகெங்கும் நடக்கும் போராட்டங்களின் மைய நோக்கம்.

1997-ல் அஸ்ஸாமின் ஜோர்ஹாட் அருகே ஹூலக்குக்கு என்றே தனிச் சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டது. அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மேகாலயா, மிசோராம் மாநிலங்களிலும் சிறு சிறு தீவுகள் போன்ற காடுகள் இவற்றுக்கு உறைவிடமாக உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலையில் சோலைமந்தியின் வாழிடத்தைப் போல்தான் ஹூலக்கின் நிலையும் இருக்கிறது.

ஹூலக்கை மாநில விலங்காக மிசோராம் தெரிந்தெடுத்துப் போற்றுகிறது. அஞ்சல் துறையில் நான் இருந்தபோது, ஹூலக்கைக் காட்டில் பார்த்து, அது பற்றி மேலும் அறிந்துகொண்டபின், இந்த அரிய உயிரினத்துக்காக ஓர் அஞ்சல்தலை வெளியிடப்பட வேண்டுமென டெல்லிக்கு யோசனை தெரிவித்தேன். ஏற்கெனவே நம் நாடு பாம்புகளும் குரங்குகளும் நிறைந்தது என்ற பிம்பம் இருப்பதால், அது வேண்டாம் என்று பதில் வந்தது.

இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பு குறித்து பரவலாக அக்கறை எழுந்தபின், ஹூலக் ஓர் அஞ்சல் தலையில் இடம்பெற்றது. ஆனால், அப்படம் வாலில்லாக் குரங்கு போலல்லாமல், கற்பனையான பனிமனிதனைப் போன்று அமைந்துவிட்டது.

மனிதக் குரங்கு அல்ல!

குரங்கினங்களை முதனி (primates) என்று வகைப்பாட்டியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கொரில்லா முதல் நம்மூர் தேவாங்குவரை இதில் அடங்கும். முதனிகள் மனிதருக்கு வெகு அருகில் பரிணாம ஏணியின் உச்சியில் இருப்பதால் இவற்றைப் பற்றிய ஆய்வு, நம் சமூக அமைப்பு பற்றிய சில முக்கியமான புரிதல்களை அளிக்கும் என்றும் மானிடவியலாளர்கள் நம்புகிறார்கள்.

சில பல்கலைக்கழகங்களில் உளவியல் துறையும் முதனி துறையும் (primatology) இணைந்து செயல்படுகின்றன. தட்டையான முகத்தில் முன்நோக்கிய கண்கள், சில நேரம் நடப்பது, பெருவிரல் தனியாக இருப்பது முதனிகளுக்கு இருக்கும் சில பொது அடையாளங்கள்.

கொரில்லா, சிம்பன்சி, கிப்பன் போன்ற உயிரினங்களை மனிதக் குரங்கென்று சிலர் குறிப்பிடுவது உண்டு. ஆனால், பொருத்தமான பெயராக ஏற்றுக்கொள்ளப்பட்டது ‘வாலில்லாக் குரங்கு’ என்பதுதான். அவற்றுடன் ஏன் மனிதரை ஒப்பிட வேண்டும்? மழைக்காட்டில் அது கூச்சலிட்டுக்கொண்டு சஞ்சரிப்பதைப் பார்த்தீர்களானால், நான் சொல்வது புரியும்!

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்

தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x