

தொழிலாளர்கள் பற்றாக்குறை
பஞ்சாபில் அடுத்த மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் நெல் பயிரிட உழவர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வேளாண் பணிக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருப்பது நில உரிமையாளர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களுக்காக அதிக சம்பளத்துடன் ரயில் நிலையங்களில் பல மணிநேரம் அவர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அண்டை மாநிலத் தொழிலாளர்கள் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பஞ்சாப்புக்கு வந்தனர். இந்த முறை அந்த அளவுக்குத் தொழிலாளர்கள் வரவில்லை என்பதால் வேலையாள் பற்றாக்குறையாக ஏற்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களைக் காப்போம்
கால மாற்றத்தால் வேதிப்பொருள்களின் வழியில் வேளாண்மை சென்றுவிட்டது. இதனால் தற்போது பெரும்பாலான நிலங்கள் பயன்பாட்டை இழக்கும் நிலையில் இருப்பது உலகறிந்த செய்தி. பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால் மண்புழுவை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண்மையில் தற்போது இருக்கும் முக்கியப் பணி மண் வளத்தைக் காப்பது, அதற்குப் பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தும் இடங்களில் இயற்கை ஊட்டச்சத்துப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இது குறித்த செயல்முறைக் கூட்டம் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நடந்தது.
இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரிப்பு
உலக அளவில் ரப்பர் உற்பத்தியில் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. வாகன டயர் தயாரிக்கும் நிறுவனங்களிடையே இந்திய இறக்குமதி ரப்பரின் தேவை மிக அதிகமாக உள்ளது.
சென்ற நிதியாண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தியின் அளவு 6 லட்சம் டன். முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும்போது இது 8 சதவீதம் குறைவு. நடப்பு நிதியாண்டில் இயற்கை ரப்பர் உற்பத்தி 7.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என ரப்பர் வாரியம் மதிப்பிட்டுள்ளது.