

வேதிப் பூச்சிகொல்லிகளையும் மரபணு மாற்று விதைகளையும் கட்டுப்படுத்தாமல் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க முடியுமா?
முடியாது. மேற்கண்ட இரண்டுமே நம் மண்ணுக்கு, காற்றுக்கு, நீராதாரங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு, மனித ஆரோக்கியத்துக்கு, உழவரின் வாழ்வாதாரங்களுக்குப் பெரும் கேடு விளைவிக்கக்கூடியவை. இவற்றை எல்லாம்விட விதை இறையாண்மைக்கும் பயிர் பன்மயத்துக்கும் மிகப் பெரிய கேடு விளையும்.
அதனால் இப்போது மிசோரம் மாநிலம் (முன்பு சிக்கிம்) செய்துள்ளதுபோல், பூச்சிக்கொல்லிகளைத் தடைசெய்து, புதிய பூச்சிக்கொல்லிகளைப் பதிவுசெய்வதையே நிறுத்தினால்தான், இயற்கை வேளாண்மையை எளிதாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.
இப்படி எல்லா விதத்திலும் கட்டுப்படுத்தினால் மட்டுமே இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க முடியும். அதனால் கிடைக்கும் நன்மைகள் நாம் அறிந்தவையே.
அத்துடன் மருந்துக்கடைகளைப் போல், எந்தப் பூச்சிக்கொல்லி அதிக வருவாய் கொடுக்குமோ, அதை முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் மேலும் பல கேடுகள் விளைகின்றன. பூச்சிக்கொல்லி முகவர்களும் தமது லாபத்துக்காகக் கொடிய வேதிப் பூச்சிக்கொல்லிகளை, கலப்புப் பூச்சிக்கொல்லிகளை (mixture/concoctions) விற்று உழவர்களின் உடல்நலம், உயிர்ப்பலிக்குக் காரணமாகின்றனர். அப்படிச் செய்ததன் விளைவே, கடந்த ஆண்டின் நிகழ்ந்த பல பூச்சிக்கொல்லி இறப்புகள்.
அடுத்ததாக இந்த நிறுவனங்கள் கடன் கொடுத்து உழவர்களைத் தங்கள் வயப்படுத்தி மேலும் துயரத்தில் ஆழ்த்துகின்றன. (சமீபத்தில் உருவான பெப்ஸி-உருளை உழவர்கள் இடையிலான பிரச்சினை இதன் ஒரு அம்சம்தான்).
மரபணு விதைகள் அதைவிடக் கொடியவை. அவற்றின் தாக்கமே அதிகம் என்றால், அவற்றுடன் வரும் பெரும் கேடு ‘ரவுண்டப்’ போன்ற மோசமான நச்சுக் களைக்கொல்லிகள்தாம்.
இன்றைக்குப் பல மேலை நாடுகளிலும் மான்சான்டோ/அதன் இன்றைய உரிமையாளர் பேயர் நிறுவனமும் பல புற்றுநோயாளிகளுக்குப் பல கோடி டாலர் நஷ்டஈட்டைக் கொடுத்து வருகின்றன.
இந்தப் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகளைத் தவிர்த்தே இயற்கை வேளாண்மையை முன்னெடுத்து செல்ல முடியும், செல்ல வேண்டும்.
கட்டுரையாளர், இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு: organicananthoo@gmail.com