

கார் வெளியிடும் தண்ணீரால் செழிக்கும், உலகின் முதல் ‘அகுவாபோனிக்’ தாவரப் பண்ணையை லண்டனில் திறந்திருக்கிறது ஹூண்டாய். அது என்ன அகுவாபோனிக்?
ஊட்டச்சத்தான நீரைக் கொண்டு தாவரங்களை வளர்ப்பதையும், செயற்கை மீன்வளர்ப்பையும் இணைப்பதன் மூலம் வளம் குன்றாத விவசாயத்தை உருவாக்குவதுதான் அகுவாபோனிக்ஸ். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா?
ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும் வாகனங்கள் புகையை வெளியிடுவதில்லை. அவை நீராவியை மட்டுமே வெளியேற்றுகின்றன. ஹூண்டாய் அமைத்துள்ள ‘எரிபொருள் செல் பண்ணை’ கீழ்க்கண்ட வகையில் இயங்குகிறது: ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் ix35 வகை கார் நீரை வெளியேற்றுகிறது.
இந்தத் தண்ணீர் வடிகட்டப்பட்டு மீன் தொட்டிக்கு அனுப்பப்படும். மீன் கழிவிலிருக்கும் கனிமச் சத்துகளை எடுத்துத் தாவரப் பண்ணைக்கு அகுவாபோனிக்ஸ் தொழில்நுட்பம் அனுப்புகிறது. இப்படி கார் ஓட்டுவதன் மூலம் எந்தச் சுற்றுச்சூழல் மாசும் வெளியேறுவதில்லை. அப்படியென்றால் இது நிச்சயம் அற்புதமான வாகனத் தொழில்நுட்பம்தான்.