

தண்ணீரைத் தேடி
வரலாறு காணாத வறட்சியால் நூறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தண்ணீரைத் தேடி ஊரிலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர். கர்நாடகத்தில் 80%, மகாராஷ்டிரத்தில் 72% மாவட்டங்களில் பயிர்கள் வறட்சியால் நாசமடைந்துள்ளன.
இரு மாநில உழவர்களின் வாழ்வாதாரமும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுவிட்டன, மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கும் 20,000 கிராமங்களில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
மாநிலத்தின் முதன்மையாமான 35 அணைகளில் தண்ணீர் தீர்ந்துவிட்டது, ஆயிரம் சிறு அணைகளில் தண்ணீரின் அளவு 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
புதிய பயிருக்குப் போராடும் உழவர்கள்
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் காய்கறியான உருளைக்கிழங்குக்கு அடுத்தபடியாக கத்தரிக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், கத்தரி பயிரில் போதிய விளைச்சல் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்ளூர் பயிர் போதிய விளைச்சல் தராததால், புதிய பயிரின வகைகளைக் கண்டறிய வேண்டுமென மகாராஷ்டிரத்தில் ஜூன் 9-ல் ஷேட்கரி சங்கதனா என்ற வேளாண் அமைப்பு போராட்டம் நடத்தியது. உள்ளூர் விதைகளால் பொருளாதாரரீதியாக நலிவடைவதால், மத்திய அரசின் வேளாண் துறை புதிய கண்டுபிடிப்புகளைப் பரவலாக்க வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
பாதிக்கப்படும் சர்க்கரை உற்பத்தி
இந்தியாவில் கரும்பு விளையும் முதன்மையான பகுதிகளில் வறட்சியின் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிரம், கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது, பருவ மழையின் தாமதத்தால் உழவர்கள் பயிரிடுவதற்குச் சாத்தியம் இல்லாமல் போனது. எதிர்வரும் பருவ மழையை நம்பித்தான் சர்க்கரை உற்பத்தி இருக்கிறது என்று வேளாண் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.