

அதிகரித்து வரும் மக்கள்தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்வது மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதனால் உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்கவும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவும் இடுபொருட்களில் ஒன்றான விதையின் பங்கு முக்கியமானதாகிறது.
பயிரின் மகசூல், தரம், விளைபொருட்களின் சீரான தன்மை, அதன் சந்தை விலை போன்றவற்றை நிர்ணயிப்பதற்கு அடிப்படை இடுபொருளாக விதை திகழ்கிறது. எனவே, சாகுபடிக்கு விதைகளைத் தேர்வு செய்யும்போது விதைகளில் விவசாயிகள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
சான்று விதை உற்பத்தியை அதிகரிக்கவும், உழவர்களுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதிசெய்யவும், விதைச் சான்று பெறுவதை ஊக்குவிக்கவும் ‘விதைச்சான்று, அங்ககச் சான்றளிப்பு துறை’ கோவையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இத்துறையில் விதைச் சான்றளிப்பு, விதை ஆய்வு, விதைப் பரிசோதனை, பயிற்சி, அங்ககச் சான்றளிப்பு ஆகிய 5 திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம் என்கிறார், விதைச்சான்று, அங்ககச் சான்றளிப்புத் துறை இயக்குநர் அ. மதியழகன்.
“விதைகள் சட்டம் 1966-ன் படி, விதை விதிகள் 1968-ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, விதைச் சான்றளிப்புப் பணிகளை நெறிபடுத்தி, பல்வேறு ரக விதைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச விதைச் சான்று தரங்களான முளைப்புத்திறன், இனத் தூய்மை ஆகியவற்றைப் பரிசீலித்து விதை சான்றளிப்புத் துறை சான்றளித்து வருகிறது.
தமிழகத்தில் அதிக அளவு சான்று பெற்ற நெல் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் தற்சமயம் பயறு வகைகள், எண்ணெய் வித்து விதைகள், காய்கறிப் பயிர்களின் சான்று விதைகள் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. பயறு வகை, எண்ணெய் வித்து, காய்கறிப் பயிர்களின் சான்று விதை ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க இத்துறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் 1,272 அரசு விதை விற்பனை நிறுவனங்களும் 1,336 அரசுசார் விதை விற்பனை நிறுவனங்களும் 7,412 தனியார் விதை விற்பனை நிறுவனங்களும் விதைச் சான்றளிப்பு துறையில் உரிமம் பெற்று விதை வணிகம் செய்து வருகின்றன.
விதைகளின் தரத்தை ஆய்வுசெய்து, விவசாயிகளுக்குத் தரமான விதைச் சான்று வழங்குவதற்கு, விதை பரிசோதனையானது அவசியம். இந்தியாவில் 129 விதைப்பரிசோதனை நிலையங்கள் உள்ளன.
அவற்றில் 33 விதைப் பரிசோதனை நிலையங்கள் தமிழகத்தில்தான் உள்ளன. வேறெந்த மாநிலத்திலும் இத்தனை விதைப் பரிசோதனை நிலையங்கள் இல்லை. கடந்த 2018-19-ல் தமிழகத்தில் 54,603 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு பயிர்களின் விதைப் பண்ணைகள் பதிவுசெய்யப்பட்டு, அவற்றில் 1,00,274 மெட்ரின் டன் விதைச் சான்றளிக்கப்பட்டுள்ளது.
2019 - 2020 - ல் மாநிலத்தில் 57,000 ஹெக்டேர் பரப்பளவில் விதைப் பண்ணைகளை பதிவுசெய்யவும் 1,10,000 டன் சான்று விதை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
சான்றளிக்கப்பட்ட விதைகள் முளைப்புத்திறன், புறத்தூய்மை, மற்ற ரகக் கலப்பின்றி உள்ளதால், இதர விதைகளைக் காட்டிலும், அதிக வீரியத்தன்மை கொண்டு பயிர் வளர்ச்சி ஒரே மாதிரியாகக் காணப்படும். சான்று பெற்ற விதையைப் பயன்படுத்துவதால் 10 சதவீத கூடுதல் மகசூல் பெற முடியும். தரமான தானியங்களை உற்பத்தி செய்வதன் மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும்” இவ்வாறு தமிழக விதை சான்றளிப்புத் துறை இயக்குநர் அ. மதியழகன் தெரிவித்தார்.