Last Updated : 22 Jun, 2019 11:11 AM

 

Published : 22 Jun 2019 11:11 AM
Last Updated : 22 Jun 2019 11:11 AM

கரும்பு உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்பு

கரும்பு பயிர் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் இருந்துள்ளது. உழவர்களுக்கு லாபம் தருவதும், அதிக பிரச்சினை தராததுமான பயிராகக் கரும்பு விளங்குகிறது.

கரும்பின் முக்கிய விளைபொருளான சர்க்கரை உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. சர்க்கரை நுகர்வில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நம் நாட்டில் ஆண்டுக்கு 2.5 கோடி டன் (டன் = 1000 கிலோ) சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.

உலகில் உற்பத்தியாகும் சர்க்கரையில் 81 சதவீதம் கரும்பிலிருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள சர்க்கரை பீட்ரூட் கிழங்கிலிருந்து உற்பத்தி செய்யப் படுகிறது. உலகில் 120 நாடுகளில் கரும்பு சாகுபடியாகிறது.

இந்தியாவில் 3% நிலப்பரப்பில் 4.5 கோடி உழவர்கள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் மொத்தக் கரும்பு சாகுபடிப் பரப்பான 4.96 லட்சம் ஏக்கரில் தமிழகத்தின் பங்கு 50% அதாவது, 2.5 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடியாகிறது.

வளர்ச்சி கண்ட விளைச்சல்

தமிழகத்தில் கடந்த 2015-16-ல் கரும்பு மகசூல் ஒரு ஏக்கருக்கு 41 டன்னாக இருந்தது. ஆனால் பெரு, கொலம்பியா ஆகிய நாடுகளின் சராசரி மகசூல் 50 டன்னாக உள்ளது. இந்தியா அளவில் 1930-ல் ஏக்கருக்கு 14 டன்னாக இருந்த கரும்பு உற்பத்தி, ஏறத்தாழ இரு மடங்காக உயர்ந்து, தற்போது 27 டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. தேசிய அளவில் கரும்பு உற்பத்தியில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

ஆய்வுகளும் தேவைகளும்

சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையை ஈடுகட்டவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரும்பு உற்பத்தித் திறனில் முந்தைய ஆண்டுகளில் தமிழகம் உலகிலேயே முதலிடம் வகித்தாலும், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தித் திறனில் போதிய முன்னேற்றத்தை எட்டவில்லை.

இந்தியா முழுவதும் 500-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. அதில் தமிழகத்தில் 41 ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளின் தொடர் செயல்பாட்டுக்கும் சர்க்கரைத் தேவைக்கும், கரும்பு குறித்த ஆராய்ச்சியும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தவதும் தொய்வில்லாமல் நடந்தேற வேண்டிய அவசியம் உள்ளன. இந்தியாவில் தனிநபரின் சர்க்கரை நுகர்வு ஆண்டுக்கு 20 கிலோ.

கரும்பின் அதிகபட்ச உற்பத்தித் திறன் ஏக்கருக்கு 132 டன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய சராசரி மகசூல் திறனை மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் கரும்பில் புதிய ரகங்களின் அறிமுகம், அதிக இடைவெளியில் நடவு, சொட்டு நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நவீன உத்தியாக அறிமுகம் செய்யப்பட்டதுதான் 'செம்மைக் கரும்பு சாகுபடி' எனப்படும் ஒரு விதைப் பருசீவல் நாற்று முறை. இது நீடித்த நவீனக் கரும்பு சாகுபடி என்றும் கூறப்படுகிறது.

புதிய முறை

ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் இருபருக் கரும்புக் கரணைகளை நடுவது வழக்கம். இதிலிருந்து 60 ஆயிரம் கரும்புப் பயிர் தோன்றி, ஒரு கணுவுக்கு 2 கரும்புகள் விளைகின்றன. அதில் ஒரு கரும்பு சராசரியாக ஒரு கிலோ எனக் கணக்கிட்டால் ஏக்கருக்கு 120 டன் கரும்பு மகசூல் கிடைக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் மூன்றில் ஒரு பங்கு மகசூல்தான் கிடைக்கிறது.

அதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், போதிய பயிர் எண்ணிக்கை இல்லாததுதான் முக்கியக் குறைபாடாகக் கருதப்படுகிறது. இந்த நவீனக் கரும்பு நாற்று முறை மூலம் இந்தக் குறைபாடு தவிர்க்கப்பட்டு, விதை நாற்றுகள், குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பின் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

கரும்பு நாற்று நடவு முறை

கரும்பு நாற்றங்கால் முறையைக் கடந்த ஆறு ஆண்டுகளாகப் பின்பற்றிவரும் உழவர் வெங்கிடுசாமி இது குறித்துக் கூறியது: ’நான் பல ஆண்டுகளாகக் கரும்புக் கரணையிலிருந்து நாற்றுகளை உற்பத்தி செய்து நாற்றங்கால் அமைத்து, கரும்பு நாற்றுக்களை விவசாயிகளுக்கு விநியோகித்து வருகிறேன்.

ஒரு ஆண்டுக்கு 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் நாற்றுக்கள் உற்பத்தியாகின்றன. நிழல் வலைக் கூடம் அமைத்து நன்கு பயிற்சி பெற்றவர்களைக் கொண்டுதான் இந்த நாற்றுக்களை உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு ரூ. 1.60 பெறுகிறேன். இது தவிர போக்குவரத்துச் செலவை உழவர்கள் ஏற்க வேண்டும். கரணையாக இருந்தால் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் எண்ணிக்கை இருக்க வேண்டும். ஆனால், இந்த முறையில் 5 முதல் 6 ஆயிரம்

நாற்றுகள் போதும். பார்களில் 5 அடி இடைவெளி தேவை. இந்த முறையில் கரும்புக் கரணையில் உள்ள பருக்கள் வெட்டுக் கருவி மூலம் அப்படியே சீவி எடுக்கப்பட்டு, தேங்காய் நார்க்கழிவு நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் டிரேக்களில் ஊன்றப்பட்டு, பாதுகாப்பாக வளர்க்கப்படுகிறது. 25 முதல் 30 நாட்கள் ஆனதும், 4 முதல் 6 இலைகள் வளர்ந்திருக்கும்.

சாதாரண முறையில் 2 மாதங்களில் கிடைக்கும் வளர்ச்சி - இந்த முறையில் ஒரே மாதத்தில் கிடைத்துவிடுகிறது. இந்த நிலையில் நன்கு வளர்ந்துள்ள பயிர்களைத் தேர்வுசெய்து நடவு செய்துவிடலாம். இதன்மூலம் குறைந்த நாட்களில் அதிக அளவு முளைப்புத்திறன் கிடைக்கிறது. இதன்மூலம் ஒரு ஏக்கருக்கு 100 டன்வரை மகசூல் எடுக்க வாய்ப்புள்ளது’ என்றார்.

மானியம் உண்டு

‘தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம்' திட்டத்தின்கீழ் ஒரு பரு கருணை செயல்விளக்கத் திடலுக்கு ரூ. 9 ஆயிரம் மானியம், விவசாயிகளுக்குத் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

 விதைக் கரும்புக் கரணைகளை டன் கணக்கில் நடவு செய்வதைவிட, 50 கிலோ எடை உள்ள விதைப் பருக்கள் மூலம் நடவு செய்யும் புதிய முறையை உழவர்கள் கடைப்பிடித்தால் உற்பத்தி அதிகரிக்கும். இதன்மூலம் , உத்தரப் பிரதேசம், மகாராஷ்ட்ர மாநிலங்களுக்குத் தமிழகம் சவால் விடுக்கும் என்பது வேளாண் நிபுணர்களின் கணிப்பு.

இந்தப் புதிய முறை கோபி வட்டாரத்தில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு பரு கரும்பு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து, நாற்றுக்களைப் பாதுகாப்பாக வளர்த்து, நடவு செய்யும் இம்முறை கரும்பு உற்பத்தியில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. சாதாரண முறையில் ஒரு ஏக்கருக்கு 60 ஆயிரம் விதைப் பருக்கள் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக, இந்தப் புதிய முறையில் 5 ஆயிரம் நாற்றுகள் மட்டுமே நடவு

செய்யப்படுகின்றன. அதிக இடைவெளியில் நடப்படுவதால் காற்றும் சூரிய ஒளியும் பயிர்களுக்கு இடையில் நன்கு ஊடுருவுகின்றன. இந்தப் புதிய முறையில் விதை சீவல்களின் எடை வெறுமனே 50 கிலோ என்பதால், விதைக் கரணைகளுக்கான போக்குவரத்து செலவும் மற்ற நடைமுறைகளும் வெகுவாகக் குறைகின்றன. இது கரும்பு உற்பத்தியைப் இரட்டிப்பாக்கும் வேளாண் துறையின் புதிய முயற்சி.

கட்டுரையாளர்,

கோபி வேளாண் உதவி இயக்குநர்

தொடர்புக்கு: agrigobi@yahoo.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x