

ஆனைமலைப் பகுதியின் வால்பாறையிலுள்ள ஒரு தேயிலைத் தோட்டம். பறவைகளைத் தேடி காலை ஐந்து மணிக்கு உலாவிக்கொண்டிருந்தேன். ஆனால், சூரிய ஒளி தாவரங்களின் மீது படரும்வரை பறவைகளின் பாடலோ அசைவோ எதுவும் எட்டிப் பார்க்கவில்லை.
ஆறு மணிக்கெல்லாம் பல்வேறு பறவைகளின் அழைப்புகளும் பாடல்களும் ஒன்றன்பின் ஒன்றாக கச்சேரி போலத் தொடங்க, அந்தத் தேயிலைத் தோட்டம் உயிர்பெறத் தொடங்கியது.
ஒன்பது வண்ணப் பறவை
தேயிலைச் செடிகளுக்கு இடையே வளர்ந்திருந்த மரம் ஒன்றில், பச்சை நிற முதுகுடன் கண்களில் பட்டை கொண்ட ஒரு சிறு பறவை வந்து அமர்ந்தது. அது என்ன பறவை என்று தெரிந்துகொள்வதற்காக, அது திரும்புவதற்காகக் காத்திருந்தேன். இலை மறைவிலிருந்து அழகாக நகர்ந்து என் பார்வைக்குத் தெரியும் விதமாக நின்றது ஒன்பது வண்ணங்கள் சூடிய ‘பிட்டா’.
வலசை வரும் அரிதான அந்தச் சிறிய பறவையைத் தரிசிப்பது அபூர்வம்தான். இமயமலை, மத்திய இந்தியா, மேற்கு இந்திய மலைப்பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இந்தப் பறவை, உள்நாட்டு வலசை வரக்கூடியது. மாலை நேரத்தில் அதிகம் தென்படுவதால் ஆறுமணிக் குருவி என்றொரு பெயரும் அதற்கு உண்டு.
இயற்கை ஓவியம்
அந்த மரக் கிளையில் ஓரிரு நிமிடங்களே இருந்த வண்ண ஓவியம் போன்றிருந்த அந்தப் பிட்டா, எனக்குள் உணர்வுக் கிளர்ச்சியை ஏற்படுத்தியது! அதன் உடலில்தான் எத்தனை வண்ணங்கள்! குழந்தைகளுக்கு நிறங்களை அறிமுகப்படுத்த பிட்டா ஒன்று மட்டும் போதும்! அது பாடவோ அழைப்புவிடுக்கவோ இல்லை. ‘என் நிறங்களை ரசிப்பதற்கே நேரம் போதாது, பின் அழைப்பு எதற்கு’ என்று கூறும் வகையில் அமைதியாக இருந்தது போலிருக்கிறது.
கிளையின் முன்னும் பின்னும் மெதுவாக நகர்வது, பின் என்னைப் பார்ப்பது என அதன் செயல்பாடுகள் ஒரு சிறுகுழந்தையை ஒத்திருந்தது. இப்படி அதை ரசித்துக்கொண்டிருந்தபோதே சட்டென ஓசை எழுப்பிக்கொண்டே எழுந்து பறந்து, கண்ணுக்கு எட்டாத மரம் ஒன்றில் தஞ்சமடைந்தது.
பிட்டா பித்து
பிட்டா பறந்த பிறகு, அது அமர்ந்திருந்த கிளை அருகில் சென்று பார்த்தேன். அதன் உடலில் இருந்த வண்ணங்கள் ஏதாவது அக்கிளையில் ஒட்டி இருக்கிறதா… வண்ணங்கள் சூடிய அதன் இறகு ஏதும் உதிர்ந்து கிடக்கிறதா என்று உற்றுநோக்கினேன். எதுவும் தென்படவில்லை! அதன் வண்ணங்கள் என் மனதில் பதிந்த திருப்தியுடன், அடுத்து கேட்ட பறவையின் அழைப்பை நோக்கி நகர்ந்தேன். என் மனதில் ஒட்டிக்கொண்ட பிட்டாவின் பித்து நீங்க சில நாட்கள் ஆயின.
கட்டுரையாளர்,
சித்த மருத்துவர் - இயற்கை ஆர்வலர்,
தொடர்புக்கு:
drvikramkumar86@gmail.com