

த
மிழகத்தின் நீர்வள மேலாண்மை வல்லுநர்கள் பலர் தொடர்ந்து ஒரு சொற்றொடரைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்: ‘நதிநீர் வீணாய்க் கடலில் கலப்பதைத் தடுக்க வேண்டும்’. உலகப் பருவநிலையோடு பின்னிக் கிடக்கும் நீரியல் சுழற்சியைக் குறித்து இந்த நீர்மேலாண்மை வல்லுநர்கள் அறிந்தது அவ்வளவுதானா என்று நொந்துகொள்வேன்.
தமிழ்நாட்டின் கடைசி ஆறு குழித்துறையாறு (சின்ன தாமிரபரணி என்றும் அழைக்கப்படுகிறது). இதன் கழிமுகப் பகுதியில் பரக்காணி, வைக்கல்லூர், கணபதியான்கடவு பகுதிகளிலெல்லாம் நிலத்தடிநீர் உவர்ப்பாகி மக்கள் கூக்குரலிடத் தொடங்கியிருக்கிறார்கள்.
1990-களிலிருந்து ஆய்வு நிமித்தமாக இந்தக் கழிமுகப் பகுதியைக் கவனித்து வருகிறேன். 35 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தப் பகுதியில் நான் குடியேறியபோது பத்துப் பன்னிரண்டு அடி ஆழத்தில் அருமையான நன்னீர் கிடைத்தது. ஆனால், ஆற்றை ஒட்டிய தென்னந்தோப்புகளை வாங்கி, அந்த நிலத்தைத் தோண்டி மணலை அகழ்ந்து சந்தைப்படுத்த வசதியாக ஆற்றோடு இணைத்து அகழ்ந்தனர். சட்டவிரோத தனியார் மணல் கொள்ளைக்கு அண்டைக் கடலோர மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மறுதரப்பு அதைச் சாதி மத மோதலாக உருவகித்துப் பதற்றத்தை உருவாக்க முயன்றது.
தண்ணீருக்கான உரிமை உலகளாவியது, எல்லா உயிர்க்குமானது. அதைப் பேணும் கடமையைக் கொண்டதும்கூட. கடலையொட்டிய கழிவெளியின் அடித்தரையை 20 அடி ஆழம் தோண்டி அகழ்ந்துவிட்டால் அந்த நீர்நிலையின் விதி என்னவாகும்? அந்த நீர்வளத்தை நம்பி வாழும் உயிர்களின் கதி என்னவாகும்? வேளாண்மைச் சமூகங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லையா, சமர்த்தாக அமைதி காத்தனவா? கடற்கரைப் பழங்குடி மக்களின் கவலைகள் நியாயமானவை என்பதை இன்று எல்லோரும் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆனால், காலம் கடந்த புரிதல் பயன் தராது.
ஆற்றின் கழிமுகமும் கழிவெளிகளும் முக்கியமான சூழலியல் கட்டமைவுகள். நன்னீரில் வாழும் உயிரினங்களும் கடலுயிர்களும் மட்டுமல்ல; கழிவெளிகளில் மட்டுமே வாழும் உயிரினங்களும் நிறைந்த சூழலியல் அமைவு அது. கடல் மீன் அறுவடையில் 90 சதவீதம் கரைக்கடலிலிருந்து கிடைப்பவை. ஒட்டுமொத்தக் கடலும் மீன் உற்பத்திக்கான வயல் அல்ல.
ஆறுகள் கடலில் சேர்வதால் மட்டுமே கடலில் மீன்வளம் நீடிக்கிறது. இறால் உள்ளிட்ட ஏராளமான மீன் இனங்களுக்குக் கழிவெளிகள்தாம் தொட்டில். மீன் குஞ்சுகளுக்குப் போதுமான உணவும் பாதுகாப்பான வாழிடமும் ஒரு சேரக் கிடைப்பது இங்கேதான். வலசை போகும் மீன்களுக்குக் கழிவெளிதான் நுழைவாயில். கடற்கரைகளில் முதுமை காரணமாகக் கடலுக்குள் போக முடியாத மீனவர்களுக்குக் கழிவெளிகள் வாழ்வாதாரமாகவும் அமைகின்றன. ஆறுகளும் கழிவெளிகளும் இல்லையென்றால் கடல் மீன்வளம் அற்றுப் போய்விடும்.
கழிமுகங்களில், கடல் நீரைவிட நன்னீரின் அடர்த்தி குறைந்திருக்கும். இதனால் ஓதங்கள் உள்ளே கொண்டுவரும் கடல்நீர், அடியில் தங்கிவிடும். பருவமழைப் பெருவெள்ளம் அதைக் காலம்தோறும் சமன் செய்துவிடும். வழக்கமாகக் கழிவெளிகளின் ஆழம் மிகக் குறைவாகவே இருக்கும். மீன்வளம் பெருகவும் அதுவே சாதகமானது.
இந்த அறிவியல் பின்னணியில், கழிமுகப் பகுதியில் 27அடி ஆழம்வரை மணலை அகழ்ந்தால் என்னவாகும் என்று புரிந்துகொள்வது எளிது. அடித்தரையைத் தோண்டத் தோண்ட கீழ்நோக்கிப் போகும் உப்புநீர், ஆற்றின் இருபுறமும் பரந்து, நிலத்தடி நன்னீர் வளத்தைச் சேதாரப்படுத்திவிடும். நிலத்தடியில் சென்றுவிட்ட உப்பைத் திருப்பி எடுக்கவே முடியாது.
சின்ன தாமிரபரணி மட்டுமல்ல. பாலாறு, காவிரி, வைகை உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை ஆறுகளும் அரைவேக்காட்டு மருத்துவர் கிழித்துப்போட்ட வயிறு போலக் கிடக்கின்றன. மணல் கொள்ளையும் கடற்கரைக் கனிம மணல் கொள்ளையும் மாஃபியாக்களின் கைவரிசை ஆகிவிட்டது.
நெருப்புடன் விளையாடுவதைவிட விபரீதமானது, இப்போது நீருடன் நாம் நிகழ்த்திக்கொண்டிருக்கும் விளையாட்டு. எப்படி மீளப் போகிறோம்?
(அடுத்த வாரம்: மரண நதி)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com