

எ
றும்பைப் போன்ற தோற்றத்துடன் பல சிறு பூச்சிகளைப் பார்க்க முடியும். அவற்றை உற்றுநோக்காமல் எறும்புகள் என்றே பல நேரம் கடந்துவிடுவோம். ஆனால், பல பூச்சிகள் இதுபோல ஒப்புப்போலிப் (Mimic) பண்பைக் கொண்டுள்ளன. இது எதிரிகளைக் குழப்பித் தப்பிப்பதற்கான ஓர் உத்தியாகவும் இருக்கிறது.
ஒரு நாள் எங்கள் வீட்டில் கட்டெறும்பையொத்த அதேநேரம், கறுப்பில் சிவப்பு கலந்த நிறத்தில் ஒரு பூச்சி தென்பட்டது. ஆறு கால்கள், உணர்கொம்புகளைக் கொண்டிருந்தாலும்கூட நிச்சயமாக அது கட்டெறும்பு அல்ல என்று தெரிந்தது. குறிப்பாக அதன் ஒல்லித் தலை முற்றிலும் புதுமையாக இருந்தது. ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டியிருந்த அது, அதன் எல்லா மூலைகளுக்கும் நடந்து சென்றது.
ஆங்கிலத்தில் Weevil என்றழைக்கப்படும் இந்தப் பூச்சி தமிழில் கூன்வண்டு எனப்படுகிறது. அரிசியில் இதுபோன்ற கூன்வண்டுகள் தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவை மிகவும் சிறியவை. இந்தக் கூண்டுவண்டு கட்டெறும்பை ஒத்த உடல் அளவுடன் இருந்தது. விநோதமான இந்தப் பூச்சி பற்றித் தெரியாவிட்டாலும் படமெடுத்து வைத்துக்கொண்டேன்.
இவை வண்டினத்தைச் சேர்ந்தவை. நாடெங்கும் மிகவும் சிறிய அளவில் இருந்து பெரிய அளவுவரை காணப்படுகின்றன. தாவர உண்ணி. புல்தரை, வயல்வெளி, புதர்கள், சேமிக்கப்பட்ட தானியம், பழங்கள் போன்றவற்றில் காணப்படும். மாம்பழம், அரிசியின் உள்ளே இருந்தெல்லாம் புறப்பட்டு வருபவை இந்த கூன்வண்டுகள்தான்.
உடல் கீழ்ப்புறமாக வளைந்திருக்கும். நீளமான முன்னுறுப்பு மூலம் தன் சுற்றுப்புறத்தை உணரக்கூடியது. சில கூன்வண்டு வகைகள் பறக்கும் திறன் பெற்றவை.
பொதுவாக இந்த வண்டினம் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. நெல், கோதுமை, சோளம், பருத்திப் பயிர்களை இவை தாக்கக் கூடும். அதேநேரம் சில கூன்வண்டுகள் அயல் தாவரங்களை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.
அந்தக் கூன்வண்டு எங்கிருந்து வந்தது என்று தெரியாது. வீட்டின் வெளிப்பகுதியில் அந்தக் கூன்வண்டை விட்ட பிறகு, அது எங்கு சென்றதோ தெரியவில்லை.