

உள்ளே நுழைந்தவுடன் அது இயற்கை வேளாண் பண்ணையா, இல்லை பள்ளிக்கூடமா என்ற சந்தேகம் வருவது இயல்பு.
சந்தேகம் வேண்டாம், அது ஒரு பள்ளிக்கூடம்தான், அங்கே குழந்தைகள் படிக்கிறார்கள், இயற்கையைப் படிக்கிறார்கள். இயற்கையை எப்படி மதிப்பது, அதன் மீது எப்படி அன்பு காட்டுவது என்று அறிந்து கொள்கிறார்கள். விவசாயம், ஓவியம், கலை, கைவினை போன்றவைதான் அவர்களது பாடங்கள்.
திருவண்ணாமலை புறநகர் பகுதியில் இருக்கும் ‘மருதம் பண்ணைப் பள்ளி"யில்தான் இதெல்லாமே சாத்தியமாகி இருக்கிறது. இந்தப் பள்ளியில் 50 குழந்தைகள் படிக்கிறார்கள். “கல்வி சார்ந்து மாற்று அணுகுமுறை தேவை. அதைச் செயல்படுத்திப் பார்க்க நினைத்ததன் விளைவுதான் இந்தப் பள்ளி,” என்கிறார் அதை நடத்திவரும் அருண்.
புதிய பாதை
ஐ.ஐ.டி-யில் பொறியியல் படித்து, இயற்கை மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை ஜே.கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் தி ஸ்கூலில் சுற்றுச்சூழல் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். தன்னுடைய மனைவி பூர்ணிமாவுடன் இணைந்து மருதம் பள்ளியை 2009-ல் ஆரம்பித்தார்.
திருவண்ணாமலையில் பல்வேறு பணிகளை நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் பிரிட்டனைச் சேர்ந்த கோவிந்தாவும் இஸ்ரேலைச் சேர்ந்த அவருடைய மனைவி லீலாவும் இந்தப் பள்ளியை நடத்துவதில் அருணுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
அருணாசல மலையிலுள்ள காட்டுப் பகுதியில் ஏற்படும் தீயை அணைக்கக் கோவிந்தா எடுக்கும் முயற்சிகளும் அவரது பணியும் திருவண்ணாமலையில் பிரபலம்.
‘தி ஃபாரஸ்ட் வே' என்கிற அமைப்பின் கீழ் இந்தப் பள்ளியை இவர்கள் இணைந்து நடத்தி வருகிறார்கள். அருகில் உள்ள மற்றப் பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் கல்வியை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
விரும்பும் கல்வி
தற்போதுள்ள பயிற்றுவிக்கும் அணுகுமுறையால் வகுப் பறையில் யதார்த்தமும் கற்றலும் விலக்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன் என்கிறார் அருண். அதன் காரணமாக மருதம் பள்ளி வழக்கமான பாடங்களைக் கற்றுக்கொடுப்பதுடன் நின்று விடவில்லை. விவசாயம், மண்பாண்டம் வனைதல், ஓவியம், இசை, நாடகம் என்று பல கலைகள் கற்றுத் தரப்படு கின்றன. 1:4 என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் இருப்பது இந்தப் பள்ளியின் சிறப்பு.
இங்குள்ள குழந்தைகளுக்கு இயற்கையுடன் ஒன்றிணைந்த கல்வி அளிக்கப்படுகிறது. அவர்கள் விரும்பும், விளையாடும் இடங்களில் அதாவது மரத்தடியில், திறந்த வெளியில்தான் வகுப்புகள் நடக்கின்றன. பள்ளி மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சீர்குலைக்கப்படாத இயற்கை நேரடியாக உணர்த்தப்படுகிறது.
ஏழைக்கு இலவசம்
பள்ளியில் வசதி படைத்தோர், வசதி குறைந்தவர்கள் என்கிற பேதமெல்லாம் இல்லை. வெள்ளைக்காரக் குழந்தைகளும் இங்குப் படிக்கிறார்கள். வசதியில்லாத குழந்தைகளிடம் கட்டணம் வாங்கப்படுவதில்லை. "பள்ளியை நடத்துவதற்கு ஸ்பான்சர்கள் மூலம் நிதி திரட்டுகிறோம். 5-ம் வகுப்புவரை இருக்கும் இந்தப் பள்ளியில் படித்துவிட்டு மேற்படிப்பைத் தொடர முடியும்" என்கிறார் அருண்.
வகுப்பறையிலேயே அடைத்து வைத்து நிதர்சன உலகம் தெரியாத புத்தகப் புழுக்களாகவும், மதிப் பெண்களைக் கக்கும் பிராய்லர் கோழிகளாகவும் மாணவர்களை மாற்றும் பள்ளிகளுக்கு மத்தியில் இயற்கையோடு நெருக்கமான வாழ்வியல் கல்வியைக் கற்றுத்தரும் மருதம் போன்ற பள்ளிகளாலும், அருண் போன்றவர்களாலும் கல்வி அடுத்த படிக்கு மேலேறும் என்று நம்பலாம்.
- பானுமதி, சுயேச்சை இதழியலாளர்,
தொடர்புக்கு: rbanu888@gmail.com