Published : 10 Mar 2018 12:21 PM
Last Updated : 10 Mar 2018 12:21 PM

கடலம்மா பேசுறங் கண்ணு 44: நெத்திலிச் சம்பல்!

ம் நாட்டில் மழைக்காலம் பதற்றம் தரும் செய்திகளின் காலம். நகர வாழ்க்கை அசைவற்றுப் போகும். மும்பையின் ஒரு பகுதி மூழ்கிவிடும். பிகார் பரிதவிக்கும். அண்டை நாடான வங்கதேசம் முக்காடு போடும்.

ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக் காலம் வந்ததும் வெள்ளப்பெருக்கும் அணை திறப்பும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பும் இயல்பு வாழ்க்கை முடக்கமும் பயிர்கள் நாசமாவதும் வழக்கமாக இருக்கின்றன. இவை போலவே பருவமழைக் காலத்தின் பின்பாதியில் நெய்தல் நிலம் எதிர்கொள்ளும் வழக்கமான சிக்கல் நெத்திலி மீன் அறுவடை சார்ந்தது.

மீனில் நெல் வாசனை

நெத்திலி, சிறு மீன்களில் தனித்தன்மை வாய்ந்தது. ஆங்கோவியல்லா (Anchoviella) என்னும் பேரினத்தைச் சேர்ந்த நெத்திலி மீனில் பல வகைகள் உள்ளன. கருநெத்திலி, வெண்ணெத்திலி, கோநெத்திலி என இப்படி. கருநெத்திலி சுவை மிகுந்தது. கோநெத்திலி சுமார் எட்டு அங்குல நீளம்வரை வளரும்.

நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகிற, கொழுப்புச்சத்து குறைந்த, கால்சியம் குறைபாட்டை ஈடுசெய்கிற இந்த நெத்திலி இன மீன்களை (கோநெத்திலி தவிர்த்து) எளிதில் வெயிலில் உலர்த்திப் பதப்படுத்திக் கருவாடாக்கிவிட முடியும். தலை, வயிறு, வால் துடுப்பு மூன்றையும் எளிதாய்க் கிள்ளிப் போட்டுவிட்டுச் சமைத்துவிடலாம். கொழுப்பு அளவு மிகக் குறைவென்பதால் கருவாடாகும்போது நெல்விளைந்து நிற்கும் வயலில் வருவதுபோல இதமான வாசனை பிறக்கும்.

நெடுநாள் கெடாத உணவு

உலர்ந்த கருவாட்டை நெடுநாள் கெடாமல் காக்க முடியும். நெத்திலிக் கருவாட்டுச் சம்பல், இந்தப் பகுதி மக்கள் விரும்பி உண்ணும் மதிப்புக் கூட்டிய மீன் பண்டம். நன்றாய் உலர்ந்த கருவாட்டை எண்ணெய் புரட்டாமல் பரந்த சட்டியிலிட்டு வறுத்துச் சுத்தம்செய்து (தலை, வால், துடுப்பு முதலியவற்றை நீக்கி) மிளகாய் வற்றல், சீரகம், கறிவேப்பிலை, வெள்ளைப்பூண்டு, வறுத்த உப்பு, தேங்காய்த் துருவல் இத்தனையையும் சேர்த்து இடித்துப் பொடியாக்கி (அல்லது அரைப்பானில் அரைத்து) தயாரிக்கும் சம்பல் நெடுநாள் கெடாமலிருக்கும். வெளிநாடுகளில் வாழும் உறவினர்களுக்கு அனுப்பிவைக்கும் உணவுப் பண்டங்களின் பட்டியலில் நெத்திலிக் கருவாட்டுச் சம்பல் முக்கியமான வகையறா.

சரக்குப் போக்குவரத்து வசதிகள் வந்த பிறகு கடற்கரைகளில் உலர்த்திக் கருவாடாக்கப்பட்ட நெத்திலி மீன், பெருமளவில் கொள்முதல் செய்யப்பட்டுத் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் நல்ல வெயில் அடித்தால்தான் நெத்திலி மீனைக் கருவாடாக்க முடியும்.

கட்டுமரம் கொள்ளாத மீன்

மீன்களின் இனப்பெருக்கமும் இடப்பெயர்வும் பருவம் சார்ந்து நிகழ்பவை. சாதாரணமாக, நெத்திலி மீன் கரைக்கடலில் வருவது மழைக்காலத்தில்தான். கரைக்கடலில் அவை பெருங்கூட்டமாய் அணிவகுத்துப் போவதை மீனவர்களால் கரையில் இருந்துகொண்டே அடையாளம் காண முடியும். பரபரவென்று கட்டுமரத்தில் வலையை ஏற்றிக் கைத்துடுப்புத் துழைந்து சென்று, ஊர்வலம்போல் நகர்ந்துபோகும் நெத்திலிக் கூட்டத்தின் குறுக்கே வலையை விரித்தால் கட்டுமரம் தாங்காத அளவுக்கு மீன்பாடு!

சில வேளைகளில் மீனவர்கள் கடற்கரையில் கையைக் கட்டி உட்கார்ந்து கரையோரமாய்ப் பயணித்துப் போகும் மீன் கூட்டத்தைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். ஏன்?

(அடுத்த வாரம்:விடை இல்லாத கேள்வி!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x