கடலம்மா பேசுறங் கண்ணு 45: விடை இல்லாத கேள்வி!
நெ
த்திலி வகையைப் பொறுத்தவரை மீனுக்குக் கிராக்கி இல்லை. அதன் கருவாட்டுக்குத்தான் மதிப்பு. மீனைக் கருவாடாக்க வெயில் வேண்டும். வேறு மீன் வகையைப் போலல்லாமல் நெத்திலி மீனை வலையிலிருந்து வெளியே எடுத்துச் சேகரிப்பது வெகு சிரமமான, உடல் உழைப்பு மிகுந்த முயற்சி. அதை அலைவாய்க் கரையிலிருந்து சுமந்து மணற்பரப்பில் பரவி வீசி உலரவிட வேண்டும்.
உலர்த்துவதில் ஆரம்பித்து விற்பனைசெய்வதுவரை முழுக் குடும்பமும் சேர்ந்து உழைக்க வேண்டும். அவ்வளவு உழைப்பையும் ஒரே ஒரு மழை, கால் காசுக்குப் பயனில்லாமல் ஆக்கிவிடும். ஆனால், மழைக் காலம் பார்த்து நெத்திலி வருகிறது. என்ன செய்வது?
இந்தக் கேள்விக்கு 60 வருடங்களுக்கு மேலாக விடை கிடைக்காமல் மீனவர்கள் தவிக்கிறார்கள். மீன் பிடிப்பில் எத்தனையோ அதிதொழில்நுட்பங்கள் கடற்கரையில் நுழைந்துவிட்டன. இந்த நெத்திலி மீன் சிக்கலுக்கு எந்தத் தீர்வையும் யாரும் யோசிக்காமல் போனார்களா?
தலச் சந்தைகளில் உடனடித் தேவை எழாத மீன்களைத் தொலைதூரச் சந்தைகளுக்கு அனுப்பி வைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க முடியும். இந்த மீன்களைப் பயன்படுத்தி மதிப்புக்கூட்டிய மீன் உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கடற்கரையிலேயே நிறுவிடவும் முடியும். சூரிய ஆற்றலுக்கு மாற்றாக இயந்திரங்களின் உதவியுடன் நெத்திலி மீனைச் சுகாதாரமான முறையில் கருவாடாக மாற்றும் நுட்பத்தை அறிமுகப்படுத்துவதும் சாத்தியம்தான்.
மீன் பதப்படுத்தும் மாற்று நுட்பங்கள் பல முகமைகளால் அறிமுகம் செய்யப்பட்டன. மின் கருவிகளால் வெப்பமூட்டல் மற்றும் புகையூட்டல் முறைகளால் சிறு வகை மீன்களை உலர்த்திப் பதப்படுத்தும் முறையை மத்திய மீன் தொழில்நுட்ப மையமும் இந்தோ நார்வீஜியன் மீன்வளத் திட்டமும் அறிமுகம் செய்தன. ஆனால், அரசுக் கொள்கை ரீதியாகவோ செயல் அளவிலோ அந்த முறைகள் இங்குள்ள மீனவர்களை எட்டவில்லை. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் உலக வேளாண் கழகத்தின் உறுப்பான வங்காள விரிகுடாத் திட்டத்தின் கீழ் சுகாதாரமான நெத்திலி உலர்த்துதல் முறை கன்னியாகுமரிக் கடலோரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
மீன்பிடி நுட்பங்களில் மீனவர்கள் காட்டும் சிரத்தையை அறுவடையாகும் பொருளுக்கு உரிய விலையைப் பெறுவதில் காட்டுவதில்லை.
சீனத்தில் விவசாயத்தில் டிராக்டர்கள் புகுத்தப்பட்ட காலத்தில் அங்குள்ள விவசாயிகள் டிராக்டர் ஓட்டுபவர்களாக மட்டுமின்றி அவற்றைப் பழுது நீக்குபவர்களாகவும் மாறினார்கள். அதற்கான பணிமனைகளை அவர்களே உருவாக்கிக்கொண்டனர். பயிர்த் தொழிலாளர்களிடம் காணப்படும் உலகளாவிய இந்த முன்னோக்கு – பின்னோக்கு ஒருங்கிணைப்பு அணுகுமுறையும் நெகிழ்தன்மையும் பாரம்பரிய மீனவர்களிடம் இல்லை.
மீனவர்களின் பொருளாதாரப் பின்னடைவுடன் இந்தப் போக்கை இணைத்துப் பார்க்க முடியும். கடலுக்குப் போய்ப் பலவகை மீன்களை அறுவடைசெய்து கரைசேர்ப்பது, அவனால் மட்டுமே முடிகிறது.
மீன் தொழிற்களத்தில் மிகக் கடினமானதும் நுட்பமான உத்திகள் தேவைப்படுவதும் இந்தப் பணியில்தான். ஆனால், மீன்பிடிக் கருவிகளின் உற்பத்தி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது? மீனவர்கள் அறுவடைசெய்து கரை சேர்க்கும் உற்பத்தியைச் சந்தைப்படுத்தும் வேலையைச் செய்பவர் யார்? மீன் வணிகத்தில் ஈடுபடும் தரகர், தண்டலர், வணிகர் போன்றவர்கள் பொதுவாக எந்தச் சமூகத்தைச் சார்ந்தவர்களாய் இருக்கிறார்கள்?
மீன்பிடிக் கருவி உற்பத்தி – விற்பனை நடவடிக்கைகளும், மீன் கொள்முதல், சந்தைப்படுத்துதல், பதப்படுத்துதல் முதலிய நடவடிக்கைகளும் மீனவர்களின் கட்டுப்பாட்டில் இல்லை. மீனவர்கள் முன்னோக்கு – பின்னோக்கு ஒருங்கிணைப்புச் செயல்பாடுகளில் கால்பதிக்காதவரை அவர்களின் பொருளாதாரம் பின்தங்கியே இருக்கும். மீனவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி இது.
(அடுத்த வாரம்: மீன்களின் தொட்டில்!)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர்
தொடர்புக்கு: vareeth59@gmail.com
