

ம
துரை பகுதியில் ஜல்லிக்கட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மாட்டினம் புளியகுளம் வகை.
புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, கோவை, சேலம் பகுதியிலும் கர்நாடகத்தின் பெங்களூரு மாவட்டத்திலும் இந்த மாட்டினம் காணப்படுகிறது. சுறுசுறுப்பான இந்த மாடுகள், வண்டி இழுக்கப் பயன்படுபவை. அதேநேரம், வேகமாக ஓடக்கூடியவை அல்ல.
இந்த இனத்தின் காளைகள் அடர் சாம்பல், கறுப்பு நிறத்திலும் பசுக்கள் சாம்பல் அல்லது வெள்ளை நிறத்திலும் இருக்கும். மைசூர் மாட்டினங்களுக்கே உரிய வகையில் கொம்புகள் பின்பக்கமாக வளைந்திருக்கும்.
புளியகுளம் மாட்டின் இன்னொரு பெயர் ‘பட்டி மாடு’. ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி குறிப்பிடுகிறார். ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும். இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளம் பெறும்.
புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்பது பொதுவான நம்பிக்கை. பட்டி மாடுகளை வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம் ஆட்டுக்கு ரூ. 5-ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறை திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகள் பேருதவி புரிந்துவருகின்றன.