

பூச்சிக்கொல்லி நஞ்சுடன் விளைவிக்கப்படும் பொருட்கள் நம் மீது செலுத்தும் தாக்கம் என்ன?
முதல் தாக்கம், சுற்றுச்சூழல். நமது மண், நீர், காற்று, வெளி என எல்லாமே மாசடைகின்றன. நமது எல்லா வளங்களையும் அடுத்த தலைமுறைக்கு மிகவும் மோசமான நிலையில்தான் நாம் விட்டுச் செல்லப் போகிறோம்.
இரண்டாவது தாக்கம், புற்றுநோய், இதய நோய், நாளமில்லாச் சுரப்பிக் கோளாறுகள், நரம்புக் கோளாறுகள், கருவுறுதல் பிரச்சினைகள் போன்றவற்றுடன் பல புதிய நோய்களும் பரவலாகி உள்ளன. அதிலும் வேதனையானது மிக இள வயதில் இந்த நோய்களால் பாதிக்கப்படுவோர் அதிகம். 7-8 வயதில் இளம் பெண்கள் பூப்பெய்துதல், 10 வயதுக்குள் நரை முடி என இது சார்ந்து பெரிய பட்டியல் இருக்கிறது.
எல்லாவற்றையும்விட மிகவும் வேதனையானது, இந்த நச்சுப் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும்/பயன்படுத்தும் உழவர்/பண்ணைக்கூலி ஆட்கள் பலருக்கு நேரிடும் இறப்பு. உலகில் பல நாடுகளில் பெரும்பான்மையான பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டும், நம் நாட்டில் அவை பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஐ.நா.வின், உலக சுகாதார நிறுவனத்தின், விஞ்ஞானிகளின், அறிவியலாளர்களின் பல ஆவணங்கள், ஆய்வுக்குறிப்புகள், படிப்பினைகள் இவற்றை நிரூபித்துள்ளன. அதனால்தான் இன்றைக்கு உலகின் எல்லாப் பகுதிகளிலும் ஆர்கானிக் எனப்படும் நஞ்சற்ற உணவுக்குப் பெரும் ஆதரவு கிடைத்துவருகிறது.
அப்படி என்றால் அரசுகள் ஏன் இந்தக் கொடிய பூச்சிக்கொல்லிகளை-நஞ்சுக்களைத் தடை செய்யவில்லை?
இதில் அரசியல் முதல் முதலாளித்துவம், பெருநிறுவன ஆதிக்கம் எனப் பல அம்சங்கள் கலந்து கிடக்கின்றன. ஒரு புறம் வேளாண் கல்லூரிகள் முதல் அரசு விவசாயத் துறையினர்வரை பூச்சி மேலாண்மை சார்ந்து ரசாயன வழிமுறை இல்லாத வேறு வழிமுறைகளை, பரிசோதனைகளை, ஆராய்ச்சிகளை முன்னிலைப்படுத்தவில்லை. நமது மரபு வழிமுறைகளில் பல பெரும் பலன் தருவனவாக இருந்த அதேநேரம், புதிய வழிமுறைகளைக் கையாண்டிருந்தால் குறைந்த முதலீட்டில்/செலவில் இன்னும் பல நன்மைகள் கிடைத்திருக்கும்.
உலகம் முழுவதும் உள்ள சில வேளாண் கார்ப்பரேட் நிறுவனங்களின் சூது, பெரு லாப நோக்கம், சந்தையில் ஆதிக்கம் செலுத்த அரசுகளையும் அவற்றின் கொள்கைகளையும் தமக்குச் சாதகமாக வளைத்து வைத்திருக்கின்றன. அப்படி இருந்தும் உலகெங்கிலும் பூச்சிக்கொல்லிகள் - வேளாண் நச்சுகளின்
கொடிய விளைவுகளின் காரணமாகவும், அவற்றின் வீரியம்/பயன் குறைந்து வருவதாலும், அவற்றைத் தரவரிசைப்படுத்தி கொடியவை, மிக ஆபத்தானவை என்று வரையறுக்கப்பட்ட குறியீடுகளைப் பூச்சிகொல்லிகளின் மீது பொறிக்க வேண்டும் என ஐ.நா. கூறியுள்ளது. இதில் மிகக் கொடியவை தடையும் செய்யப்பட்டுள்ளன.
அப்படி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட பல்வேறு ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் இன்றும் நமது நாட்டில் புழக்கத்தில் உள்ளன. அவற்றைத் தவிர்த்து நஞ்சுகளில்லா வேளாண்மையைக் கடைப்பிடிக்க நமது உழவர்கள் முன்வர வேண்டும்.
அதற்குப் பொது மக்களிடமிருந்தும், படித்த அறிஞர்களிடமிருந்தும், ஆர்வலர்களிடமிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக, நுகர்வோர் - சிவில் சமூக அமைப்புகளின் அழுத்தத்தாலேயே கேரள அரசு பல ஆண்டுகளுக்கு முன்பே மாநிலத்துக்கான ‘உயிர்ம வேளாண் கொள்கை’யை அறிவித்தது.
அரசு மாறினாலும் இந்தக் கொள்கையின் தீவிரம் குறையாது. தமிழகம் போன்ற மற்ற மாநிலங்களிலிருந்து இறக்குமதி ஆகும் வேளாண் பொருட்களில் (காய் கனிகள்) நஞ்சில்லா உணவாக இருக்க வேண்டுமென இன்றைக்கு
அம்மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்துகிறது. ஆக தனி மனித நுகர்வு, பொதுவாக சமூகம் விழிப்புடன் இயங்குதல், அரசின் கொள்கைகள் எனப் பலவும் சேர்ந்துதான் நஞ்சில்லாத வேளாண்மை - உணவு சார்ந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்
கட்டுரையாளர்,
இயற்கை வேளாண் நிபுணர்
தொடர்புக்கு:
organicananthoo@gmail.com