Published : 18 May 2019 12:30 PM
Last Updated : 18 May 2019 12:30 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 28: நீர்நாய் கொடுமீன் மாந்தி…

கோயம்புத்தூரில் நான் வசித்த ஆண்டுகளில், வால்பாறைக்கு அவ்வப்போது பயணித்தது உண்டு. அங்கு சில நண்பர்கள் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஆளியாற்றைக் கடந்து, மலைச்சாலைத் தொடக்கத்தில் வனத்துறை சோதனைச்சாவடி ஒன்று உண்டு. இடப்புறம் ஆளியாறு நீர்த்தேக்கத்தின் ஓரம். நீர்நாய்களைப் பார்ப்பதற்காக அந்தச் சாலைக்கு அருகே நிற்போம்.

அந்த இடத்துக்குக் குழந்தைகள் வைத்திருந்த பெயர் ‘நீர்நாய் நிறுத்தம்’. சிறிது நேரத்தில் ஐந்தாறு நீர்நாய்களைக் கரையோரத்தில் காண முடியும். அவை ஒன்றையொன்று நீரில் துரத்தி விளையாடுவத்தை சலிக்காமல் பார்த்துக்கொண்டிருக்கலாம்.

தொல் தமிழ்ப் பெயர்

இந்த விலங்கின் பெயரைப் பற்றி எனக்குள் வெகுநாளாக ஒரு கேள்வி இருந்தது. பொதுவாகத் தமிழில் ஒரு உயிரினத்தின் பெயர், ஒரே சொல்லாக இருக்கும் - யானை, மயில் என. வேற்று நிலத்து உயிரினங்களின் தமிழ்ப்பெயர் இரு சொற்களைக் கொண்டதாக இருக்கும் - ஒட்டகச்சிவிங்கி, நீர்யானை, வரிக்குதிரை என. ஆகவே, நீரில் மீன்பிடித்து வாழும் நம்மூர் உயிரினத்துக்கு வேறொரு பெயர் இருந்திருக்குமோ என குழம்பிக்கொண்டிருந்தேன்.

அப்போது, கனடாவில் பணிபுரிந்துகொண்டிருக்கும் செ.இரா. செல்வகுமாரின் முகநூல் நட்பு கிடைத்தது. அவர் சங்கத்தமிழ் ஆய்வில் விற்பன்னர், அவரிடம் இந்த உயிரினம் பற்றிக் கேட்டபோது, சங்கப்பாடல்களில் எட்டு இடங்களில் நீர்நாய் என்ற பெயர் வருவதை சுட்டிக்காட்டினார்.

அதில் ஒன்றுதான் நற்றிணையில் வரும் ‘நீர்நாய் கொடுமீன் மாந்தி' என்ற வரி. அதே பெயர் இன்றும் புழக்கத்தில் இருப்பதுதான் சிறப்பு. அது மட்டுமல்ல. என் நண்பர் சுட்டிக்காட்டிய எல்லா எடுத்துக்காட்டுகளும் நீர்நாயின் நடவடிக்கைகளை வர்ணிக்கின்றன.

அந்நியமான ஆய்வாளர்கள்

நம் நாட்டில் காட்டுயிர் பற்றி ஆய்வு செய்பவர்களில், செய்து முடித்து பணியாற்றிக்கொண்டிருப்பவர்களில் பெருவாரியானவர்கள் ஆங்கில மொழியில் படித்தவர்கள். அவர்கள் தமிழில் பேசினாலும்கூட, அதன் பாரம்பரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டே இருக்கிறார்கள். ஆகவே, பழந்தமிழ்ப் பாடல்களில் பல உயிரினங்களைப் பற்றிய தகவல்கள் பதிவுசெய்யப்பட்டிருப்பதை அவர்கள் கண்டுகொள்வதில்லை.

ஆனால், இப்பதிவுகள் நமது காட்டுயிர் வரலாற்றுக்கும் ஆய்வுக்கும் மிக முக்கியமானவை. இன்று இங்கில்லாத சில உயிரினங்கள் முன்பு தமிழகக் காடுகளில் இருந்தது பற்றிய குறிப்புகள் இருப்பதை, அவர்கள் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, கானமயில் (The Great Indian Bustard). அதேபோல் இன்றிருக்கும் உயிரினங்கள் சில தொல்லிலக்கியத்தில் வேறு பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கலாம். காட்டுயிர் பற்றிப் பழங்குடியினரின் பட்டறிவும் பதிவு செய்யப்படுவதில்லை.

அழிவுக்குத் தள்ளப்படும் நீர்நாய்கள்

தமிழகத்தில் இரு வகை நீர்நாய்கள் உண்டு. நீர்நிலைகளில் பகலில் நம்மால் காண முடிவது பெரிய வகை நீர்நாய் (Smooth-coated otter), மீன்களை இரையாகக் கொள்ளும். அதற்கேற்ப நீந்தி மீனைப் பிடிக்க, இதன் கால்களில் வாத்துக்கு இருப்பதுபோல் விரலிடைத்தோல் உண்டு. நீண்ட, பட்டையான வால், துடுப்புபோல் பயன்படுகிறது. சிறுசிறு கூட்டங்களாக, பத்து முதல் பதினைந்துவரை காணப்படும்.

நீர்நிலைகளுக்கு அருகே பொந்துகளில் வாழும். இரவில் இரைதேடும் சிறிய வகை நீர்நாய் (Small-clawed otter) இதே பகுதிகளில் வாழ்ந்தாலும், அதைப் பார்ப்பது அரிது. உலகிலுள்ள நீர்நாய்களிலேயே உருவில் சிறிதான இந்த இரவாடி நண்டு, நத்தை போன்றவற்றை இரையாகக் கொள்ளும்.

vaanagame-2jpgபெரிய வகை நீர்நாய்

மற்ற காட்டுயிர்களுக்கு உள்ளதைப் போலவே, நீர்நாய்களுக்கும் இது கெட்ட காலம். புலி, சிறுத்தை போன்ற கவர்ந்திழுக்கும் சிறப்புப் பெற்ற, உருவில் பெரிய உயிரினங்களுக்குக் கூடுதல் கவனிப்பைக் கொடுக்கும்போது, நீர்நாய் போன்ற சிற்றுயிர்கள் ஓரங்கட்டப்படுகின்றன. பட்டு போன்ற ரோமப் போர்வைக்காக, இவை பொறிவைத்துப் பிடிக்கப்படுகின்றன. சீனாவில் இந்தத் தோலுக்குப் பெரும் கிராக்கி.

சில இடங்களில் மீன்பிடிக்கப் பயன்படுத்தும் வெடிகளுக்கு நீர்நாய்கள் பலியாகின்றன. மணற்கொள்ளையால் இவற்றின் வாழிடம் அழிக்கப்படுகிறது. தமிழகத்தில் அமராவதி, பவானி போன்ற பல ஆறுகள் நீர்நாய்களுக்கு வாழிடமாக இருந்திருக்கின்றன. அணைகள் கட்டப்பட்டு, ஆறுகளின் ஓட்டம் தடை செய்யப்பட்டபோதே இவற்றின் வசிப்பிடம் சுருங்க ஆரம்பித்து. இப்போது ஆளியாறு நீர்த்தேக்கத்தில் நீர்நாய்களைக் காண்பது அரிது என்றறிகிறேன்.

பாதுகாக்கும் இளைஞர்கள்

பெங்களூருவில் வாழும் நிசர்க் பிரகாஷ், ஒரு கணினிப் பொறியாளராக இருந்து காட்டுயிரியலாளராக மாறிய இளைஞர். நீர்நாய் குறித்த ஆய்வு, பாதுகாப்புக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். காவிரி ஆறு நீர்நாய்களின் தாய் வீடு என்கிறார். ஆனால், இன்று இந்த வாழிடம் பேரளவில் சீரழிக்கப்பட்டுவிட்டது. பிரம்மேஸ்வரி போன்ற சில இடங்களில் நீர்நாய்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.

குஷால் நகர் அருகே காவிரி ஆற்றிலுள்ள நிசர்கதாம என்ற சிறு தீவில் பல நீர்நாய்க் கூட்டங்களை என்னால் காண முடிந்தது. கடந்த ஆண்டு திருச்சி உய்யக்கொண்டான் கால்வாயில் இரண்டு நீர்நாய்களை ஒருவர் பார்த்து, படமும் எடுத்து முகநூலில் பதிவிட்டார். சில நாட்களுக்குப் பின் அவை தென்படவில்லை, காவிரிக்கே சென்றுவிட்டதாகச் சொல்லப்பட்டது.

நம்மூரில் பல சிற்றுயிரினங்களின் அழிவு கவனிக்கப்படுவதே இல்லை. குள்ளநரியை யார் நினைவில் வைத்திருக்கிறார்கள்? நமது புதர்க்காடுகளில் வாழும் சிறு பூனை அளவேயுள்ள முள்ளெலிகூட, வாழிட அழிப்பால் மறைந்து வருகிறது. ஒரே ஒரு முறை ராஜ்கோட் அருகே இரவில் காரில் சென்றபோது சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு முள்ளெலியைப் பார்க்க முடிந்தது.

தென்தமிழகத்தைச் சேர்ந்த பிரவிண் குமார் என்ற இளைஞர் இந்தத் தளத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுசெய்து வருகிறார். பீஜிங் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட நேர்காணலுக்கு அவர் தயாராகிக்கொண்டிருக்கிறார். இவர் தமிழில் எழுதுகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x