

பனை ஓலையில் செய்யும் பொருட்கள், மிக அதிக அளவில் ஓலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். அதற்குக் காரணம், ஓலைகள் மிக அதிகமாகவும் தாராளமாகவும் கிடைத்ததும்தான். இவ்விதம் அதிக ஓலைகளைப் பயன்படுத்திச் செய்யும் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே.
ஆகவே ஓலைகளைக் குறைவாகப் பயன்படுத்தி என்னமாதிரிப் பொருட்களைச் செய்யலாம் என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. அதே நேரம் குறைந்த ஓலைகளைப் பயன்படுத்தும்போது, எப்படி அதிக லாபத்தை சம்பாதிப்பது என்ற கேள்வியும் எழுந்தது.
அப்படித்தான் ஒற்றை ஓலைப் புரட்சி என்ற கருத்தாக்கம் என்னுள் பரவியது. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஒருநாள், ஓலையில் ஒரு புத்தகக் குறிப்பான் செய்தால் என்ன என்ற கேள்வி எழுந்தது. அதை ஒட்டி, ஒற்றை ஓலையில் பல்வேறு உருவங்களைச் செய்தேன். இவற்றை வெளிநாடு செல்லும் நண்பர்கள், தங்களுடன் பரிசுப் பொருளாக எடுத்துச் சென்றனர். அத்தனைக்கும் டாலர் மதிப்பில் பணம் கிடைத்தது. இச்சூழலில்தான் இன்னும் சற்று மெருகேற்றினால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டு, ஓலையில் நிழலுருவப்படம் செய்யும் கலையைக் கண்டடைந்தேன்.
நிழலுருவப் படம் (silhouette) என்பது 18-ம் நூற்றாண்டில் உருவான ஒரு கலை வடிவம். ஒருவரின் பக்கவாட்டுத் தோற்றத்தை நிழலாக வரைந்துகொள்ளும் நுட்பம் அப்பொழுதுதான் உருவானது. பின்னர், இங்கிலாந்து மகாராணியின் நிழலுருவப் படம் தாங்கிய ஸ்டாம்புகள் வெளியாயின. இவ்விதம் இக்கலை மிகவும் பிரபலமாக இருந்தது. பின்னர், நவீன வகை ஓவியங்களின் தத்ரூபம் இவற்றில் இல்லாததால் மெல்ல இதன் முக்கியத்துவமும் மறைந்துபோயிற்று.
பல்வேறு வருடப் பரிசோதனைக்கும் பயிற்சிக்கும் பின், ஓற்றை ஓலையில் ஒரு மனித நிழலுருவப் படம் செய்வது எப்படி எனக் கண்டடைந்தேன். அவற்றை எனது ரயில் பயணங்களில் கூர்தீட்டிக்கொண்டேன். அருகிலிருக்கும் பயணிகள் விரும்பும் பட்சத்தில், ஓலையில் அவர்கள் நிழலுருவப் படத்தைச் செய்து கொடுப்பதன் வாயிலாகப் பனை சார்ந்த விழிப்புணர்வினை கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாகச் செய்து வருகிறேன். ஒரு படத்தைச் செய்து முடிக்க இரண்டு நிமிடங்களே போதும் எனும் அளவுக்கு தற்போது தேர்ச்சி பெற்றுவிட்டேன்.
இன்று, இவ்விதம் நான் செய்யும் நிழலுருவப் படங்களைக் கொண்டே எனது பனை சார்ந்த விழிப்புணர்வுப் பணிகளைச் செய்துவருகிறேன். ஒரு தனி நபரது முக வடிவை ஓலையில் எடுத்துக்கொடுக்கையில், அவர்களது மகிழ்ச்சி என்பது அளவிட முடியாத வகையில் அதிகமாகிவிடுகிறது. ஆகவே, மகிழ்வுடன் இதைச் செய்துவருகிறேன். எனது பனை விழிப்புணர்வு பணிக்கென உதவுபவர்களுக்கு இவற்றை இலவசமாகவே செய்துகொடுப்பது எனது வழக்கம். ஒருவர் தனது நிழலுருவப் படத்தை (ஒளிப்படம் அல்ல) அனுப்பினால், அப்படியே அதை ஒற்றை ஓலையில் செய்துகொடுத்துவிட முடியும். விருப்பமுள்ள்வர்கள் 9080250653 என்ற எண்ணுக்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com