

உலகப் புத்தக நாள் ஏப்ரல். 23
பல வகையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் இந்திய விவசாயத்தின் எதிர்காலத் திசையைத் தேடும் ஒரு முயற்சி என இந்த ‘உழவின் திசை’ நூலைச் சொல்லலாம். இதன் ஆசிரியர் அ.முத்துக்கிருஷ்ணன்.
இந்திய விவசாயம் உலகப் போர்களுக்குப் பின்னால் தன் பாரம்பரியத்தை இழந்ததை அரசியல் விழிப்புணர்வுடன் இந்தப் புத்தகம் சொல்கிறது. போர்களில் பயன்பட்டு வந்த அமோனியா பின்னால் விவசாயத்து இடம் மாறியதையும் அமோனிய ஆலைகள் பின்னால் உரத் தொழிற்சாலைகளாக மாறியதையும் நூல் சொல்கிறது.
பயிருக்கு உரம் என்பதுதான் முறை. ஆனால், பின்னால் அவர்களது உரத்துக்குத் தகுந்தாற்போல் பயிர் என மாற்றியிருக்கிறார்கள். அதாவது பயிர்களின் இயல்பை உயிரியல் தொழில்நுட்பம் கொண்டு மாற்றியிருக்கிறார்கள். மரபணு மாற்றப்பட்ட விதைகள் இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்திய தாக்குதலையும் இந்தப் புத்தகத்தின் வழி சான்றுகளுடன் நூலாசிரியர் முன்வைக்கிறார். அமெரிக்க விதை நிறுவனங்கள் 1,50,000 இந்தியப் பாரம்பரிய விதைகளைத் திருடியதையும் தன் கட்டுரை மூலம் அம்பலப்படுத்துகிறார்.
விளைபொருட்களுக்கான விலை குறைந்து வருவதை நூலாசிரியர் ஒரு கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், இடுபொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதையும் சொல்கிறார். அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கிவருகின்றன. ஆனால் இந்தியா வழங்கக் கூடாது என அந்நாடுகள் பரிந்துரைப்பதன் பின்னணியும் முத்துக்கிருஷ்ணன் அலசுகிறார்.
ஆயுத உற்பத்தித் தொழிலுக்கு அடுத்தபடியாக உயிரியல் தொழில்நுட்பத் தொழில் அமெரிக்காவின் செல்வாக்கு மிக்கத் தொழிலாக ஆனதையும் அது இந்திய போன்ற நாடுகளில் நிகழ்த்தும் தாக்கத்தையும் தெளிவாகப் புத்தகம் விளக்குகிறது. பட்டினி போக்க மரபீனி மாற்றப்பட்ட விதைகளை விற்க அந்நிறுவனங்கள் செய்யும் திரைமறைவு வேலைகளையும் முத்துக்கிருஷ்ணன் அம்பலப்படுத்துகிறர்.
இம்மாதிரி மாற்றங்கள் இந்தியச் சமூகத்தில் நிகழ்த்திய துயரமான விளைவுகளையும் அவர் அக்கறையுடன் பகிர்ந்துள்ளார். பஞ்சம் பிழைப்பதற்காக வட இந்தியர்கள் இடம் பெயர்வதையும் இத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்கிறார். இடுபொருள் வாங்கக் கடன் வாங்கிய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை நூலாசிரியர் இதன் பெரும் பாதிப்பாகச் சொல்கிறார்.