சிறு துளி: அபூர்வமான அரிசி அறுவடை
ஒடிசாவில் அபூர்வமான பல அரிசி வகை விளைகிறது. அவற்றிலும் அபூர்வமான ஒரு மூங்கில் அரிசி இப்போது கட்டக் மாவட்டத்தில் உள்ள சண்டகா வனவிலங்கு சரணாலயத்தில் அறுவடைக்காகப் பூத்திருக்கிறது. 40 வருஷத்துக்கு முன்பு 1979-ல் இங்கு மூங்கில் அறுவடை செய்யப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் அறுவடை நடக்கிறது.
மூங்கில் மரம் 40 – 80 வருஷம் வரை உயிர் வாழக் கூடிய தன்மை கொண்டது. மூங்கில் பட்டுப் போகும் கடைசிக் காலத்தில் மூங்கில் அரசியாகப் பூக்கும். இதைத்தான் மூங்கில் அரசி என்கிறோம்.
இந்த மூங்கில் அரிசியை அறுவடை செய்வதற்காகp பழங்குடி மக்களுக்கு மாநில வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த அரிசி அறுவடைசெய்யப்படாமல் இருந்தால் எலிகளுக்கு இரையாகக் கூடும். மேலும் எலிகளின் எண்ணிக்கையும் பெருகும் அதைத் தவிர்க்கவே வனத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காட்டை நம்பி வாழ்பவர்களுக்கு இது ஒரு முக்கிய வாழ்வாதாரமாக ஆகும். இந்த மூங்கில் அரசி புரதச் சத்து கொண்டது.
மருத்துவ குணம் மிக்கது என்பதால் பழங்குடியினரிடம் இந்த அரிசியைச் சேகரித்துவைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு எனச் சொல்லப்படுகிறது. இந்த அரிசியை கிலோவுக்கு ரூ.15 கொடுத்து 80 குவிண்டல் வரை வனத் துறை பழங்குடியிடமிருந்து வாங்கிக்கொள்ளும். மாநிலத்தின் பல பாகங்களிலும் மூங்கில் வளர்க்க, அதை விதையாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். ஒரு நூற்றாண்டுக்கு இரண்டோ மூன்றோ முறை நடக்கும் நிகழ்வு என்பதால் இந்த அறுவடை முக்கியத்துவம் மிகுந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
நிலத்தை விற்கும் போக்கு
மகாராஷ்டிராவில் ஆரஞ்சுப் பழச் சாகுபடி பின்னடைவைச் சந்தித்துவருகிறது. அங்கு ஆரஞ்சு விளையும் வரூட்டில் இந்த நிலை விவசாயிகள் பலருக்கும் இருக்கிறது. இது விவசாயத் தற்கொலைக்குப் பேர்போன விதர்பா பகுதியைச் சேர்ந்த நகரம். இந்த நகரத்தில் விவசாயிகள் தற்கொலைகள் செய்வார்கள். ஆனால், நிலத்தை விற்க மாட்டார்கள். இப்போது அதுவும் நடக்கத் தொடங்கியிருக்கிறது.
ஆரஞ்சு விளைச்சலுக்குச் சீரான தண்ணீர் அவசியம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மழை பொய்த்துவருகிறது. நிலத்தடி நீரோ 1000 அடிக்குக் கிழே சென்றுவிட்டது. ஆனால் நீர் பாய்ச்சுவதற்குத் தேவையான மின்சாரம் தடங்கலின்றிக் கிடைப்பதில்லை. இந்தக் காரணங்களால் ஆரஞ்சுப் பழங்கள் சிறுத்துப் போய்விடுகின்றன. சிறிய பழங்களுக்கு சந்தையில் விலை கிடைப்பதில்லை. அதனால் அவர்களது வருமானம் ரூ.54 லட்சத்திலிருந்து இந்த ஆண்டு ரூ.5 லட்சமாக வீழ்ந்துவிட்டது. இதனால் பலரும் நிலத்தை விற்கும் நிலைக்கு வந்துள்ளனர்.
மழைப் பொழிவு எப்படி இருக்கும்?
இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை சராசரி அளவு பெய்யக் கூடும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பசிபிக் கடல் பகுதியில் எல்-நினோ அளவு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த வாரம் வெளியான ஸ்கைமேட் என்னும் தனியார் ஆய்வு நிறுவன ஆய்வறிக்கை, தென் மேற்குப் பருவ மழை சராசரிக்கும் கிழே குறையும் எனக் கணித்தது. இந்த நிறுவனம் பிப்ரவரி மாதத்தில் ஏற்கெனவே இந்த ஆண்டு சராசரி மழைப் பொழிவு இருக்கும் எனத் தெரிவித்திருந்தது. ஆனால், பிறகு எல்-நினோவில் ஏற்பட்ட பெரும் மாற்றத்தால் மழை அளவு குறையும் எனத் தெரிவித்தது.
மஞ்சள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு மஞ்சள் சந்தையில் மஞ்சள் வரத்து அதிகரித்துள்ளது. தரம் மிகுந்த மஞ்சளும் சுமார் ரக மஞ்சளும் சந்தைக்கு வந்துள்ளன. கடந்த வார நிலவரப்படி 5,500 மூட்டைகள் மஞ்சள் வந்துள்ளன. இதில் 75 சதவீதம் விற்பனை ஆகிவிட்டன என ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ரவிஷங்கர் தெரிவித்துள்ளார். விராலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.100 வரை அதிகரித்துள்ளது.
வேர் மஞ்சள் விலையும் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
