

சுற்றுச்சூழல், காட்டுயிர்கள், இயற்கை குறித்த நெடிய வரலாறு கொண்டது தமிழ் மொழி. இயற்கை சார்ந்த அவதானம்-அக்கறை என்பது தனித்த ஒன்றாக இல்லாமல், தமிழ்ப் பண்பாட்டுடன் இயல்பாகவே முகிழ்ந்த ஒன்றாக இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு உள்ளூர் மொழியில் இயற்கை குறித்து மா. கிருஷ்ணன் உள்ளிட்டோர் எழுதினார்கள் என்றாலும் அறிவியல், இயற்கை குறித்த கவனம் பரவலாகவில்லை. அதனால் அவரைப் போன்ற எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் எழுத நகர்ந்தார்கள்.
அஞ்சல் துறையில் முக்கியப் பதவிகள் வகித்திருந்த சு.தியடோர் பாஸ்கரன் ‘கசடதபற' காலத்திலேயே தமிழில் எழுதத் தொடங்கிவிட்டாலும் திரைப்படம் சார்ந்து எழுதுபவர் என்ற பிம்பமே இருந்துவந்தது. ஆங்கிலத்தில் இயற்கை, காட்டுயிர்கள் குறித்துத் தொடர்ச்சியாக அவர் எழுதி வந்திருந்தபோதும்கூட, திரைப்படம் சார்ந்த எழுத்தாளராக மட்டுமே தமிழ்ச் சிற்றிதழ்கள் அவரைக் கருதி வந்தன.
இதற்கிடையில் 'உயிர்மை' இதழ் தொடங்கப்பட்ட காலத்தில் 'மூங்கில் இலை மேலே' என்ற தலைப்பில் இயற்கை, காட்டுயிர்கள் குறித்து அவர் எழுதத் தொடங்கினார். அந்தத் தொடரில் இடம்பெற்ற கட்டுரைகளும், மற்ற இதழ்களில் அவர் எழுதிய அதே துறை சார்ந்த கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நான்கு தொகுதி நூல்களாக வெளியாகியுள்ளன.
இந்தியாவில் உலகமயமாக்கல் நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கிய பிறகு, இயற்கையும் காடுகளும் கடுமையாக அழிக்கப்பட ஆரம்பித்தன. இருந்தபோதும், தமிழில் 2000-க்குப் பிறகே சுற்றுச்சூழல் சார்ந்த சொல்லாடல் மெல்லக் கவனம் பெறத் தொடங்கியது. ‘உயிர்மை' இதழில் பாஸ்கரன் தொடர் எழுதத் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில்தான். அந்தத் தொடர் தமிழில் சுற்றுச்சூழல்-இயற்கை சார்ந்த பரவலான கவனத்தை உருவாக்கியதில் முக்கியப் பங்காற்றியது.
ஏற்கெனவே ஆங்கிலத்தில் இதே துறை சார்ந்து எழுதியிருந்த பழக்கம் காரணமாகவே, தமிழில் பாஸ்கரன் எழுதிவிடவில்லை. பண்டைத் தமிழ் இலக்கியம் சார்ந்தும், இயற்கை-காடுகள்-உயிரினங்கள் தரும் படைப்பூக்க தரிசனம் சார்ந்தும் தமிழ் இயற்கைச் சொல்லாடலை அவர் நகர்த்தினார்.
அத்துடன் வறட்டு அறிவியல் வாதமாகவோ மொழி பெயர்ப்பாகவோ இயற்கை சார்ந்த எழுத்தை முன்னிறுத்தாமல், தமிழ் இயல்புடன் அந்தச் சொல்லாடலை உருவாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். பழைய தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்துப் பயன்படுத்துவது அல்லது பொருத்தமான-சுருக்கமான புதிய தமிழ் கலைச்சொற்களைத் தன் கட்டுரைகளில் பயன்படுத்தி தமிழ்ப் பசுமை இலக்கியத்தைக் கட்டமைப்பதில் ஈடுபட்டார்.
அவருடைய கட்டுரைகளைத் தொகுப்பாக வாசிக்கும்போது மேற்கண்ட தன்மைகளை உணர முடிகிறது. கடந்த 15 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இயற்கை-சுற்றுச்சூழல் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பே ‘கையிலிருக்கும் பூமி' என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளது.
பாஸ்கரனுடைய எழுத்தின் மற்றொரு முக்கிய அம்சம், மனிதர்களையோ அறிவுத் துறையினரையோ ‘ஏன் இப்படிச் செய்யவில்லை?', ‘ஏன் அது நடக்கவில்லை?' என்று குற்றவாளிக் கூண்டில் ஏற்றி குறுக்குக் கேள்வி கேட்பதாக இல்லாமல், மனிதர்களுடைய குற்றவுணர்வைத் தூண்டி - ‘நாம் தானே இதைப் பாதுகாக்க வேண்டும்', ‘இப்படி ஒரு புதையலை அழியக் கொடுக்கிறோமே' என்ற கரிசன உணர்வை ஏற்படுத்துவது. மனிதர்களுடையே ஆழ்மனங்களில் பொதிந்து கிடக்கும் இந்தக் கரிசன உணர்வை மேம்படுத்துவதில் அவருடைய முக்கியக் கட்டுரைகள் பெருமளவு வெற்றி பெற்றுள்ளன என்பதை இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது உணர முடிகிறது.
கையிலிருக்கும் பூமி, சு. தியடோர் பாஸ்கரன்,
உயிர்மை வெளியீடு, தொடர்புக்கு: 044-48586727