

கடந்த ஆண்டு நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ் எழுத்தாளர்கள் பன்னாட்டளவில் அங்கீகரிக்கப்படாததற்கு ஒரு காரணம், அவர்களது படைப்புகள் தரமாக மொழிபெயர்க்கப்படாததுதான் என்றது வலைத்தளத்தில்வெளியான ஒருகட்டுரை. புனைவிலக்கியம், அதிலும் கவிதைகளைமொழிபெயர்க்க இங்கு வெகு சிலரே உள்ளனர்.
ஆனால், நான் அதிகம் கவலைப்படுவது கடந்த இருபது ஆண்டுகளில் இயற்கை சார்ந்த புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்ப்பு என்ற பெயரில் சிதைக்கப்படுவதைப் பற்றித்தான். புறச்சூழல் அல்லது காட்டுயிர் பற்றிய கூருணர்வு சிறிதும் இல்லாதவர்களால் நூல்கள் மொழியாக்கப்பட்டுச் சீரழிக்கப்படுகின்றன.
இலக்கிய உலகில் நுழைவதற்கு ஒரு குறுக்கு வழியாக மொழிபெயர்ப்பு சிலருக்குத் தோன்றுகிறது. ‘எனக்குத் தமிழ் தெரியும், கொஞ்சம் ஆங்கிலமும் தெரியும்’ என்ற அடிப்படையில் மட்டுமே மொழிபெயர்க்கப் பலரும் துணிந்துவிடுகிறார்கள்.
இயற்கை, தொல்லியல், இசை, காட்டுயிர் போன்ற ஒவ்வொரு துறைக்கும் துறை சார்ந்த கலைச்சொற்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தளம் இருக்கிறது.
அது சார்ந்த பல நூல்கள்தமிழில் வெளிவந்துள்ளன. இணையதளத்தில் இது பற்றிய பல தரவுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பற்றி ஒன்றும் அறியாமல், மொழிபெயர்க்க முற்படக் கூடாது.
தவறுகளின் குவியல்
இதில் பெரிய ஆபத்து என்னவென்றால் ஒரு துறையில் வெளிவந்த, முக்கியமான நூல்முறையாக மொழி பெயர்க்கப்படாததால்கொல்லப்பட்டுவிடுகிறது. அதே புத்தகத்தை மறுபடியும் மொழிபெயர்க்க யாரும் கையில் எடுக்க மாட்டார்கள்.
இந்த நூலும்அதன் தாழ்ந்ததரத்தால் தமிழ்வாசகர்களைச் சென்றடையாமல் மறக்கப்பட்டு விடும். எண்பதுகளில்நேஷனல் புக்டிரஸ்ட் வெளியிட்டகாட்டுயிர் பற்றி சில நூல்கள் இயற்கைபற்றிய பரிச்சயமற்றவர்களால் மொழிபெயர்க்கப்பட்டன.
இதில் சாலிம்அலியின் புகழ்பெற்ற ‘இந்தியப்பறவைகள்’ என்றநூலும் அடங்கும். தவறுகளின் மொத்தக் குவியலாக உருவாக்கப்பட்ட முக்கியமான அந்தப் புத்தகங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.
பறவைகளுக்கும் பாலூட்டிகளுக்கும் தமிழில் பெயர்கள் இருக்கின்றன என்பதுகூடத் தெரியாமல், ஆங்கிலப் பெயர்களை அப்படியே அந்தப் புத்தகங்களில் மொழிபெயர்த்திருந்தார்கள். Barking Deer என்பது ஓர் இரலையினம்.
தமிழ்நாட்டுக் காடுகளில் எளிதாகக்காணக்கூடியதும்கூட. மக்கள் இதைக் கேளையாடு என்கிறார்கள். இதை ‘குரைக்கும்மான்’ என்றுபதிவுசெய்திருக்கிறார் அந்த மொழிபெயர்ப்பாளர். ஏற்கெனவே புழக்கத்தில் உள்ள சொற்றொடர்களைப் புதிதாக மொழிபெயர்த்துக் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.
மொழிபெயர்ப்பு அடிப்படைகள்
இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர்ஆகியவை பற்றியபட்டறிவு அடிப்படைஅளவிலாவது இருக்க வேண்டும்.
அது மட்டுமல்ல. இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.
கிரிக்கெட்விளையாட்டைப் பற்றி ஒன்றுமே தெரியாமல், அது பற்றிய நூலை ஒருவர் மொழிபெயர்க்க முயன்றால் He drove to silly point என்பதை, ‘அவன்முட்டாள் புள்ளிக்குகாரோட்டினான்’ என்றுகூட எழுதக்கூடும். அகராதிகளை மட்டும் நம்பி யாரும் மொழிபெயர்ப்பில் இறங்க முடியாது.
அத்துடன் யாருக்காக ஒரு நூல் மொழியாக்கப்படுகிறது என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். தமிழ்மொழி மரபுக்கு ஏற்ப மொழிபெயர்ப்பு அமைய வேண்டும். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது செயற்பாட்டு வினை, செய்வினை வேறுபாடு உணரப்பட வேண்டும்.
ஆங்கிலத்தில் பொதுவாகச் செயற்பாட்டு வினையில் (Passive voice) எழுதுவார்கள். அது தமிழில்எழுதப்படும்போது செய்வினையில் (Active voice) வர வேண்டும். இல்லையென்றால் படிக்கும்போது நெருடல் ஏற்படும். இது அடிப்படையானது.
அதேபோல And என்ற சொல்லை மற்றும் என்று மொழிபெயர்க்க வேண்டியதில்லை. ஒரு ‘கமா’ குறி போதும். அல்லது உம்வேற்றுமை உருபுபோடலாம். Kumar and Vishnu came. இதைத் தமிழில் குமாரும் விஷ்ணுவும் வந்தார்கள் எனலாம். தமிழில் துறை சார்ந்த மரபுச் சொற்கள், உருவகங்கள், உவமைகள், பழமொழிகள் நிறைய உண்டு. அவை பயன்படுத்தப்பட வேண்டும்.
மொழி அடிப்படைகள்
தமிழ் குரல் ஒலி சார்ந்த (phonetic) ஒரு மொழி. எழுத்தில் என்ன இருக்கிறதோ அதை உச்சரிக்கிறோம். ஐரோப்பிய மொழிகள்வேறுபட்டவை. அவற்றில்எழுதப்படும் எல்லா எழுத்துக்களும் உச்சரிக்கப்படுவது இல்லை.
எடுத்துக்காட்டு Psychology. பல பெயர்களின் உச்சரிப்பு, எழுத்தப்பட்ட ஒலிகளில் இருந்து வேறு பட்டிருக்கும். ஒருவேற்று மொழிப்பெயர் எவ்வாறுஉச்சரிக்கப்படுகிறதோ, அப்படித்தான் தமிழில் எழுதப்பட வேண்டும். Delacroix என்ற பிரஞ்சு ஓவியர் பெயர் ‘டெலக்வா’ என்று உச்சரிக்கப்படுகிறது.
ஊர்ப் பெயர்கள், ஆள் பெயர்கள் சரியானஉச்சரிப்புடன் எழுதப்பட வேண்டும். Cannes Film festival என்பது ‘கான்திரைப்பட விழா’ என்றிருக்க வேண்டும். கான்ஸ் அல்ல. அதேபோல் ஆதிச்சநல்லூரில் முதல் அகழாய்வை மேற்கொண்டவர் Alexander Rea. இப்பெயர் அலெக்சாண்டர் ரீ என்று உச்சரிக்கப்பட, எழுதப்பட வேண்டும்.
ரீயா அல்ல. மேலைநாட்டுப்பெயர்களின் உச்சரிப்பை கூகுளில் கேட்டு அறிந்துகொள்ளலாம். இப்படிப்பெயர் சார்ந்த தவறுகள் இந்த மொழிபெயர்ப்புநூல்களில் மலிந்து கிடப்பதைக் காணலாம். அத்துடன்நிறுத்தக்குறிகள் சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான், பொருள் விளங்கும்.
தேர்ந்தெடுக்கும் தரம்
அ-புனைவுநூல்களை நூலகங்களுக்குஅரசு வாங்கும்போது, அவற்றின் தலைப்பின்அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கமிட்டியில் நான் ஒரு முறை இருந்தேன்.
எப்படிப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனஎன்பதை அப்போதுஅறிந்துகொண்டேன் புகழ்பெற்றமேற்கத்திய எழுத்தாளரின் மொழிபெயர்ப்புப் படைப்புகள் இருந்தால் எடுத்துக்கொள்வார்கள். மொழியாக்கத்தின்தரத்தையோ மொழிபெயர்ப்பாளரின்தகுதியையோ கவனிப்பது இல்லை. கல்லூரி நூலகங்களிலும் இதே நிலைதான்.
தரமான மொழிபெயர்ப்பு நூல்கள் வந்தால் தமிழில் பசுமை இலக்கியம்வளரும். சுற்றுச்சூழல்பற்றிய விழிப்பும்மக்களிடையே பரவலாகும்.அண்மையில் பீட்டர் வோல்லபென் எழுதிய The Hidden Life of Trees என்ற நூல்பெரும் தாக்கத்தைஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அதைப் படித்தபோது இது நமது மொழிபெயர்ப்பு ஆர்வலர்கள் கண்களில்பட்டுவிடக் கூடாதே என்ற பயமும் எழுந்தது.
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com