

தமிழ் நிலத்தின் தொன்மையான மரங்களுள் ஒன்று பனை. இது தமிழக அரசின் மரமாகவும் பனை இருக்கிறது. இந்தப் பனை மரம் பல்லாண்டுக் காலமாக தமிழ் மக்களின் வாழ்கையுடன் நெருக்கமான தொடர்புடையது.
உணவுப் பொருள், கட்டுமானப் பொருள், தொழிற்கருவி எனப் பலவகைப் பயன்படக்கூடியது பனை. அதன் ஒவ்வொரு பகுதியும் பயன்தரக்கூடியது பனை. அதனால்தான் ‘பனை நின்று ஆயிரம் பட்டு ஆயிரம்’ எனச் சொல்பவார்கள்.
அதாவது இருந்தாலும் இறந்தாலும் பயன்தரக்கூடியது அது. இந்தச் சிறப்பு மிக்கப் பனை மரம் இன்று மதிப்பற்றுப் போய்விட்டது. அதனால் அரிய பொருள்களுள் ஒன்றாகிவருகிறது. இந்த 21-ம் நூற்றாண்டில் அதை மீட்டெடுக்க வேண்டியது அவசியம்.
அதைச் செய்துவருபவர்களுள் முக்கியமானவர் பனை ஆய்வாளர் காட்சன் சாமுவேல். பனை குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் பொருட்டு அவர் மேற்கொண்ட பயணத்தின் தொகுப்புதான் ‘பனைமரச் சாலை’ என்னும் இந்நூல்.
இந்தியாவின் பல பாகங்களுக்குப் பயணித்துப் பனை மரங்களைத் தேடிப் பார்த்து, அந்த அனுபவத்தை ஆர்வத்துடன் பதிவுசெய்துள்ளார் காட்சன். பனை மரம் பண்பாட்டு வரலாற்றில் செலுத்திய தாக்கத்தையும் தன் பயணத்தின் வழியே உதாரணங்களுடன் இவர் விவரித்துள்ளார்.
மேலும் புழக்கத்தில் இருந்து அருகிப் போய்விட்ட பனைத் தொழில்சார் கருவிகளையும் இந்தத் தொகுப்பின் மூலம் இவர் கண்டறிந்துள்ளார். பனைத் தொழில் பல பகுதிகளில் எப்படி இருக்கிறது என்பதை நேரடியாகக் கண்டு,
அந்த முறையை மற்ற பகுதியின் தொழிலுடன் ஒப்பிட்டு ஒரு விரிவான சித்திரத்தை காட்சன் உருவாக்கிக் காட்டுகிறார்.
இறைப்பணியாளராக இருக்கும் அவர் இந்த மரத்துடனான சமயத் தொடர்பையும் இத்தொகுப்பில் ஆராய்கிறார். இந்து,
இஸ்லாமிய வழிபாட்டுச் சடங்கிலும் பனைக்குள்ள இடத்தையும் இந்த நூல் மூலம் காட்சன் கண்டறிந்துள்ளார். உதாரணமாக நாகூர் தர்காவில் விற்கும் பனை ஓலை அர்ச்சணைத் தட்டைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
இன்னொரு கட்டுரையில் ராமர் கட்டியதாகச் சொல்லபடும் இந்திய-இலங்கை இடையிலான தொன்மப் பாலத்தைப் பற்றிச் சொல்லும்போது அதில் குறிப்பிடப்பட்டிருந்த பனையின் முக்கியத்துவம் குறித்தும் சொல்கிறார்.
இந்தத் தொகுப்பில் ஆதாரமான அம்சம், பனைத் தொழில் சார்ந்து இயங்குபவர்களைச் சந்தித்து ஆவணப்படுத்துவது. அப்படி ஆவணப்படுத்துவதன் வழி பனை சார் தொழில்கள் குறித்து விழிப்புணர்வை உருவாக்குகிறார் காட்சன்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த பாரம்பரியமான பனை மரங்களை அழிவிலிருந்து மீட்க காட்சனின் இந்த முயற்சி துணை நிற்கும்.
பனைமரச் சாலை (கட்டுரைகள்)
ஆசிரியர்: காட்சன் சாமுவேல்
பக்கம்: 430, விலை: ரூ. 500
வெளியீடு: நற்றிணைப் பதிப்பகம்,
சென்னை
தொடர்புக்கு: 9486177208