கற்பக தரு 37: திருநீற்றுப் பெட்டி

கற்பக தரு 37: திருநீற்றுப் பெட்டி
Updated on
1 min read

சமயப் பற்றாளர்கள் சற்றே மனது வைத்தால் பனைத் தொழில் மட்டுமல்லாமல் பனை மரங்களும் நமது சூழலில் பெருகிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. தமிழ்ச் சூழலில் பனையை விலக்கிய சமய செயல்பாடுகள் அரிது என்பதை எனது நேரடிக் கள ஆய்வில் கண்டு உணர்ந்திருக்கிறேன். எண்ணிப் பார்க்க இயலாதபடி பனையும் சமயமும் பிரிக்கவியலாத் தொடர்புகொண்டவை.

தீயைக் கடவுளாக வழிபட்ட தொல் பழங்குடி வழக்கத்தில் சாம்பலுக்கும் முக்கியத்துவம் உண்டு. உலகெங்கிலும் சாம்பலை உடலின் மீது பூசிக்கொள்ளும் வழக்கம் தொல் பழங்குடியினரிடம் இருந்துவருகிறது. அது ஒரு இனக்குழுவை அடையாளம் சுட்டும் குறியீடாகச் செயல்படுகிறது. குமரி மாவட்டத்தில் நீறு பூசுவதை ‘நாமம் இட்டுக்கொள்வது’ என்பார்கள்.

பிச்சை எடுக்கவரும் துறவிகள் முன்பெல்லாம் இவ்வித நாமப் பெட்டிகளுடன் வருவது வழக்கம். மேலும் அய்யாவழி வழிபடுபவர்களும் தங்கள் நெற்றியில் இடும் நாமப் பொடியை அழகிய பெட்டியிலேயே தொங்கவிடுவது வழக்கம்.

ஓலைப்பெட்டியில் மூன்று முக்குப் பெட்டி என்ற வடிவில் செய்யப்படும் இரு பெட்டிகளை இணைத்து செய்யப்படுவதுதான் நாமபெட்டி. இப்பெட்டிகளின் அடிப்பாகம் கூம்பு வடிவத்தில் இருப்பது தனித்துவமானது. உறி போன்று கட்டிவிடப்படும் இப்பெட்டிகளின் வடிவமைப்பு வெகு தொன்மையானது. கீழ்ப் பகுதி நீளமாகவும் மேல் பகுதியிலுள்ள பெட்டி கீழே இறங்கி வராமல் இருக்கவும் பனை நாரை முடிச்சிட்டு வைத்திருப்பார்கள்.

குடைபோன்ற மேலிருக்கும் அமைப்பு, திருநீற்றைப் பாதுகாக்கும் வழியமைப்புடன் காணப்படுவது சிறப்பு. பாலைவனப் பகுதிகளிலுள்ள தூபம் காட்டும் கலசங்களைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப் பயன்பாட்டுப் பொருளுக்கும், அரபு நாட்டுப் பகுதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது ஆராயத்தகுந்தது.

இந்தப் பெட்டிகளைப் பூஜையறையில் தொங்கவிடுவதற்கோ, ஆலயங்களில் விபூதி அளிப்பதற்கோ பயன்படுத்திக்கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் கொண்டாடும் சாம்பல் புதன் அன்று ஓலையிலிருந்து பெறப்பட்ட சாம்பலை இதனுள் இட்டு எடுத்துச் செல்லலாம். நவீன வாழ்வில் ஈடுபட்டிருக்கும் மக்கள் பேஸ்ட், பிரஷ் போன்றவற்றை இட்டுவைக்க இது உகந்தது.   

சுமார் 30 வருடங்களுக்கும் முன்னால் வழக்கொழிந்து போயிருக்கும் இந்தப் பொருளை குமரி மாவட்டத்தின் மொட்டவிளை என்ற பகுதியியைச் சார்ந்த செல்லையா மீட்டெடுத்திருக்கிறார். அவரை தொடர்புகொண்டு இதை நேரடியாக வாங்கிக்கொள்ளுங்கள்.

செல்லையா (தொடர்புக்கு: 9750482511)

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in