Published : 29 Mar 2019 06:32 PM
Last Updated : 29 Mar 2019 06:32 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 25: வெறுக்கப்பட்ட ஓநாய் இன்று காக்கப்படுமா?

நம் நாட்டில் வாழ்பவை என்றாலும், சில அரிய உயிரினங்களை நம் வாழ்க்கையில் ஒரு முறைதான் பார்க்க முடிகிறது. மேகாலயத்தில் உள்ள சிரபுஞ்சி அருகே ஒரு நாள் காலையில் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தோம். வளைவொன்றில் வண்டி திரும்பியதும் சாலை ஓரம் ஒரு மயில் சிங்காரக்கோழி (Peacock Pheasant) தரைமண்ணை கிளறிக்கொண்டிருந்தது. அதன் சிறகுகளில் உள்ள சிறு வண்ண வட்டங்கள் காலை வெயிலில் மினுமினுத்தன. அந்தப் பறவையை ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன்.

அதேபோல் நம் நாட்டு ஓநாயையும் ஒரேயொரு முறைதான் பார்த்திருக்கிறேன். அஸ்ஸாமில் திப்ருகார் நகர் அருகே ஒர் தேயிலைத் தோட்ட நண்பருடன் இரவு உணவருந்திவிட்டுத் திரும்பும்போது காரில் சிறு பிரச்சினை. நிறுத்திவிட்டு, இன்ஜினை அணைத்துவிட்டு சில நிமிடங்கள் கழித்து விளக்கை போட்டபோது, எதிரில் இரண்டு ஓநாய்கள் ஒளியில் திகைத்தபடி நின்றிருந்தன.

உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன் இருந்தன. சில விநாடிகளில் சுதாரித்துக்கொண்டு புதர்களுக்குள் மறைந்துவிட்டன. அரிதிலும் அரிதான இந்திய ஓநாயை பார்த்துவிட்ட வியப்பு எனக்கு. இது நடந்தது 1972-ல். அதன்பின் இரு முறை ஓநாய்களைத் தேடி நான் சென்றிருந்தபோது பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தமிழகத்தில் உண்டா?

மைசூருக்கு அருகே மேல்கோட்டே என்ற இடத்தில் ஓநாய் சரணாலயம் ஒன்று இருக்கிறது. அங்கு இரவு தங்கி விடிவதற்கு முன் நானும் என் மகன் அருளும் ஓநாய்களைத் தேடி பல கிலோ மீட்டர் நடந்தோம். ஆனால், ஓநாய் கண்ணில் படவேயில்லை. அவற்றின் காலடித்தடங்களை ஒரு வீட்டருகே காண முடிந்தது.

அடுத்த முறை குஜராத்தில் ஜஸ்தான் சமஸ்தானத்தில், தன் பண்ணைக்கு இரவில் ஓநாய்கள் வருவதுண்டு என்றும் ஆட்டுக்குட்டிகளை பிடிக்க வந்த ஒரு ஒநாயை தான் சுட்டுக்கொன்றதாகவும் முந்தைய ராஜா கூறினார்.  ஒரு கயிற்றுக்கட்டிலில் பண்ணை ஓரத்தில் படுத்துக்கொண்டு, அவ்வப்போது டார்ச் லைட்டை போட்டுத் தேடி அங்கே இரவை கழித்தேன். ஆனால், ஓநாய் வரவேயில்லை.

காட்டுயிர் பற்றி பல நூல்கள் எழுதிய ஆர்.ஜி.பர்ட்டன் என்ற ஆங்கில அதிகாரி 1928-ல் ஓநாய், நரி, குள்ள நரி ஆகியவை இந்தியா முழுவதும் இருக்கின்றன என்று பதிவுசெய்தார். பண்டைத் தமிழகத்தில் ஓநாய் இருந்ததா இல்லையா என்று ஒரு விவாதம் அண்மையில் இலக்கிய துறையில் எழுந்தது. பழைய இலக்கியத்தில் ஓநாய் என்ற சொல்லே இல்லாதிருப்பதால், அந்த உயிரினம் இங்கே இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்றாகாது.

அது வேறு பெயரில் அன்று  அறியப்பட்டிருக்கலாம்; அந்த பெயர் இன்று வழக்கொழிந்து போயிருக்கலாம். கரடி என்ற சொல்லும் அன்றைய இலக்கியத்தில் இல்லை. அந்த உயிரினம் உளியம் என்று அறியப்பட்டது. தமிழில் ஒரு உயிரினத்துக்குப் பல பெயர்கள் இருப்பது அரிதானதல்ல. அது மட்டுமல்ல. தமிழகத்தில் இருந்த சில உயிரினங்கள் அற்றுப்போயும்விட்டன. சிவிங்கிப்புலி பிரசித்தி பெற்ற எடுத்துக்காட்டு. ஓநாய் தமிழகத்தில் இருந்திருக்கிறது என்பது என் அனுமானம்.

பிரசித்தி பெற்ற இந்திய ஓநாய்

உலகில் உள்ள பல வகையான ஓநாய்களில் உருவில் சிறியது இந்திய ஓநாய்தான். என்றாலும் அது புகழ்பெற்றது. இந்திய ஓநாய் வகையிலிருந்துதான் வீட்டு நாய் உருவானது என்று நோபல் பரிசு பெற்ற உயிரியலாளர் கான்ராட் லாரன்ஸ் கூறுகிறார். பரிணாமவியல் நோக்கில் ஓநாய்க்கு மிக அருகில் நம் நாய் இருக்கிறது என்கிறார். அவரது கூற்றுப்படி மனிதரால் நாய் முதலில் பழக்கப்படுத்தப்பட்டது இந்திய சமவெளிகளில்தான்.

என்ன காரணமோ தெரியவில்லை ஓநாய்களுக்கு வரலாற்றில், உலகம் முழுவதும் ஒரு கெட்ட பெயர் இருந்திருக்கிறது.  சிறார் பாடல்களிலும் நாட்டார் கதைகளிலும் ஓநாய் ஒரு கொடிய உயிரினமாகவே சித்தரிக்கப்பட்டது.  அது குழந்தைகளை தூக்கிக்கொண்டு ஓடிவிடும் என்ற அச்சம் பரவலாக இருந்தது. ஓநாய்களை விரட்டித் தாக்க ஐரிஷ் வுல்ஃப் ஹவுண்ட் (Irish wolf hound) போன்ற உருவில் பெரிய நாய்களைப் பழக்கி வைத்திருந்தார்கள்.

துப்பாக்கி புழக்கத்துக்கு வந்தபின் பதினோரு ஐரோப்பிய நாடுகளில் ஓநாய் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ஜப்பானிலும் இந்த உயிரினம் அற்றுப்போய்விட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்து இருபது ஆண்டுகளில் யூகோஸ்லாவிய நாட்டில் மட்டும் 80,000 ஓநாய்கள் கொல்லப்பட்டன என்பது அதிர்ச்சியூட்டும் தகவல். கனடாவில் இவை பெருமளவில் கொல்லப்பட்டன. ஆடுகளை பாதுகாக்கவென்று, ஹெலிகாப்டரில் பறந்து இவற்றைச் சுட்டுக்கொன்றார்கள். 

காட்டுயிர் பாதுகாப்பு ஒரு இயக்கமாக உருவெடுத்தபின் ஓநாய்க்கு பரிந்து பேச பல குழுக்கள் தோன்றின. அதில் முன்னணியில் கனடா நாட்டு இயற்கையாளர் ஃபார்லி மோவட் இருந்தார். 'Never Cry Wolf' (1963) என்ற நூலை எழுதி, ஒநாயின் மேலிருக்கும் வெறுப்பு எவ்வளவு ஆதாரமற்றது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.  1973-ம் ஆண்டு ஸ்டோக்ஹோம் நகரில் ஓநாய்கள் பாதுகாப்பு பற்றி ஒரு பன்னாட்டு மாநாடு நடத்தப்பட்டது. 'புராஜெக்ட் வுல்ஃப்' என்ற செயல்திட்டத்தை கிரீன் பீஸ் இயக்கம் அறிமுகப்படுத்தியது.

அறிந்தது சொற்பம்

இந்தியாவிலும் இந்த உயிரினத்துக்குக் கெட்டகாலம்தான். கர்நாடகத்தில் பாவகடா என்ற ஊரிலும் பிஹாரில் ஹசாரிபாக் என்ற இடத்திலும் ஓநாய்கள் குழந்தைகளைத் தாக்குகின்றன என்ற செய்தி பரவியது. 1986-ல் பிஹார் மாநில வனத்துறை ஒரு ஓநாய்க்கு ரூபாய் 5000 என்று பரிசை அறிவித்தது. எண்ணிக்கையில் அவை குறைந்ததற்கு இது மட்டுமே காரணமல்ல. வறண்ட காட்டுப் பிரதேசங்களில் சிறு கூட்டங்களாக வாழும் இவற்றுக்கு இரையாகும் சிற்றுயிர்கள் குறைந்ததும் வாழிடம் குறைந்ததும் முக்கியக் காரணம்.

ஒருபுறம் ஓநாய்க்கு எதிராகப் பிரசாரம் இருந்தாலும் இந்தியாவில் காட்டுயிர் ஆர்வலர்கள் இந்த உயிரினத்துக்காகப் பரிந்து பேசினார்கள். பனிச்சிறுத்தை, சோலைமந்தியைப் போல ஓநாயையும் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒன்றாவது பட்டியல் உயிரினமாக இன்று பாதுகாக்கப்படுகிறது. இந்தியாவின் பல இடங்களில் ஓநாய்கள் இருப்பது தெரியவருகிறது. அண்மையில் கர்நாடகத்தில் ஹம்பிக்கு அருகிலுள்ள கொப்பல் என்ற ஊரில் பல ஓநாய்கள் காணப்படுகின்றன, பகலிலேயே அவற்றைப் பார்க்க முடிகிறது என்கிறார்கள்.

தனிச் சரணாலயங்கள் மட்டுமல்ல குஜராத்தில் உள்ள வெலவதார் வெளிமான்கள் சரணாலயத்திலும், கட்ச் காட்டுக்கழுதை சரணாலயத்திலும் இன்று ஓநாய்கள் இருக்கின்றன. என்றாலும் இந்த உயிரினத்தைப் பற்றி நாம் அறிந்தது ஒப்பீட்டளவில் சொற்பம்தான்.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x