Published : 02 Mar 2019 11:56 am

Updated : 05 Mar 2019 15:58 pm

 

Published : 02 Mar 2019 11:56 AM
Last Updated : 05 Mar 2019 03:58 PM

வானகமே இளவெயிலே மரச்செறிவே 23: மந்தையை வழிநடத்தும் மேய்ப்பு நாய்கள்

23

சில மாதங்களுக்கு முன் அயர்லாந்தில் பயணம் சென்று கொண்டிருந்தபோது, கீலார்னி என்ற ஊருக்கு அருகே மேய்ப்பு நாய்களை வேலைக்குப் பழக்கும் ஒரு ஆட்டுப்பண்ணையைப் பற்றி இணையதளத்தில் படித்து அங்கே செல்லத் தீர்மானித்தோம். அங்கே பயிற்சியளிக்கப்படுவது கறுப்பு வெள்ளை ரோமப்போர்வை கொண்ட பார்டர் காலி (Border Collie) இன நாய்கள்.

நாங்கள் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்தபோது லேசாக தூறிக்கொண்டிருந்தது. அந்த நாட்டில் எப்போதுமே குற்றாலச் சாரல் மாதிரி தூறல் விழுந்துகொண்டே இருக்கிறது. நாய்களின் திறமைகளைக் காட்டுவதற்குமுன் மேய்ப்பு நாய்கள் பற்றிப் பண்ணைக்காரர் அறிமுக உரையாற்றினார்.


பின்னர் ஆடுகளை மடக்கி, ஓட்டி வெவ்வேறு பட்டிகளில் ஒரு நாய் அடைத்தது. ஐம்பது மீட்டர் தொலைவில் ஆடுகளும் நாயும் இருந்தன. அதற்கு விசில் மூலமும் கைகளை உயர அசைத்தும் பண்ணைக்காரர் உத்தரவுகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

கால்நடைகளை வளர்க்கத் தொடங்கிய மனித இனம், ஆதிமுதலே இரைகொல்லி விலங்குகளிடமிருந்து அவற்றைப் பாதுகாக்க நாய்களையும் வளர்த்துள்ளது. பின்னர் ஆடுகளை ஒதுக்கிப் பட்டியில் அடைக்கவும் நாய்களைப் பழக்கப்படுத்தி இருக்கின்றனர். மேய்ப்பு நாய்கள் என்னும் இந்த வகை பல நாடுகளில் உருவானது.

இன்று ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பெல்ஜியன் மேலினாய், ஒரு மேய்ப்பு நாயினம்தான். அல்சேஷன் (ஜெர்மன் ஷெப்பர்ட்) என்ற பெயரில் வளர்க்கப்படும் நாய்களும் மேய்ப்பு நாய்களே. இவை ஐரோப்பிய நாடுகளில் பிரபலம்.

அங்கே கம்பளித் தொழிலுக்காகச் செம்மறியாடுகள் ஆயிரக்கணக்கில் வளர்க்கப்பட்ட பண்ணைகளில் பாரம்பரியமாக மேய்ப்பு நாய்களும் இருந்தன. பெரு மந்தைகளை மனிதர் அங்குமிங்கும் ஓடி ஓடி அடைப்பது சிரமம். இதற்கெனக் குட்டியிலிருந்தே பழக்கப்படுத்தப்படும் நாய்கள், இந்த வேலையை எளிதாக செய்து விடுகின்றன. பிறந்ததிலிருந்தே நாய்க்குட்டிகளும் ஆடுகளுடனேயே வளர்க்கப்படுகின்றன..

அசத்திய ஆஸ்திரேலிய நாய்

மேய்ப்பு நாய்களில் பிரசித்தி பெற்ற இன்னொரு இனம் ஆஸ்திரேலியக் கால்நடை நாய் (Australian Cattle Dog). இருநூறு ஆண்டுகளுக்குமுன் ஐரோப்பியர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறியபோது, அவர்கள் மேற்கொண்ட ஒரு முக்கியமான தொழில் ஆடு வளர்ப்பதுதான். பல சதுர மைல்கள் பரந்திருந்த புல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை மேய்த்தனர்.

இரவில் அவற்றைக் கொட்டடியில் அடைக்கவும், டிங்கோ எனும் காட்டு நாய்களிலிருந்து குட்டிகளைப் பாதுகாக்கவும் இந்த நாயினம் உருவாக்கப்பட்டது. ஒரு முறை பெர்த் நகரில் ஒரு வேளாண் கண்காட்சியில் இந்த நாய்களின் திறமையைக் கண்டு அசந்துவிட்டேன்.

ஆடுகளைச் சிறுசிறு குழுக்களாகப் பிரித்து தனியாக அவை ஒதுக்கின. பெரிய மந்தையை ஒரு நாய் ஒருங்கிணைத்துச் சென்று ஒரு பட்டியில் அடைத்தது. ஆடுகள் வேறு திசையில் சென்றால் ஆடுகளின் மீதே நாய் ஓடிச்சென்று அடுத்த முனைக்குச் சென்றுவிடுகிறது.

நாய்களின் வேட்டை இயல்புணர்வைப் பயன்படுத்தியே மனித இனம் அவற்றை மேய்ப்பு நாய்களாகப் பழக்கிவிட்டது. மந்தையை விரட்டுவது, அடங்காத ஆட்டை லேசாகக் கடிப்பது, உற்று நோக்குவது போன்ற உத்திகளால் ஒரு மந்தையையே, ஒரு மேய்ப்பு நாய் ஒழுங்குபடுத்திவிடுகிறது. அதேநேரம் ஆடுகளை அவை பதற்றமடையச் செய்வதில்லை. உலகிலேயே சிறந்த மேய்ப்பு நாயாகப் போற்றப்படுவது அயர்லாந்தில் பார்த்த பார்டர் காலி நாயினம்தான்.

ஆனால், கம்பளிக்குப் பதிலியாகச் செயற்கை இழை ஆடைகள் வந்தபின், ஆடு வளர்ப்புத் தொழில் வெகுவாகக் குறைந்து, நாய்களை இந்த வேலைக்குப் பழக்குவதும் அரிதாகிவருகிறது. என்றாலும் செல்லப்பிராணிகளாகப் பல வீடுகளில் இந்த நாய்கள் வளர்க்கப்படுகின்றன.

இமாலய மேய்ப்பு நாய் இந்தியாவில் மேய்ப்பு நாய்கள் பெருவாரியாக இமயமலைப் பிரதேசத்தில் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவுக்குத் தங்களது ஆட்டுமந்தைகளை ஓட்டிசெல்லும் குஜ்ஜர் இன நாடோடி இனத்தினர், எப்போதும் மேய்ப்பு நாய்களைத் தங்களுடன் கூட்டிச் செல்கின்றனர். குஜராத்தில் உள்ள இடையர் இனமான ராபாரிகளும் தங்களது மந்தைகளுடன் நாய்களையும் கூட்டிச் செல்வதை நான் கண்டது உண்டு.

ஆனால், இந்திய மேய்ப்பு நாயினங்கள் பொதுவாக காவலுக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. வேட்டை இலக்கியத்துக்குப் பேர் போன ஜிம் கார்பெட் தனது ‘ருத்ரபிரயாக் ஆட்கொல்லிச் சிறுத்தை' என்ற நூலில் குமாவோன் பிரதேசத்து மேய்ப்பு நாய்களைப் பற்றி வியந்து எழுதியுள்ளார். உருவில் பெரிய இந்த நாய்கள் சிறுத்தைகளைகூட எதிர்கொண்டு விரட்டும் என்கிறார் அவர்.

இமயமலைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பல மேய்ப்பு நாயினங்களைப் பேணி வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இமாலய மேய்ப்பு நாய் (Himalayan sheep Dog). சில ஆண்டுகளுக்குமுன் இந்த இன நாய் சியாச்சின் பனிப்பிரதேசத்தில் ராணுவ முகாம்களுகிடையே தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்படுவது குறித்து நாளிதழ்களில் படத்துடன் செய்தி வெளியானது.

இந்திய நாயினங்களைப் போற்றி வெளியிடப்பட்ட நான்கு அஞ்சல்தலைகளில் ஒன்று, இந்த நாயினத்தைக் காட்டியது. அண்மையில் சென்னையில் ஒரு திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘செளத்தி கூட்' (நாலாம் திசை - 2015) என்ற பஞ்சாபி படத்தில், இந்த நாயொன்று முக்கியக் கதாபாத்திரமாக வருகிறது.

mutharasanjpgright

தமிழக மேய்ப்பு நாய்

தமிழகத்தில் மேய்ப்பு நாய்கள் இருந்ததில்லை என்று நினைக்கிறேன். இங்குதான் கம்பளித் தொழில் இல்லையே. ஆட்டு மந்தைகளை ஓட்டிக்கொண்டு ஊர் ஊராகப் போகும் ஒரு இடையர் சமூகத்தினரைப் பற்றி செந்தமிழன் இயக்கிய ‘ஆடோடிகள்’ குறும்படத்திலும் நாய்களைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், ராமநாதபுரம் பகுதியில் ஆட்டுமந்தைகளைப் பாதுகாக்க ஒரு நாயினம் இருக்கிறது என்று அறிகிறேன்.

நான் இதுவரை பார்த்ததில்லை என்றாலும் நாட்டு நாயினங்கள் விற்பன்னரான கே.ஆர். விஜயமுருகன் இதைப் பற்றி என்னிடம் கூறினார். இப்போது உள்ளூர் நாய்கள் பற்றிய ஆர்வம் இணையதளத்தின் மூலம் பரவுவதால், இந்தச் செய்தி நமக்குக் கிடைத்துள்ளது.

ஆட்டு மந்தைகளுடன் இடம் விட்டு இடம் செல்லும் இடையர் இன மக்களிடம் உருவில் பெரிய, சாம்பல் நிறமான இந்த மந்தை நாய்களைப் பார்க்கலாம். ஆட்டு மந்தைகளைக் காப்பதால், இதற்கு இந்தப் பெயர். இதன் தலை பெரிதாக இருப்பதால் இதற்கு மண்டை நாய் என்று பெயர் என்று கூறுவோரும் உண்டு. இது கோம்பை நாயின் ஒரு வடிவமே என்றும் கூறும் வேறு சிலர் இதை 'ராமநாதபுரம் கோம்பை' என்று குறிப்பிடுகின்றனர்.

- கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com


அசத்திய ஆஸ்திரேலியாவானகமே இளவெயிலே மரச்செறிவே தியோடர் பாஸ்கரன் தொடர் காட்டுயிர் பாதுகாப்பு பல்லுயிரியம்மந்தைமேய்ப்பு நாய்கள்Border Collieஜெர்மன் ஷெப்பர்ட்ஆஸ்திரேலிய நாய்ஆஸ்திரேலியக் கால்நடை நாய் Australian Cattle DogHimalayan sheep Dogசெளத்தி கூட்நாலாம் திசை - 2015தமிழக மேய்ப்பு நாய்ஆடோடிகள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

environment-and-caste

சூழலும் சாதியும்

இணைப்பிதழ்கள்

More From this Author

x