நதியின் மரணம்

நதியின் மரணம்
Updated on
1 min read

பிரேசில் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வாலே என்ற தனியார் இரும்புத் தாது சுரங்க நிறுவனத்துக்குச் சொந்தமான அணை உடைந்தது. இந்த அணையில் 12 மில்லியன் கன மீட்டர் சுரங்கக் கழிவுநீர் தேக்கிவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அணை உடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியிருந்த பதாதேஷா பூர்வகுடிகளின் கிராமங்கள், அவர்களுடைய வாழ்வாதாரமாக விளங்கிய பராவ்பேப் (Paraopeba) நதி மாசடைந்துள்ளது.

பிரேசிலின் பெரிய நகரங்களில் ஒன்றான ப்ரூமாஜீனோவில் (Brumadinho) வாலே நிறுவனத்துக்குச் சொந்தமான இரும்புத் தாது சுரங்கம் நிறுவனம் கடந்த 1942-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அந்நாட்டின் மிகப் பெரிய சுரங்க நிறுவனங்களில் ஒன்று. இந்தச் சுரங்கத்திலிருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீரைச் சேமித்துவைக்க அந்நிறுவனம்

1976-ம் ஆண்டு மணல் அணை ஒன்றைக் கட்டியது. இந்த அணைதான் தற்போது உடைந்துள்ளது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்

150-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.

200-க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பிரேசில் வரலாற்றிலேயே மிக மோசமான உயிரிழப்பையும் சுற்றுச்சூழல் பாதிப்பையும் இந்த அணை ஏற்படுத்தியுள்ளது. இந்த அணை ஏன் திடீரென உடைந்தது என்பதற்கான காரணங்கள் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகின்றன! இது தொடர்பாக வாலே நிறுவனம் சார்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த ரசாயனக் கழிவுநீர் அங்கிருந்த பராவ்பேப் நதியில் கலந்து அந்நாட்டின் பதாதேஷா (Patax) பூர்வகுடிகளின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. ஐந்நூற்றுப் பத்து கிலோ மீட்டர் நீளம்கொண்ட இந்த நதி அந்நாட்டின் ஜீவநதிகளில் ஒன்று. ரசாயனக் கழிவு நீரில் அடித்துவரப்பட்ட சேறு, குப்பை கூளம், ரசாயனங்கள் ஆகியவை நதியின் தன்மையை மாற்றியுள்ளன.

பிரேசில் நாட்டின் மக்கள்தொகையில் எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பூர்வகுடிகள் வாழ்ந்து வருகிறார்கள். அந்நாட்டின் நிலப்பரப்பில் 13.8 சதவீதம் இவர்களது வாழ்நிலமாக உள்ளது. ஆனால், தற்போது புதியதாகப் பதவியேற்றுள்ள சயீர் பொல்சனாரூ தலைமையிலான அரசு அம்மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதேபோல் அந்நாட்டில் உள்ள பெரும்பாலான இரும்புத் தாது சுரங்கங்கள் பூர்வகுடிகளின் பகுதிகளில்தான் நிறுவப்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பூர்வகுடிகளின் வாழ்விடம் பாதிக்கப்படுகிறது. தங்களுக்கான புதிய வசிப்பிடம் அமைத்துத் தரக்கோரி அவர்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

இந்த உடைபட்ட அணை போல் அந்நாட்டில் சுரங்கக் கழிவுநீரைச் சேமிக்க இன்னும் 88 அணைகள் உள்ளன. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. அவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட அணைகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in