

சீரகம் உற்பத்தி அதிகரிப்பு
சென்ற ஆண்டைவிட 9 சதவீதம் சீரக விளைச்சல் அதிகமாக நடந்துள்ளது. 4,16,000 டன் சீரகம் இந்த ஆண்டு உற்பத்தியாகியுள்ளதாக இந்திய மசாலாப் பொருட்கள் பங்குதாரர்கள் கூட்டமைப்பு (FISS) கூறியுள்ளது. சென்ற ஆண்டு இருப்பு 27,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரக உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் குஜராத்தில் இம்முறை 3 சதவீதம் வரை உற்பத்தி சரிந்துள்ளது. ஆனால், அதை ஈடுகட்டும் வகையில் ராஜஸ்தானில் சீரக உற்பத்தி 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இப்போது குஜராத் உன்ஜா சந்தையில் ஒரு குவிண்டால் விலை ரூ. 15,600 ஆக உள்ளது. இது சென்ற ஆண்டைவிட ரூ.175 அதிகம். ஆனால், இந்த விலை ஏப்ரலுக்குப் பிறகு ரூ. 13,000-ஆகச் சரிவடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெந்தயம் உற்பத்தி சரிவு
இந்த ஆண்டு வெந்தய உற்பத்தி சென்ற ஆண்டைவிட 26 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்த ஆண்டு மொத்த உற்பத்தி 1,25,270 டன். வெந்தய உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் மாநிலங்களான மத்தியப் பிரதேசத்தில் 56,510 டன்னும் ராஜஸ்தானில் 55,900 டன்னும் வெந்தயம் உற்பத்தியாகியுள்ளதாக இந்திய மசாலாப் பொருட்கள் பங்குதாரர்கள் கூட்டமைப்பு (FISS) கூறியுள்ளது.
காய்கறி வரத்து
சென்னைக் கோயம்பேடு காய்கறிச் சந்தைக்குக் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறிகள் விலையும் சரிந்துள்ளது. கர்நாடகாவில் ஏற்பட்ட மிகுதியான காய்கறி உற்பத்தியால் கோயம்பேடுக்கு வரத்து அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் முக்கியக் காய்கறிகளான தக்காளி, வெங்காயம் ஆகியவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலை இன்னும் இரு வாரங்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.