

ஊருக்குள் நுழையும்போதே சாலைகளின் இருபுறமும் வரிசையாக முள்வேலிக்கு மேலே எட்டிப் பார்த்து வரவேற்கின்றன மரக்கன்றுகள். நீரை உறிஞ்சிக் குடிக்கும் சீமைக் கருவேலம் சூழ்ந்து கிடக்கும் கிராமத்துக்குள், நம்ம ஊர் மரங்கள் பசுமையாய் துளிர்த்திருப்பதன் ரகசியம் என்ன?
தொடங்கிய தருணம்
திருச்சிக்கு அருகே ஓலையூர் கிராமத்தில்தான் இந்தக் காட்சி. அதற்குக் காரணமாக இருப்பவர் ஊராட்சி தலைவர் வேலுச்சாமி. "தலைவர் பதவி ஏத்துக்கிட்டப்ப மரம் நடும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. ஆறு மாசத்துக்கு முன்னாடி பள்ளிக்கூடத்து மாணவர்களுக்கு வீட்டுல வளர்க்க மரக்கன்னு கொடுக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டாங்க. பசங்களா சேர்ந்து, ஆயிரக்கணக்கான மரக்கன்னுகளை பள்ளிகூடத்துல ஒன்னரை அடி வரைக்கும் வளர்த்திருக்கிறதைப் பார்த்தேன்.
‘ஒரு வருசம் கழிச்சு உங்க வீட்டுல வந்து பார்ப்பேன், யாரு நல்லா வளர்த்திருக்காங்களோ அவங்களுக்கு பரிசு தருவேன்’ன்னு கூட்டத்துல அறிவிச்சேன். அதுதான் இந்த எண்ணம் ஏற்பட்டதற்கான தொடக்கப்புள்ளி" என்கிறார் வேலுச்சாமி.
புது முடிவு
ஊரை சுத்தி கருவேல மரங்களா இருக்குறதால, மற்ற மரங்கள் பெரிசா வளராது, கருவேல மரம் நிலத்தடி நீரை காலி பண்ணிடும்னு இந்த நிகழ்ச்சியின் போது வேலுச்சாமியிடம் கூறியிருக்கிறார் அறிவியல் ஆசிரியர் பாஸ்கரன். அதைக் கேட்ட ஊராட்சித் தலைவருக்கு அதிர்ச்சி. மாணவர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள மரக்கன்றுகளை பள்ளி வளாகம், ஊருக்குள் நுழையும் முதன்மைச் சாலை, கழிப்பிடம் அருகே, குளக்கரை, விளையாட்டு திடல் என அனைத்து இடங்களிலும் நட்டு நிலத்தடி நீரை மீட்டெடுக் கலாம் என அப்போது முடிவெடுத்திருக்கிறார் வேலுச்சாமி.
மரக்கன்று நட்டு, பராமரிக்கும் இந்தப் பணியை 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் குளம், கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுத்துள்ளார். மழைக்கு ஆதாரமான மரங்களின் அவசியத்தை ஊர் மக்களுக்கும் புரியவைத்திருக்கிறார்.
எது ஆதாரம்?
மரக்கன்று நடும் பணி தொடங்கியது. பிரச்சினைக்குரிய சீமைக் கருவேல முள் செடிகளை வெட்டி, புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு வேலி அமைக்கப்பட்டது.
நான்கு மாதங்களுக்கு முன் நடப்பட்ட 600 மரக்கன்றுகள் இன்றைக்கு தோளை உரசும் உயரத்துக்கு வளர்ந்து நிற்கின்றன. இப்போது ‘நான் தண்ணீர் ஊற்றியது', ‘நான் நட்டது' என ஊர் மக்கள் இந்தக் கன்றுகளை போட்டி போட்டுக் கொண்டு பராமரிக்கின்றனர்.
"பருவமழை பொய்க்காம பெய்யுறதுக்கு முதல்ல வழியை ஏற்படுத்திட்டு, அப்புறமா குளம் வெட்டுற வேலையை பாக்குறதுதானே சரியா இருக்கும்" என்று சொல்லி அர்த்தத்துடன் சிரிக்கிறார் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி.
உண்மை விதைத்த ஆசிரியர்
நல்ல மழை பொழிய, நிழல் தர, பறவையினங்கள் தங்கிச் செல்ல என பலவற்றுக்கும் இடம் தரும் மரங்கள் இயல் வாகை, தூங்கு வாகை, இலைபுரசு, காட்டுத்தீ, மஞ்சள் கொன்றை, நீர்மருது, சொர்க்கம், குமிழ் தேக்கு, பூவரசு ஆகிய 9 வகை மரங்களின் விதைகள் ஓலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த விதைகளை பெயருக்கு விதைத்தோம் வளர்த்தோம் என்றில்லாமல், அந்த மரங்களின் பயனை மாணவர்களிடம் எடுத்து கூறி, அவர்கள் கையாலேயே விதைக்க வைத்து, தினமும் தண்ணீர்விட்டு வளர்த்ததன் பலனை இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது என்கிறார், மாணவர்களிடம் இந்த எண்ணத்தை விதைத்த அறிவியல் ஆசிரியர் பாஸ்கரன்.
ஓலையூர் ஊராட்சித் தலைவர் வேலுச்சாமி