

பறவை நோக்குவோர் சற்றே வேடிக்கையானவர்கள். ஒரே ஆண்டில் முடிந்த அளவுக்குத் தங்கள் நாட்டில் / மாநிலத்தில் அதிகப் பறவை வகைகளைப் பார்த்துவிட வேண்டும் என்பது அவர்களுடைய பொதுவான ஆசைகளில் ஒன்று. பறவைக் கணக்கெடுப்பு நடைபெறும் நாட்களில் அதிகப் பட்டியல்களை உள்ளிட வேண்டும், நாள் முழுக்க பறவைகளைப் பார்த்துப் பதிவிட வேண்டும், பல மாவட்டங்களுக்குச் சென்று பறவைகளைப் பார்க்க வேண்டும் என்பன போன்ற ஆசைகளும் பலருக்கு உண்டு.
எனக்கும் அது போன்ற ஆசை வந்தது. இந்த ஆண்டின் முதல் பறவை நான் பார்த்ததாகத்தான் இருக்க வேண்டும் என நள்ளிரவு 12:00 மணிக்கு எழுந்து பறவைகளைப் பார்க்கத் தொடங்கலாம் என நினைத்தேன். அப்படி முயன்றால் காகத்தையும் மாடப்புறாவையும்தான் பார்க்க வேண்டியிருக்கும். திட்டமிட்டு இரவாடிப் பறவைகள் இருக்கும் வாழிடத்துக்குச் சென்று காத்திருந்தால், நாள் தொடங்கிய சில நிமிடங்களில் ஏதாவது ஆந்தையைப் பார்க்கவோ அவற்றின் குரலைக் கேட்கவோ முடியும்.
தள்ளிவைக்கப்பட்ட ஆசை
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு இந்த ஆண்டு 14-17 ஜனவரியில் நடைபெற்றது. அப்போது அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என நினைத்தேன். வீட்டின் அருகில் ஒரு கோயில் உண்டு. அங்கே கூகையை (வெண்ணாந்தை) எளிதில் காணலாம். நள்ளிரவு அங்கே சென்று முதல் பறவையாக அதைப் பார்த்துவிடலாம் எனத் திட்டமிட்டேன். பொங்கல் கொண்டாடுவது தஞ்சை கரந்தையில் உள்ள பெற்றோர் வீட்டில்தான். பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பை வீட்டின் மொட்டைமாடியில் குடும்பத்தோடு சேர்ந்து நடத்துவது வழக்கம்.
கூகையைப் பார்க்கும் இந்தத் திட்டத்தைச் சொன்னவுடன், ‘இதெல்லாம் வேண்டாத வேலை, நீ வருவேன்னு ஆந்தை என்ன உட்காந்துக்கிட்டு கெடக்குதா? பேசாமப் படு” என அம்மா சொன்னார். முதல் நாள் இல்லையென்றால் என்ன, அடுத்து வரும் நாட்களில் பார்க்கலாம் என முடிவை மாற்றிக்கொண்டு அம்மா சொன்னதுபோல் ‘பேசாமல் படுத்தேன்’.
பொங்கல் கணக்கெடுப்பு
பொங்கல் நாட்களில் பறவைகளைக் கணக்கெடுப்பது 2015-ல் தொடங்கியது. இது ஐந்தாவது ஆண்டு. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் உள்ள எல்லா பறவை ஆர்வலர்களும் இந்த நான்கு நாட்களில் பறவைகளைப் பார்த்துப் பதிவிடுகிறார்கள். இதனால் காலப்போக்கில் இந்த நாட்களில் கணக்கெடுப்பு நடைபெற்ற பகுதிகளில் உள்ள பறவைகளின் பரவல், எண்ணிக்கை, நிலை என்ன என்பதை நாம் கணிக்க முடியும்.
இந்தக் கணக்கெடுப்பின் மற்றொரு முக்கிய அம்சம் eBird எனும் இணையதளத்தில் கணக்கெடுப்பைப்
பதிவேற்றுவதுதான். இதுவரை களப்புத்தகத்தில் மட்டுமே குறிப்புகளை எழுதி வந்தவர்கள், அதிலிருந்து மாறி தாங்கள் பார்க்கும், படமெடுக்கும் பறவைகளை, அவற்றின் எண்ணிக்கைகளை eBird செயலி மூலம் பதிவிட வேண்டும். இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களுக்குப் பங்களிப்பதன் மூலம் பறவைகளின் பரவலையும் நிலையையும் அறிந்துகொள்ள முடியும். அத்துடன் அடுத்து வரும் பறவைப் பயணங்களில் எங்கே, எப்போது, எந்த வகையான பறவைகளைப் பார்க்கலாம் எனும் தகவல்களைத் திரட்டி, பறவை நோக்குவோர் சரியான முறையில் திட்டமிட்டுக்கொள்ளவும் முடியும்.
சூறாவளிச் சுற்றுப்பயணம்
பொங்கல் பறவைக் கணக்கெடுப்பில் ஆண்டுதோறும் பறவை ஆர்வலர்களின் எண்ணிக்கையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிக்கொண்டே வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை முதலிய மாவட்டங்களில் மட்டுமே பறவை நோக்குவோர் ஓரளவுக்கு உள்ளனர். பெரம்பலூர், நாமக்கல், கரூர், தேனி போன்ற மாவட்டங்களில் இதுவரை நடந்துள்ள கணக்கெடுப்புகளில் மிகக் குறைவான அல்லது ஒருவர்கூட இடம்பெறாதது ஒரு பெரிய குறையாகவே உள்ளது.
எதிர்காலத்தில் அங்கு பல கூட்டங்கள், பறவை நோக்கும் உலா போன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பறவை ஆர்வலர்களை ஊக்குவிக்க வேண்டும். என்றாலும் இந்த ஆண்டு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களில் இருந்தும் பறவைகளைப் பார்த்து தரவுகளை சேகரிப்பது எப்படி? ஒரே வழி நாமே தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பறவைகளைப் பார்த்து பட்டியலிட வேண்டியதுதான். இதைத்தான் மூன்று பறவை ஆர்வலர்கள் செய்தார்கள்.
கோவை மாவட்டத்தைத் சேர்ந்த பள்ளி ஆசிரியர் செல்வகணேஷ், வங்கி மேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அருள்வேலன், பெங்களூரைச் சேர்ந்த காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஹரீஷா ஆகியோர் இணைந்து மூன்றே நாட்களில் (ஜனவரி 14 -16) தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள், புதுவை, காரைக்காலுக்குச் சென்று பறவைகளைப் பதிவுசெய்துள்ளனர்.
சில புதுமைகள்
இதை அறிந்த புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும் பறவை ஆர்வலருமான சுரேந்தர் பூபாலன், தானும் ஏதாவது செய்ய வேண்டுமே என யோசித்திருக்கிறார். அருகில் இருக்கும் பெரிய நீர்நிலைகளுக்குச் செல்வது என முடிவுசெய்தார். நான்கு நாட்களில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 40 நீர்நிலைகளுக்கும் சென்று அங்குள்ள பறவைகளையும், அந்த நீர்நிலைகளின் நிலையையும் பதிவுசெய்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ராஜராஜன் சற்றே புதுமையாக யோசித்திருக்கிறார். பல வகையான பறவைகளை எளிதில் காணக்கூடிய சரணாலயம், நீர்நிலைகளுக்குத்தான் பொதுவாகப் பறவை ஆர்வலர்கள் செல்வார்கள். அப்படியில்லாமல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குன்றுகள், புதர்க் காடுகள், கடலோரம், சமவெளி, ஊர்ப்புறம் போன்ற பல வகையான வாழிடங்களில் பறவையாளர்கள் அதிகம் செல்லாத பகுதிகளுக்குச் சென்று பதிவுசெய்துள்ளார்.
கூட்டு முயற்சிகள்
இப்படிப் பல இடங்களுக்கு பயணம் செல்வது எல்லோராலும் இயலாத காரியம். சேலத்தில் உள்ள பறவை ஆர்வலர்கள் தமிழகத்திலேயே அதிக நேரம் பறவை நோக்குதலில் ஈடுபடுவது என முடிவுசெய்தனர். தாரமங்கலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரான சுப்ரமணிய சிவா அவரது வீட்டின் அருகில், ஊர்ப்புறங்களில், அருகில் உள்ள நீர்நிலைகளுக்கெல்லாம் சென்று, நான்கு நாட்களில் 47 மணி நேரம் பறவை நோக்ககுதலில் ஈடுபட்டிருக்கிறார்.
மதுரையில் உள்ள லேடி டோக் கல்லூரியின் விலங்கியல் பேராசிரியையான பிரியா ராஜேந்திரன் தன் மாணவிகளுடன் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கும், ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் பணிபுரியும் விஷ்ணு சங்கரும் அவருடைய மாணவர்களும்; பொள்ளாச்சி நல்லமுத்து கவுண்டர் மகாலிங்கம் கல்லூரியின் தாவரவியல் பேராசிரியையான லோகமாதேவியும் அவரது மாணவர்களும் பறவைகளைப் பதிவுசெய்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை 525 வகையான பறவைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பொங்கல் நாட்களில் மட்டுமே 362 வகையான பறவைகள் பார்த்துப் பதிவிடப்பட்டுள்ளன. பறவை நோக்குதல் ஒரு நல்ல பொழுதுபோக்கு என்றாலும் இது போன்ற மக்கள் அறிவியல் திட்டங்களில் பங்குபெற்று, நாம் பார்த்ததைப் பொது வெளியில் பதிவிடும்போது பறவைகளையும், அவற்றின் வாழிடங்களையும் பாதுகாப்பதற்கு அந்தத் தரவுகள் பேருதவி புரியும். இந்த ஆண்டு சுமார் 200 பறவை நோக்குவோர் இந்தக் கணக்கெடுப்பில் பங்குபெற்றனர். பொறுப்பான, செயல் திறம்மிக்க இது போன்ற பல பறவைப் பித்தர்கள் இன்னும் பன்மடங்காகப் பெருக வேண்டும்.
வசந்த கால மரத் தேடல்
வசந்த கால மரத் தேடல் என்ற செயல்பாடு நேற்று தொடங்கியது (15), திங்கள்கிழமை (18) நிறைவடைகிறது. நாடு முழுவதும் நடைபெறும் இந்தச் செயல்பாட்டில் மரங்களை உற்றுநோக்கி இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதற்கு 'சீசன் வாட்ச்' செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். (http://bit.ly/2F4p1Vr). இந்தச் செயலியில் 'Casual' பக்கத்தில் உள்ள மரத்தைத் தேர்வுசெய்து, மரத்தின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டு மற்ற தகவல்களை பதிவிட வேண்டும். இந்த நாட்களில் தனியாகவோ குழுவாகவோ, தெரு, பூங்கா போன்ற பொது இடங்களில் உள்ள மரங்களைப் பற்றிப் பதிவிடலாம்.
கூடுதல் விவரங்களுக்கு:
http://bit.ly/2TKDY8v
கூடுதலாக அறிய:
பொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு 2019 அறிக்கை http://bit.ly/2FbykmD
கட்டுரையாளர்,
எழுத்தாளர்-காட்டுயிர் ஆராய்ச்சியாளர்,
தொடர்புக்கு: jegan@ncf-india.org