

இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் பொதுவாக ராணுவ அமைப்பு முறை, அதற்கு எப்படிச் சேருவது, எப்படித் தன்னைத் தயார்படுத்திக்கொள்வது, நாட்டுக்கு பற்றி நாடு போர், அதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளைத்தான் பேசுவார்கள். ஆனால், லெப்டினென்ட் கர்னல் திருவேங்கடசாமி, அப்படிப்பட்டவர் அல்ல. தனித்துவமானவரும்கூட.
ஏனெனில், அவர் பேசுவது இயற்கை விவசாயத்தைப் பற்றி. நம்மாழ்வார் முதல் வடநாட்டு சுபாஷ் பாலேக்கர் வரை அவருக்கு அத்துப்படி. இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். கோவைக்கு அருகில் கோவைபுதூர் அரசுக் கிளை நூலகத்தில் அப்படியான கலந்துரையாடல் ஒன்றில் அவரைச் சந்தித்தேன்.
‘‘என் சொந்த ஊர் கோவைதான். பொறியியல் பட்டதாரி. 1995-ல் ராணுவத்தில் சேர்ந்தேன். ராணுவப் பணியில் ஓய்வு கிடைக்கும் நாட்களில் விவசாயம் செய்துவருகிறேன்.
சின்ன வயதிலிருந்தே விவசாயத்தில் ஆர்வம் உண்டு. இந்தியாவின் எந்த மூலைக்குப் பணி மாறுதலானாலும் எனக்கு ஒதுக்கப்படும் குடியிருப்பு வீட்டுடன் ஒரு 5 சென்ட் இடமாவது கிடைப்பது என் அதிர்ஷ்டம். அதன் மூலம்தான் நம்மாழ்வார், பாலேக்கர் விவசாய வழிமுறைகளை முயன்று பார்க்க முடிந்தது” என்கிறார் வேங்கடசாமி.
வேங்கடசாமிக்கு 10 வருஷம் முன்புதான் இயற்கை விவசாயம் குறித்துத் தெரியவந்திருக்கிறது. அதற்குக் காரணம் நம்மாழ்வார். அவர் புத்தகங்களை ஆழமாகப் படித்துள்ளார். அத்துடன் விடாமல் வீட்டிலேயே அந்த முறைப்படி விவசாயம் செய்துள்ளார்.
இந்த முயற்சி சென்னை, பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் என நீண்டுள்ளது. நம்மாழ்வார் போலவே சுபாஷ் பாலேக்கர் குறித்தும் படித்துள்ளார். “நம்மாழ்வார் பஞ்சகவ்யம் விலை கூடுதலானது. பாலேக்கருடையது ஜீரோ பட்ஜெட். ஹரியாணா மாநிலம் பஞ்ச்குடாவில் பாலேக்கருடைய 15 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்டேன். அதைச் செய்து பார்த்தேன். நல்ல பலன் கிடைத்தது” என்கிறார் அவர்.
தான் கற்ற இந்த விவசாயத்தின் பலனை மற்றவருக்கும் சொல்லிக் கொடுத்துள்ளார். அவர் பணிபுரிந்த பல மாநிலங்களில் விவசாயிகளிடம் இதை ஒரு பிரச்சாரமாகவே செய்துள்ளார். இவரால் பலன் பெற்றவர்கள் பலர்.
“சென்னை ராணுவக் குடியிருப்பில் இருக்கும்போது சில காய்கறிகளை வைத்துப் பார்த்தேன். நல்ல பலன் தந்தது. பிறகு காஷ்மீர் பணி மாற்றம் ஏற்பட, அங்கு வீட்டுடன் 5 சென்ட் இடம் இருந்தது. அதில் மக்காச்சோளம் பயிரிட்டேன். இயற்கை விவசாயத்தால் நல்ல ருசி கிடைத்தது.
இயற்கை உரம், பஞ்சகவ்யம் எல்லாம் நானே தயாரிப்பேன். ஒடிசாவில் மூன்றரை வருஷம். அரை ஏக்கர் இடம் அங்கே கிடைத்தது. அதில் சுரைக்காய், பீன்ஸ், பூசணி, தக்காளி, பட்டாணி, வாழை, பிராக்கோலி எல்லாம் இயற்கை விவசாயத்தில் அபாரமாக விளைந்தது” எனத் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் அவர்.
இவர் வசிக்கும் ஊர்களில் உள்ள விவசாயிகளை இணைத்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் குறித்துப் பயிற்சியும் தருகிறார் வேங்கடசாமி. “முதன் முதலாகச் சென்னையில் மடிப்பாக்கத்தில் ஒரு பள்ளியில் பேச அழைத்தனர். அதன் பிறகு பல பள்ளி, கல்லூரிகளில் பேசியிருக்கிறேன்” என்கிறார் அவர்.
இந்தியாவில் பூச்சிக் கொல்லியோ ரசாயன உரமோ இல்லாமல் முழுமையான இயற்கை விவசாயம் செய்யும் மாநிலம் என சிக்கிமை வேங்கடசாமி குறிப்பிடுகிறார். “தமிழகமும் வேளாண்மையில் சிக்கிம் வழிக்கு மாற வேண்டும்” என்று கோரிக்கையையும் வைக்கிறார் திருவேங்கடசாமி.