ஜீவகாருண்யத் தேக்கு!

ஜீவகாருண்யத் தேக்கு!
Updated on
2 min read

நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்த ராம்பிரசாத், வள்ளலார் பக்தர். வள்ளலாரின் கொள்கைப்படி பசித்திருப்போரை தேடிச் சென்று தினமும் நூறுபேருக்கு உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இதற்கென இவரது குடும்பமே சேர்ந்து உணவு தயாரிக்க, இவர் ஆட்டோவில் போய் கொடுத்து வருவார். சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர்சாதம், சிலநேரம் சோறு, குழம்பு, காய்கறிகள் எனக் கொடுக்கும் இவர் இப்போது தேக்கு இலைக்கு மாறியுள்ளார். சாப்பாட்டை தேக்கு இலையில் கட்டி, அதன்மேல் காகிதத்தைச் சுற்றி இப்போது ஆட்டோவில் போய் விநியோகித்து வருகிறார். இதேபோல் தென்மாவட்டங்களில் பக்தர்களுக்குக் கோயில் பிரசாதங்களும் தேக்கு இலையிலேயே வழங்கப்படுகின்றன.

எச்.டி. பருத்தி விதைக்குத் தடை

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் மொத்த பருத்தி உற்பத்தியில் 20, 30 சதவீதம் அனுமதி அளிக்கப்படாத எச்.டி. (herbicide-tolerant-களைகளைத் தாங்கி வாழும் பயிர்) பருத்தி விதைகளைக் கொண்டே நடத்தப்படுகிறது. இந்நிலையில் ஆந்திர அரசு அனுமதிக்கப்படாத விதைகளை விற்பனைசெய்த ஒரு நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்திருக்கிறது.

மேலும் 13 நிறுவனங்களின் அங்கீகாரத்தை ஓராண்டுக் காலத்துக்கு நிறுத்திவைத்துள்ளது.   இந்த மரபணு மாற்றப்பட்ட விதைக்கு மரபணு பொறியியல் ஒப்புதல் குழு (Genetic Engineering Approval Committee) இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதைக் காரணம் காட்டித்தான் ஆந்திர அரசு ‘நர்மதா அக்ரி சீட்ஸ்’ நிறுவனத்தின் அங்கீகாரத்தை ரத்துசெய்துள்ளது. காவேரி சீட்ஸ், அங்கூர் சீட்ஸ் உள்ளிட்ட 13 நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடைவிதித்துள்ளது.

இயற்கை வேளாண் பயிற்சி

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே சோலைப்பட்டியில் இயற்கை வேளாண் அறிஞர் பாமயனின் அடிசில் இயற்கை விவசாய பண்ணையில் மார்ச்  9 ,10 தேதிகளில் தற்சார்பு வேளாண்மைக்கான பயிற்சி நடைபெறவுள்ளாது. இதில் பண்ணை வடிவமைப்பு, மக்கு உரம் தயாரித்தல், இயற்கை விவசாய இடுபொருள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள் செய்முறைப் பயிற்சியாகக் கற்றுத்தரப்படும். இயற்கை விவசாய முன்னோடிகளான பாமயன், சத்தியமங்கலம் சுந்தரராமன் ஆகியோர்கள் பயிற்சி அளிக்கிறார்கள். பயிற்சிக் கட்டணம் ரூ.1000. மேலும் விபரங்களுக்கு: 9597557794

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in