

இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ரயில்களில் டீ, காபி விற்பதற்கு ஸ்டைரோபோம் (Styrofoam ) குவளைகள் முதல் முதலாகப் பயன்படுத்தப்பட்டன. ‘பயன்படுத்திய பிறகு, இந்தக் குவளையைக் கசக்கித் தூக்கி எறியவும்' என்று அதில் அச்சிடப்பட்டிருக்கும்.
பளபளவென்ற அழகிய பொருள் ஒன்றைத் தூக்கி எறிவது தப்பில்லை என்ற எண்ணம் உருவாக ஆரம்பித்த காலம் அது. அன்று தூக்கி எறியப்பட்ட ஸ்டைரோபோம் குவளைகள் இன்றும் எங்கோ சில குப்பைக் கூடங்களில் உருவம் சிதைந்து மக்காமல் கிடக்கும்.
நாடு முழுக்கப் பரவிய பழக்கம், நம்ம ஊரு தெருமுனை தேநீர்க் கடைகளை இன்று ஆட்டிப்படைக்கின்றன. வழக்கமாகக் கண்ணாடி குவளைகளைத் துறந்து சுத்தம், வேகம், எளிது என்ற பெயரில் ஞெகிழி சார்ந்த பொருட்களுக்கு வேகமாக நகர்ந்துவிட்டோம். ஞெகிழிக் குவளைகள், ஞெகிழி பூசப்பட்ட (Poyethylene or Paraffin wax coated) குவளைகள் தேநீர்க் கடைகளின் அவசியப் பொருட்கள் ஆகிவிட்டன. டீ மாஸ்டர்கள், “கப்புல வேணுமா, கிளாஸ்ல வேணுமா” என்று நமது விருப்பத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைக்கு மாற்றிவிட்டோம்.
குவளைக் குப்பை
ஞெகிழியில் சூடான பொருட்களை ஊற்றும்போது அதிலிருந்து கசியும் வேதிப்பொருள் உடலுக்குப் பேராபத்து ஏற்படுத்துவது ஒருபுறம். மற்றொருபுறம் ஞெகிழிக் குவளைகள் மக்காதது போலவே, பேப்பர் குவளைகளில் பூசப்பட்டிருக்கும் ஞெகிழியைத் (coating) தனியே பிரித்து மறுசுழற்சி செய்ய முடியாது. இவை இரண்டுமே மாநகராட்சிகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் குப்பையைக் கையாள்வதில் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசின் ஞெகிழித் தடைக்கு பின் இந்தக் குவளைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டவையே. காகிதத்தை மட்டுமே வைத்துக்கொண்டு தேநீர் போன்ற சூடான பொருட்களைத் தாங்கக்கூடிய குவளைகள் உருவாக்கப்படவில்லை என்பதே பலரும் அறியப்படாத உண்மை. இன்றும் நம் தேநீர்க் கடைகளில் பயன்படுத்தப்படும் தேநீர்க் குவளைகள் ஞெகிழிப் பூச்சு கொடுக்கப்பட்டவையே.
ஸ்டார்பக்ஸ் போன்ற அமெரிக்கப் பெருநிறுவனங்கள் உலகம் முழுக்க காபி கடைகளை நடத்துகின்றன. அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அமெரிக்காவில் மட்டுமே 600 கோடிக் குவளைகளை தூக்கி எறிகிறார்கள். ஓராண்டுக்குமுன் அந்நிறுவனம் சூழலுக்கு உகந்த காபி குவளைகளைக் கண்டுபிடிக்க முயலும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்குப் பத்து மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிக்கை வெளியிட்டது. ஆனால், இன்றுவரை அவர்களது குவளையின் மீதான கவலை விலகவில்லை.
கண்ணாடியில் இருக்கும் தீர்வு
நம் நாட்டில் எத்தனை குவளைகள் தூக்கி எறியப்படுகின்றன என்பதற்கு கணக்கு எதுவும் இல்லை. ஆனால், பேருந்து நிறுத்தங்களில், நெடுஞ்சாலை ஓரம் உள்ள ஹோட்டல்களில், ரயில்வே தண்டவாளங்களில் காகிதக் குவளைகள் கணக்கற்று இன்றும் சிதறி கிடக்கின்றன. நாம் பத்து மில்லியன் டாலர்களைச் செலவழித்து எதையும் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. நம் கடைக்காரர்களிடம் கண்ணாடிக் குவளைகள் இருக்கின்றன. அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டாலே போதும்.
கண்ணாடிக் குவளை நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியது, உடைந்து போனால் மறுசுழற்சி செய்யக்கூடியது, இயற்கைக்கு அதிகம் தீங்கின்றி உருவாக்கப்படுவது, நம் பண்பாட்டில் ஒட்டி உறவாடியது, நம் தேநீர்க் கடைகள் பயன்படுத்தி, சுத்தப்படுத்திப் பழகியது. இதில் சந்தேகம் கொள்ள எதுவும் இல்லை.
கையில் இருந்தால்
என்னுடைய நண்பர்கள் சிலர் அதிகமாகப் பயணம் செல்லக் கூடியவர்கள். தங்களுடைய கைப்பைகளில் எப்போதுமே ஒரு எவர்சில்வர் டம்ளர், தட்டு, தேக்கரண்டி வைத்திருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களில், ரயில்களில் உணவு பரிமாறப்படும் தூக்கி எறியும் குவளைகள், தட்டுகளைத் தவிர்த்து, இவர்களின் கைப்பையில் உள்ள எவர்சில்வர் பாத்திரங்களிலே உணவை வாங்கிக்கொள்கின்றனர். பயணங்களில் பாத்திரங்களைக் கழுவுவதற்கு தண்ணீர் கிடைக்கிறதா என்று கேட்டால், “கை கழுவும் தண்ணீரில் சிறிது மிச்சம் செய்தால் பாத்திரத்தையும் கழுவிவிடலாம்” என்று அதில் அடங்கியுள்ள எளிமையைப் புரிய வைக்கிறார்கள். இதைப் போன்ற சின்ன சின்ன முயற்சிகளே இந்த பூமியில் நம்மை வெகு காலம் வாழவைக்கும்.
ஞெகிழி என்றாலும், காகிதம் என்றாலும், துணி என்றாலும் பல முறை பயன்படுத்தக்கூடிய பொருட்களின் பயன்பாடே இன்றைய அவசியத் தேவை.
- கட்டுரையாளர், துணிப்பை பிரசாரகர்
தொடர்புக்கு: krishnan@theyellowbag.org