

நம் வாழ்வில் பலரைச் சந்தித்தாலும், ஒரு சிலரே நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்கள், மனதுக்குப் பிடித்தவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். அப்படிப் பட்டவர்களில் ஒருவர் சிவக்குமார். திருவண்ணாமலை அருணகிரி சிறுவர் பூங்காவுக்குச் சென்றிருந்தபோது, கடப்பா கல்லில் பறவைகளை நேர்த்தியாக அவர் வரைந்துகொண்டிருந்தார். அதைக் கண்டு வியந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ``கடப்பா கற்களை எங்கிருந்து வாங்குகிறீர்கள்'' என்று கேட்டேன்.
கலுவிகோடி எனத் தெலுங்கில் அழைக்கப்படும் ஜெர்டான்ஸ் கோர்சர் (Jerdon’s Courser) பறவையைப் பற்றி, கடப்பா மாவட்டத்தில் முன்பு நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அந்த ஆர்வத்தில் அவரிடம் கேட்டேன்.
‘‘கடப்பா மாவட்டத்துல ஒரு இடத்துலதான் இதை வாங்கிட்டு வந்தோம், அங்ககூட ஜெர்டான்ஸ் கோர்சர்னு ஒரு அரிய பறவை இருக்கு’’ என்று குமார் சொன்னார். என்னை வியப்பில் ஆழ்த்திய அந்தப் பதிலின் மூலம்தான், அவர் வெறும் படத்தைப் பார்த்துப் பறவை ஓவியங்களைத் தீட்டுபவர் அல்ல; சிறந்த பறவை ஆர்வலரும்கூட என்பதை உணர முடிந்தது. பேனர் ஓவியராக இருந்து, பறவைகளை வரைபவராக மாறிய சிவக்குமார் வரைந்த ஒவியங்களின் தொகுப்பு இது.
படங்கள்: சிவக்குமார்