

‘வளர்ச்சி' என்ற மந்திரம் நம்மைக் காப்பாற்றிவிடும். அதற்கு அந்நிய முதலீடு முக்கியம் என்று வெளிநாட்டவர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொண்டிருக்கும் சூழலில், 70 ஆண்டுகளுக்கு முன் காந்தி கூறிய கிராமச் சுயராஜ்ஜியம் காற்றோடு கலந்துவிட்ட நிலைதான்.
அவரது வழியை முன்வைத்துக் கிராமச் சுயராஜ்ஜியத்தை வலியுறுத்திய அவருடைய சக செயல்பாட்டாளர் ஜே.சி.குமரப்பாவைப் பற்றி பெரிதாக யாரும் அறிந்திருக்கவில்லை. அவர் முன்வைத்த கொள்கைகளைப் பின்பற்றி இயற்கை வேளாண்மை, நஞ்சில்லா உணவு, இயற்கைசார் சிறு தொழில்கள், கிராம மறுமலர்ச்சி போன்றவையே நமக்குத் தேவையான கொள்கைகள் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது ‘தாளாண்மை மலர்கிறது’ சிற்றிதழ்.
காந்தி-குமரப்பாவின் கொள்கைகளைத் தன் சக்திக்கு இயன்ற அளவில் நடைமுறைப்படுத்திப் பல சிறுதொழில்களை நடத்தி வருகிறது.
அந்த இதழின் ‘தாளாண்மைச் சங்கம்' வாசகர் கூட்டம் திண்டுக்கல் காந்தி கிராமத்தில் சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து ‘குமரப்பாவிடம் கேட்போம்' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது.
"நேரு கூட்டிய திட்டக் கமிஷன் கூட்டத்துக்கு அறிஞர் ஜே.சி.குமரப்பா மாட்டு வண்டியில் சென்றது முதல் பசுமைப் புரட்சிக்கு முன்னோடியான ‘அதிகம் விளைப்போம்' என்ற நேருவின் திட்டத்தை அன்றைக்கே குமரப்பா எதிர்த்ததுவரை பல்வேறு தகவல்களுடன் யாரும் புரிந்துகொள்ளாத அந்த மாமனிதரை எழுத்தாளரும், இயற்கை வேளாண் ஆர்வலருமான பாமயன் நினைவுகூர்ந்தார்.
"நரி, கொக்கை விருந்துக்கு அழைத்து அகன்ற தட்டில் கூழ் பரிமாறியபோது, கொக்கு அதைச் சாப்பிட முடியாமல் தடுமாறுவது போலவே தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் உள்ளன. நகரம் சார்ந்த திட்டமிடுபவர்களும், அதிகாரிகளும் கிராம மக்களின் பிரச்சினைகளையோ, பலம்-பலவீனங்களையோ புரிந்துகொள்ளாமலே கிராமங்களை நகரங்களாக்கத் துடிக்கின்றனர்.
ஆண்டாண்டு காலமாக நம் கிராமங்களில் உள்ள திறமைகளையோ, வளங்களையோ மதிக்காமல் மேலைநாடுகள் போல மாற வேண்டும் என்று திட்டமிடுகிறோம். இயற்கை வளங்களைச் சார்ந்த, கிராமச் சிறுதொழில்களை உருவாக்குவதுதான் இப்போதைய இன்றியமையாத தேவை; குறைந்த முதலீட்டில் ஒரு லட்சம் ரூபாய்க்கு இரண்டு முதல் 4 வேலைகளை உருவாக்கும் சிறுதொழில்களைத் தாளாண்மை சங்கம் நடத்தி வருகிறது" என்று ‘தாளாண்மை மலர்கிறது’ இதழ் ஆசிரியர் பாலாஜி சங்கர் பேசினார்.
திண்டுக்கல் காந்தி கிராமம் அமைப்பின் அதிகாரி ரேவதி, சிறுதானியங்களைப் பதப்படுத்தும் தொழில் நடத்தும் தினேஷ், பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பைச் சேர்ந்த அனந்து ஆகியோர் பேசினர். சமன்வயா அமைப்பைச் சேர்ந்த ராம் "கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்தியதன் அடிப்படையில் ‘ஆர்கானிக்' என்றால் நல்லது என்ற தெளிவு மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அடுத்ததாக உள்ளூர், உள்நாட்டு தயாரிப்பும் பொருட்களும் நல்லவைதான் என்பதைப் பறைசாற்றுவதே நம் அடுத்த வேலை" என்று முத்தாய்ப்பாகப் பேசினார்.
- கட்டுரையாளர்,
இயற்கை விவசாயி
தொடர்புக்கு: info@kaani.org