

சமீபத்தில் மறைந்த பிரபலக் கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தி, ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர் என்பது பலரும் அறியாத அவருடைய பரிமாணங்களில் ஒன்று. சமூகத்தின் சாதி, சமய, சடங்குகளைச் சாடிய அவர், இயற்கையின் மீதான தாக்குதல்களுக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாகப் பெங்களூரில் சுற்றுச்சூழல் தொடர்பாக நடைபெற்ற பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் அவர் கலந்துகொண்டிருக்கிறார். புலி, மரங்கள், ஏரிகள் பாதுகாப்பு உள்படப் பல்வேறு நோக்கங்களுக்காகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து கையெழுத்து இயக்கத்தையும் அவர் நடத்தியுள்ளார்.
சுரகி மலர்கள்
கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும், சாரல் மழையும் சூழ்ந்த பகுதி 'மலை நாடு' எனப்படுகிறது. இங்குள்ள ‘மெலிகே' என்ற கிராமத்தில் பிறந்த அனந்தமூர்த்தி, பால்யக் காலத்தில் மலை நாட்டின் மண் வாசத்துடனே வளர்ந்தார். இப்பகுதியில் அரிதாகப் பூக்கும் சுரகி மலர்கள் அவருடைய மனதையும், சிந்தனையையும் சுண்டி இழுத்திருக்கின்றன. அதனால்தான் தனது சுய சரிதைக்கு ‘சுரகி' எனப் பெயர் சூட்டினார்.
மலை நாட்டின் காற்றில் தவழ்ந்த மணமும் குணமும் தன்னைச் சுற்றி எப்போதும் இருக்க வேண்டுமென அனந்தமூர்த்தி விரும்பினார். அதனால்தான் பெங்களூர் டாலர்ஸ் காலணியில் உள்ள அவரது வீட்டிலும், மைசூரில் உள்ள அவரது ‘அனு' வனத்திலும் மரம், செடி, கொடிகள் சூழ வாழ்ந்தார். ‘அனு' வனத்தில் துளசி முதல் தூதுவளை வரை இல்லாத மூலிகையே கிடையாது என்கிறார் கன்னட எழுத்தாளர் மரளு சித்தப்பா.
தாய்மொழி பெயர்கள்
தாய்மொழி கன்னடம் மீது இருந்த அதீதப் பற்றின் காரணமாகப் பெங்களூர், மைசூர், மங்களூர் போன்ற ஊர்களின் பெயரை ‘பெங்களூரு, மைசூரு, மங்களூரு' என மாற்றுமாறு அரசுக்கு அனந்தமூர்த்தி கடிதம் எழுதினார். அடுத்த 30 நாட்களில் அதற்கான அரசாணை வெளியானது. இதேபோல இயற்கை சார்ந்த கன்னடப் பெயர்களை மீட்டெடுக்க வலியுறுத்திவந்தார்.
கன்னடத்தில் முதன்முதலாகப் பறவைகள், காட்டுயிர்கள் குறித்து ஹரிஷ் ஆர். பட், பிரமோத் ஆகியோர் புத்தகம் எழுதியபோது, 30-க்கும் மேற்பட்ட கன்னடப் பறவை பெயர்களை அனந்தமூர்த்தி நினைவுகூர்ந்து உதவியுள்ளார்.
அணுஉலைக்கு எதிராக
1990-களின் தொடக்கத்தில் வட கர்நாடகத்தில் 'கைகா' அணு மின்நிலையத்துக்கு எதிராகச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் நாகேஷ் ஹெக்டே தலைமையில் தீவிரப் போராட்டங்கள் நடைபெற்றன. எதிர்ப்பு தெரிவித்தவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போது கேரளப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்த அனந்தமூர்த்தி, போராட்டத்துக்குத் தன்னுடைய பங்காக 100 ரூபாயும், வாழ்த்து கடிதத்தையும் துணிச்சலாக அனுப்பி வைத்தார் என்கிறார் நாகேஷ் ஹெக்டே.
2009-ம் ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குதிரேமுக் சரணாலயப் பகுதியில் தங்கம் இருப்பதாகக் கர்நாடக அரசுக்குக் கனிம
வளத் துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்தனர். அதைத் தொடர்ந்து எடியூரப்பா தலைமையிலான அரசு சுரங்கம் தோண்டும் பணிகளைத் தீவிரப்படுத்தியது.
மேற்கு தொடர்ச்சி மலை தொடர் கொள்ளை போவதைத் தடுக்க எடியூரப்பாவைச் சந்தித்த அனந்தமூர்த்தி, ‘அங்குத் தங்கமே இருந்தாலும் தோண்ட வேண்டாமே. மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் வெறும் மலை அல்ல. மலை நாட்டு மக்களின் தெய்வம். அதன் அடிவயிற்றில் குழி பறித்தால் நாட்டுக்கு நல்லதல்ல. மக்களுக்கும் நல்லதல்ல' என வலியுறுத்தினார். சுரங்கத் திட்டங்கள் நிறுத்தப்பட்டன.
இப்படிச் சுற்றுச்சூழல் பாது காப்பிலும் அனந்தமூர்த்தியின் குரல், அழுத்தமாகத் தடம் பதித்துச் சென்றுள்ளது.
அனந்தமூர்த்தி