

அந்தப் பசுமை அங்காடிக்குள் நுழையும்போதே பலவித வாசனைகள் கலந்துவந்து மூக்கைத் துளைக்கின்றன. அனைத்தும் இயற்கை வாசனைகள். உள்ளே பலவகை தானியங்கள், அரிசி வகைகள் பல்வேறு வண்ணங்களில் வரிசையாக அடுக்கப்பட்டிருந்தன.
வண்ணங்களில் மட்டுமல்லாமல், சுவையிலும் சிறப்பாக இருப்பதால்தான் இரண்டு வருடங்களாக வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது 'விதை இயற்கை அங்காடி'.
அடையாறு சிக்னல் அருகே உள்ள இந்த இயற்கை அங்காடிக்கு ஈரோடு, தர்மபுரி பகுதிகளில் உள்ள இயற்கை விவசாயிகளிடம் இருந்து பொருட்கள் நேரடியாக வரவழைக்கப்படுகின்றன. உணவுப் பொருட்களும், இயற்கை மூலிகைப் பொருட்களும் இங்கே கிடைக்கின்றன.
"இயற்கையே உலகின் ஆதாரம். இயற்கை உணவு வகைகளைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற ஆர்வமும், எளிதான வகையிலும் குறைந்த விலையிலும் அவை மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கத்திலும் கடையை ஆரம்பித்தேன். வசம்பு மரத்தில் செய்யப்பட்ட செக்கில் ஆட்டிய எண்ணெய் எங்கள் வாடிக்கையாளர்களிடம் பிரபலம்" என்கிறார் கடையின் உரிமையாளர் மோ. அருண்.
கோதுமைப்புல்லில் தயாரிக்கப்பட்ட 'வீட் கிராஸ் பொடி' உடல் பருமனைக் குறைக்க உதவுகிறது. முறையான உணவு வகைகளுடன் இதை எடுத்துக்கொண்டால் உடல்பருமனை அதிகரிக்கவும் உதவும். பல்பொடி, சீகைக்காய் பொடி போன்ற அழகுப் பொருட்கள் மட்டுமில்லாமல் தூதுவளை தேநீர், நன்னாரி காபி என்று சுவைப்பதற்கும் பல வகைப் பொடிகள் உள்ளன.
விதை இயற்கை அங்காடியின் இணையதளத்தில் அங்கே கிடைக்கும் பொருட்களைத் தெரிந்துகொள்ளலாம். அடையாறு பகுதியில் வீடுகளுக்கு டோர் டெலிவரி செய்யப்படுகிறது. இயற்கை உணவு தயாரிக்கும் முறைகளை இவர்களுடைய ஃபேஸ்புக் பக்கம் தருகிறது.
"இங்கே தினை, வரகு, சிகப்பு அரிசி ஆகியவற்றை வாங்கியிருக்கிறேன். பொங்கல், அடை, இட்லி போன்ற உணவு வகைகளைச் செய்தபோது சுவை ரொம்பவே நல்லா இருந்துச்சு. அதனாலதான் இன்னைக்கு மறுபடியும் வாங்க வந்திருக்கேன்" என்கிறார் வாடிக்கையாளர் ராஜலட்சுமி.
சிறப்பான பொருட்கள்: மூங்கில்அரிசி, எண்ணெய், வீட் கிராஸ் பொடி, சேமியா வகைகள்.
- விதை பசுமை அங்காடி தொடர்புக்கு:
9840698236 / www.vidhaiorganicstore.com