இயற்கையை ரசியுங்கள் - பாரதியார் நினைவு நாள் செப்.11

இயற்கையை ரசியுங்கள் - பாரதியார் நினைவு நாள் செப்.11
Updated on
1 min read

கரிய நிறமான காகம் கா... கா... என்று கத்தும்.

மரக்கிளைகளில், வானவெளியில், அதிகாலைப் பொழுதினில்

காகம் தன் கூட்டத்தாரோடு சேர்ந்தே திரியும்.

நாலாபுறமும் சுதந்திரமாய் பறந்து செல்லும்.

தேவி பராசக்தி விண்ணில் செம்மையான கிரணங்களை

காட்டி சூரியனாய் வந்து உதிப்பாள்.

தென்னை மரக்கிளையில் அமர்ந்திருக்கும் பச்சைக்கிளி

கீச்சுக் குரலில் பாடித் திரியும்.

சின்னஞ்சிறு குருவி விண்ணில் வட்டமடித்திடும்.

பருந்து மெல்ல வட்டமிட்டவாறே நெடுந்தொலைவு சென்று பறக்கும்.

தெருவில் இரை தேடித் திரியும் சேவல் ‘சக்திவேல்' என்று கூவித் திரியும்.

செம்மை ஒளி வீசிப் பகலை வெளிச்சமாக்கிய கதிரவன்

மாலையில் மறைந்துவிடும்.

மயக்கும் மாலை வேளையில் நிலவு தன்

அமுதக் கிரணங்களைப் பொழிய ஆரம்பிக்கும்.

இந்த ரம்மியமான மாலை நேரத்தில், என் அன்பிற்குரியவளும்

உச்சி மாடத்தின் மீது ஏறி வந்து கண்ணுக்கு இனிமை சேர்த்திடுவாள்.

மனமே! வானில் திகழும் மணித்திரளான நட்சத்திரக் கூட்டத்தைக்

கண்டு இன்பம் கொள்வாய்.

நிலவையும், வான் நட்சத்திரங்களையும் கண்ணால் கண்டு மனதால்

உண்டு களிப்பதைவிடவும் வேறொரு செல்வம் உலகினில் உண்டோ?

தென்னை மரக்கீற்றில் ‘சலசல' என்று சத்தமிடும் பூங்காற்றின்

மீது குதிரைச் சவாரி போல ஏறிக்கொண்டு

உலகம் சுற்றி வந்து இயற்கையின் இன்பம் காணுங்கள்.

பண்ணோடு இசைத்துப் பாடிக் களித்திருங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in