

சூரிய ஒளியிலிருந்து பூமியைக் காக்கும் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை மெதுவாக மூடி வருவதாக காரக்பூர் ஐ.ஐ.டி.யின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. தொழிற்சாலை புகை, குளோரோ ஃபுளூரோ கார்பன் போன்றவை அளவுக்கு அதிகமாக வெளியேறுவதால் ஓசோன் படலத்தில் பாதிப்பு ஏற்பட்டன.
இதனால், நேரடியாகப் புவியை வந்தடையும் சூரியனின் புற ஊதா கதிர்களால் உயிரினங்களுக்குப் பல குறைபாடுகள் ஏற்படுவதால், ஆண்டுதோறும் செப்டம்பர் 16-ம் தேதி ‘ஓசோன் படலப் பாதுகாப்பு நாளா’க அறிவிக்கப்பட்டது. மேலும் ஓசோன் படலத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளைக் குறைப்பதாக அனைத்து நாடுகளும் ஒப்புதல் அளித்தன.
இந்நிலையில் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜெயநாரயணன், தனது நாற்பது ஆண்டுக்கால (1979 – 2017) ஆய்வுகளின் மூலம், ஒசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குணமடைந்து வருவதாகக் கண்டறிந்துள்ளார்.
தற்போது ஓசோன் தொடர்பாக ஐ.நா. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘ஓசோன் படலத்தில் ஏற்பட்டிருந்த பாதிப்புகள் மெதுவாகச் சரியாகி வருகின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஓசோன் படலம் முற்றிலும் சரியாகிவிடும். எனவே உலக வெப்பமயமாதலால் வேகமாக உருகிவரும் அண்டார்டிக் பகுதி 2060-ம் ஆண்டுக்குள் பழைய நிலையை அடைந்துவிடும்” எனக் கூறப்பட்டுள்ளது.