சேவல் கொடி 09: வெற்போர் சேவலுக்கான பயிற்சிகள்

சேவல் கொடி 09: வெற்போர் சேவலுக்கான பயிற்சிகள்
Updated on
2 min read

வெற்போர் சேவல்கள் கால்களில் முள் வளரக்கூடிய இயல்புடையவை. இந்த முள்தான் தாக்குவதற்கான ஆயுதம். அப்படித் தாக்குவதற்கோ தாக்கப்படும்போது அந்த அடியைத் தாங்குவதற்கோ சேவல் தன் உடலைத் தயார் செய்வது அவசியம். அதற்கு நல்ல உணவும் பயிற்சியும் அவசியம். சாதாரண நாட்களில் கேழ்வரகு, கம்பு, கோதுமை, சோளம் போன்ற உணவு இவ்வகைச் சேவல்களுக்கு வழங்கப்படும்.

நான்கு மாதத் துக்குப் பின்னர் சேவல்களைத் தனியாகப் பிரித்தெடுக்கின்றனர். இல்லையென்றால் அவை  தன்னுடன் இருக்கும் சேவல்களுடனே ஆதிக்க எண்ணம் காரணமாகச் சண்டையிடும்.

அப்போது இருந்தே அவை நீச்சலுக்கு விடப்பட்டுப் பயிற்சி அளிக்கப்படும். ஏழு மாதங்களுக்கு பிறகு ‘தப்பினி’ விடப்படும். தப்பினி என்பது முதல்முறையாகச் சேவல்களைச் சண்டைக்கு விடுவது. அதன் மூலம் சேவல்காரர்கள் அவற்றின் திறனை அறிவார்கள்.

தினமும் ஒரு மணி நேரம் சேவல்களின் உடலை நீவித்தேய்த்து வலுவடையச் செய்வதற்குச் செலவிடுகின்றனர். சிறிது தண்ணீரை எடுத்து கழுத்து, நெஞ்சு, தாடை, தலை இறக்கை என்று அத்துணை இடத்திலும் பல முறை நீவி விடுவார்கள். இப்படியான பல நாள் பயிற்சிக்குப் பின்னர் அந்த இடம் வலுவடைகிறது. இது போக தினமும் முப்பது  நிமிட நடைப் பயிற்சியும் வழங்கப்படும்.

போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் சேவலுடைய உடல் வலியை நீக்குவதன் பொருட்டும் தயார்படுத்தும் பொருட்டும் காட்டு நொச்சி இலை, விராலி இலை, ஆரெஎஸ்பதி இலை, வேப்பிலை ஆகியவற்றுடன் மஞ்சள் சேர்த்து மூலிகைத் தண்ணீரின் மூலம் உடல் முழுதும் நனைத்து விடுவர்.

போட்டிக்கு 21 நாட்களுக்கு முன்பு இருந்து அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவு வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு 2 அல்லது 3 முட்டைகளில் வெள்ளைக்கரு, பேரீச்சை, சுவரொட்டி (ஈரல்) ஆகியவற்றுடன் உளுந்து, கேப்பை, மிளகு, பாசிப்பயறு, நிலக்கடலை, கொண்டைக்கடலை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை அரைத்துச் சத்துமாவாக வழங்கப்படுகிறது.

அப்படித் தயார் செய்த சேவல்களை 21 நாட்களுக்குப் பின்னர் சண்டைக்கு விடாத பட்சத்தில் அந்தச் சேவல் இணைக் கோழியையே கொன்றுவிடுகிறது. காரணம், அத்துணை நாள் உடல் எடுத்த தினவு சண்டைக்காக உருவேறிய தேகம் அதை நிகழ்த்துவதன் பொருட்டே சமன் செய்யப்படுகிறது.

வெற்போர் சேவல்களுடைய சண்டை, சுமார் ஒன்றரை மணி நேரம் நடக்கிறது. சேவலுடைய வயது அதன் முள்ளை வைத்துக் கணிக்கப்படுகிறது.  உயரம், எடை அடிப்படையில் போட்டி நடத்தப்படுகிறது. முதல் பதினைந்து  நிமிடம் சண்டை முடிந்தவுடன் பதினைந்து  நிமிடம் இடைவேளை அதைத் ‘தண்ணிக்கு எடுப்பது’ என்று கூறுவர்.

இப்படி முதல் தண்ணி முடிந்ததும் அடுத்த பதினைந்து நிமிடம் சண்டை. இதுபோன்று மூன்று சுற்றுகள் அதற்குப்பின் நான்காவது சண்டையுடன் போட்டி முடிக்கப்படும். நல்ல போர் குணத்துடன் பயிற்சி பெற்ற சேவல், போட்டி தொடங்கிய இரண்டொரு நிமிடத்தில் எதிர் சேவலைக்  கொன்றே விடும்.

இதற்கு நடுவில் சேவல் களத்தை விட்டு வெளியே சென்றாலோ, அதனுடைய அலகு மண்ணில் பட்டாலோ சேவல் தோற்றதாகக் கருதப்படும். இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று சேவல்கள் பெரும்பாலும் அதன் உரிமையாளர்களின் குணத்தையே பிரதிபலிக்கின்றன என்பதுதான்.

கட்டுரையாளர், வளர்ப்பு விலங்குகள் ஆய்வாளர்
தொடர்புக்கு: sivarichheart@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in