

வங்கத்தின் ஜெயராமன்
உணவு உற்பத்திக்காகப் புதிய புதிய நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பயன்பாடு பரவலானதால் பாரம்பரிய நெல் ரகங்கள் கிட்டதட்ட அழியும் நிலை வந்தது. பாரம்பரியத்தின் கவனம் கூடியிருக்கும் இந்த நூற்றாண்டில் மரபு நெல் வகைகளைக் காக்கும் போராட்டமும் இந்தியா முழுவதும் பரவலாக நடக்கிறது. தமிழ்நாட்டில் நெல் ஜெயராமன் போல் மேற்கு வங்காளத்தில் அவரோ சக்கரவர்த்தி கிட்டதட்ட 440 பாரம்பரிய நெல் வகையைச் சேகரித்துச் சாதனை படைத்துள்ளார். இதைப் பரவலாக்க, விவசாயிகளிடம் விநியோகித்தும்வருகிறார். இந்தப் பாரம்பரிய நெல் வகை வறட்சி, வெள்ளம் ஆகிய இயற்கை இடர்களைத் தாங்கி வளரக்கூடியவையாக இருக்கின்றன.
விநோதமான விவசாயிகள் போராட்டம்
உத்தரப் பிரதேசத்தில் அலிகார் மாவட்டப் பகுதிகளில் தெருவில் அலையும் மாடுகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கு அரசு ஒரு நடவடிக்கை எடுக்க விசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அதில் முன்னேற்பாடு இல்லாததால் டமொசியா (Tamotia) கிராமத்து விவசாயிகள் மாடுகளைப் பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற அரசுக் கட்டிடங்களுக்கு விரட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த எடல்பூர், கோரை ஆகிய ஊர்களுக்கும் இந்தப் போராட்டம் பரவியுள்ளது. கடந்த புதன்கிழமை வரை இதுபோல் 12 இடங்களில் போராட்டம் நடந்துள்ளது. பால் தருவதை நிறுத்திய பசுக்களை தெருவில் விட்டுவிடுவதால்தான் இது நடக்கிறது என அரசுத் தரப்பு சொல்கிறது. மேலும் மாடுகளை, அரசு கோசாலைகளுக்கு மாற்றிக் கொண்டிருப்பதாகவும் கடந்த இரு வாரங்களுக்குள் 2,000 மாடுகளைக் கோசாலைக்கு மாற்றியுள்ளதாகவும் அரசுத் தர்ப்பு அதிகாரி அசோக் குமார் சொல்கிறார். ஆனால் இந்தப் பணி முழுமையடைய இன்னும் 2 மாதம் பிடிக்கும் என்றும் அதற்கு விவசாயிகளில் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் வேண்டுகோள் விடுக்கிறார்.
கிளைபோசேட்டுக்குத் தடை?
மான்சாண்டோ தயாரிப்பான கிளைபோசேட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் களைக்கொல்லி மருந்து. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய தன்மை இதில் இருப்பதாக உலகச் சுகாதார மையம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இதற்குத் தடை கோரும் போராட்டங்கள் பல்வேறு வகையில் நடந்துவருகின்றன.
பிரெஞ்சின் மஞ்சள் சீருடைப் போராட்டக்காரர்களும் இப்போது கிளைபோசேட்டுக்குத் தடை கோரிப் போராடியுள்ளனர். அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மக்ரோன் இன்னும் மூன்று ஆண்டுகளுக்குள் இதைத் தடைசெய்வதாகக் கடந்த ஆண்டு அறிவித்தார். இந்தக் களைக்கொல்லி, இலங்கை, கெர்முடா, பெல்ஜியம், நெதர்லாந்து, ஐக்கிய அரபு நாடு, சவுதி அரேபியா, குவைத், கத்தார் உள்ளிட்ட சில நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடைசெய்யப்படவில்லை.