

உணவு வகைகளை விரல்களில் எடுத்து ரசித்து ருசித்துச் சாப்பிட்ட காலம் மாறி, இன்றைக்கு ஸ்பூன்களில் சாப்பிடும் பழக்கம் அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் மட்டும் பத்து கோடிக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ஸ்பூன்கள் குப்பையாகச் சேர்கின்றன.
பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையில் பெரிய பொருட்களில் நாம் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் டீஸ்பூன், ஸ்ட்ரா போன்ற சிறிய அளவிலான பிளாஸ்டிக் கழிவுதான் ஆழ்கடலைக் குப்பை தொட்டியாக்கியுள்ளன என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இதனால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
பிளாஸ்டிக் கழிவு, ஆழ்கடல் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித குலத்துக்குமே அச்சுறுத்தல்தான். போர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆழிவைவிடச் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஏற்படும் அழிவு பெரியது. அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் தற்போது நாம் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிலத்தடி நீர் ஆய்வாளர் நாராயண பீசபதி நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் ஸ்பூன்களுக்குப் பதிலாகச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமை ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்துமிக்க ‘எடிபிள் ஸ்பூனை’ கண்டுபிடித்துள்ளார். அதாவது, இந்த ஸ்பூனில் உணவைச் சாப்பிடலாம். பிறகு, அந்த ஸ்பூனையே உணவாகவும் சாப்பிடலாம்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த ஸ்பூன், சர்க்கரை, இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, ஓமம், புதினா, கேரட், துளசி போன்ற ‘ஃப்ளேவர்’களில், விற்பனை செய்யப்படுகின்றன.
இதற்காக நாராயணன், ‘பேக்கீஸ் எடிபிள் கட்லெரி’ என்ற பெயரில் சிறிய அளவிலான தொழிற்கூடம் ஒன்றை அமைத்து, அதில் சுய உதவிக் குழு பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார். ஒவ்வொரு வருடமும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட கரண்டிகளை உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் விற்கிறார். உடலுக்கும் சூழலுக்கும் உகந்த இந்த ஸ்பூன்களை ஆன்லைனில் (http://www.bakeys.com/product/plain-spoons/) வாங்கலாம். 400 ரூபாய்க்கு நூறு கரண்டிகள் கிடைக்கும்.
நாராயண பீசபதியின் சாப்பிடக்கூடிய ஸ்பூன் குறித்து நேஷனல் ஜியகரஃபி சேனல் எடுத்த வீடியோவைக் காண செல்பேசியில் ஸ்கேன் செய்யுங்கள்: